• Wed. Apr 16th, 2025

24×7 Live News

Apdin News

தமிழ் வருட பிறப்பு: திருப்பரங்குன்றம் கோயில் நிலத்தில் பொன் ஏர் உழவு செய்த விவசாயிகள் | Farmers ploughing the Thiruparankundram temple land

Byadmin

Apr 15, 2025


மதுரை: தமிழ் வருடம் மற்றும் சித்திரை மாதப் பிறப்பை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் நேற்று கோயில் நிலத்தில் விவசாயிகள் 4 ஏரில் 8 மாடுகள் பூட்டி பாரம்பரிய முறைப்படி பொன்னேர் உழவு செய்தனர். தமிழ் வருடமான குரோதி வருடம் முடிந்து நேற்று விசுவாசுவ வருடம் பிறந்தது.

தமிழ் வருடப் பிறப்பு மற்றும் சித்திரை மாதப் பிறப்பை முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் 7 கண்மாய் விவசாயிகள் முருகன் கோயில் முன்பு தார்க்குச்சிகளை வைத்து வழிபட்டனர். பின்னர் பூச்சூடிய தார்க்குச்சிகளை கையில் ஏந்தியவாறு கிரிவலம் சென்று மலைக்கு பின்புறமுள்ள கோயில் நிலங்களுக்கு சென்றனர். அங்கு 8 மாடுகள் பூட்டிய 4 ஏர் கலப்பைகள் மூலம் பொன்னேர் உழுதல் என்னும் பாரம்பரிய முறைப்படி விவசாயிகள் நிலத்தை உழுது விவசாயப் பணிகளை தொடங்கினர்.

பின்னர் திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறமுள்ள கல்வெட்டு குகைக் கோயில் வளாகத்தில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுடன் கூடி ஆலோசனை செய்தனர். இதில் திருப்பரங்குன்றத்திலுள்ள பானாங்குளம் கண்மாய், செவ்வந்திகுளம் கண்மாய், ஆரியன்குளம் கண்மாய், தென்கால் கண்மாய், சேமட்டான் கண்மாய், குறுக்கிட்டான் கண்மாய், சூறாவளிக்குளம் கண்மாய் உள்ளிட்ட 7 கண்மாய் விவசாயிகள் கலந்து கொண்டனர்.



By admin