• Thu. Oct 31st, 2024

24×7 Live News

Apdin News

தமிழ் மக்களைத் தேசிய இனமாக ஏற்க வேண்டும்!

Byadmin

Oct 31, 2024


“இனப்பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கில் உருவாக்க வேண்டிய இலங்கைத் தீவின் புதிய யாப்பானது தமிழ் மக்களை இறைமையும் – சுயநிர்ணய உரிமையும் கொண்ட ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.”

– இவ்வாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டது.

கூட்டணியின் பங்காளிக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சித்தார்த்தன் தலைமையில் இந்த நிகழ்வு நடந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உடைவு, தமிழ் மக்களின் பிரதான பிரச்சினைகள் எனப் பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய அந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 8 முக்கிய அம்சங்களை அந்தக் கூட்டணி முன்வைத்துள்ளது.

அவற்றில், “தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொண்டால்தான் இலங்கைத்தீவின் பல்லினத்தன்மையை உறுதிப்படுத்தலாம். எனவே, புதிய யாப்பானது இலங்கைத்தீவின் பன்மைத் தேசியப் பண்பை உறுதிப்படுத்தும் விதத்தில், அதாவது புதிய யாப்பானது இலங்கைத் தீவு ஒரு பன்மைத் தேசிய அரசாகக் கட்டமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான அலகானது ஒன்றிணைந்த வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் பூர்வீகப் பிரதேசங்களை ஒன்றிணைந்ததாக அமைய வேண்டும். குறித்த சுயநிர்ணய அலகுக்குள் வாழும் முஸ்லிம் மக்களின் நியாயமான அரசியல் உரிமைகள் தொடர்பில் திறந்த மனதோடு பேச்சு நடத்த ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி எப்போதும் தயாராக உள்ளது.

மலையகத் தமிழ் மக்களின் தனித்துவமான தேசிய இருப்பை நாம் அங்கீகரிக்கின்றோம். அந்த அடிப்படையில் அவர்களுக்கு நிரந்தரத் தீர்வு வழங்கப்படவேண்டும். மேலும் உடனடிப் பிரச்சினைகளுக்கும் அவர்கள் தொடர்ச்சியாக முன்வைத்துவரும் கோரிக்கைகளுக்கும் தீர்வுகள் வழங்கப்பட வேண்டும்.

இந்தத் தீர்வுகளுக்கான போராட்டத்தில் ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணியானது மலையகத் தமிழர்களோடு தோளோடு தோள் நிற்கும்.

ஈழத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு நடத்திய இன அழிப்பு, போர் குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் யாவும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பன்னாட்டு நீதித்துறைக் கட்டமைப்புக் கூடாக முழுமையாகவும் முறையாகவும் விசாரிக்கப்பட்டு, பரிகார நீதி வழங்கப்படுவதுடன், இன அழிப்புச் செயற்பாடுகளின் மீள்நிகழாமையை உறுதி செய்ய வேண்டும். இதுவரையிலுமான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களின் தொகுக்கப்பட்ட அனுபவமாக, ஐ. நா. பொதுச்செயலாளரின் பொறுப்புக்கூறலை ஐ. நா. பொதுச் சபையிடம் பாரப்படுத்துவதன் மூலம் இன அழிப்புக்கு எதிரான பன்னாட்டு விசாரணைகளை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்த வேண்டும்.

அபிவிருத்தியின் பெயரால் மேற்கொள்ளப்படும் நிலப்பறிப்பைத் தடுக்கவும், நமது வளங்கள் இன அழிப்பின் ஒரு பகுதியாகச் சுரண்டப்படுவதைத் தடுக்கவும் தமிழர் தாயகத்தின் தேசிய வளங்களை இயற்கையின் சமநிலை குலையாத வகையில் வினைத்திறனுடன் பயன்படுத்தவல்ல தற்சார்பு பொருளாதாரக் கட்டமைப்புக்களை நாம் உருவாக்க வேண்டும். இதற்கேற்ற வகையில் தமிழர் தாயகத்தின் பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக்கொண்டு, புலம்பெயர்ந்த தமிழர்களின் முதலீடுகளையும் உள்ளுர் மற்றும் சர்வதேச முதலீடுகளையும் உள்வாங்கும் அதிகாரம் தமிழர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

எமது நாட்டின் கடல் வளங்கள் அழிக்கப்படுவதைத் தடுப்பதற்கும், கடற்றொழிலாளர்கள் சமூகத்தின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்குமான வகையில், 2016ஆம் ஆண்டில் இலங்கை, இந்திய அரசுகள் மேற்கொண்ட கூட்டு இணக்கத்தின் அடிப்படையில் மீண்டும் பேச்சுக்களை ஆரம்பித்தல், 1996ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க மற்றும் 2017 ஆம் ஆண்டின் 11ஆம் இலக்கச் சட்டங்களை உறுதியான முறையில் நடைமுறைப்படுத்துதல், மீனவர் கூட்டுறவுச் சங்கங்களை வலுவாக்குதல், மீனவக் கிராமங்களிலிருந்து படைத் தரப்பினர் வெளியேறுதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் அம்மக்களின் பாதுகாப்பும் வாழ்வாதாரங்களும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

ஒரு நிரந்தர தீர்வை கண்டடைவதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்கத்தோடும் – தமிழர்களின் இருப்பைப் பாதுகாக்கும் நோக்கத்தோடும், போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கென பன்னாட்டு சமூகத்தின் மேற்பார்வையின் கீழ் விசேட இடைக்காலப் பாதுகாப்பு ஏற்பாடு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.” – என்று குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் யாழ். மாவட்ட வேட்பாளர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம், பா.கஜதீபன், சி.வேந்தன், சசிகலா ரவிராஜ், குருசுவாமி சுரேந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

By admin