• Mon. Jan 13th, 2025

24×7 Live News

Apdin News

தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் வீதியை புனரமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை

Byadmin

Jan 12, 2025


திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் உள்ள தாயிப் நகர் கோயிலடி, வைத்தியசாலை வீதி சீரின்றி மோசமான நிலையில் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அவ்வீதியானது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தின்போது அபிவிருத்தி செய்யப்பட்டது.

அப்போது அவ்வீதியில் தார் காபட் இடப்பட்டபோதும் வீதியின் ஒரு பகுதி பாரிய குன்றும் குழியுமாக காட்சியளிக்கிறது.

அத்துடன் அண்மையில் ஏற்பட்ட கன மழை காரணமாக அவ்வீதியின் சில பகுதிகள் உடைந்து மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வீதியூடாக போக்குவரத்தில் ஈடுபடுவது கடும் சிரமமாக உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

சுமார் 4 கிலோ மீற்றர் தூரம் கொண்ட அவ்வீதி ஊடாக தினமும் பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணித் தாய்மார், அரச ஊழியர்கள் உட்பட பலரும் பயணித்து வருகின்றனர்.

வீதியில் காபட் இடப்பட்டபோதிலும் திட்டமிடப்படாத அபிவிருத்தியால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.

வீதி அபிவிருத்தி அதிகார சபை மூலமாக மேற்கொள்ளப்பட்ட அவ்வீதி புனரமைப்பு தொடர்பான விடயங்கள் தம்பலகாமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முன்னாள் தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் எச். தாலிப் அலியால் முன்வைக்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் ஒருவர், குறித்த வீதியில் சிறிய பாலமொன்று அமைக்கப்பட வேண்டும் என்றார்.

பல வருடகாலமாக இந்த சபை பொழுதுபோக்காக இயங்கிவருவது வருத்தமளிக்கிறது என்றும் வீதி தொடர்பான பிரச்சினைகளுக்கு புதிய தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் விரைவில் தீர்வு காண வேண்டும் என்றும் அவ்வீதியை பயன்படுத்தும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

By admin