- எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
-
தரங்கம்பாடியில் அமைந்துள்ள டேனிஷ் கோட்டை 400 ஆண்டுகளைக் கடந்தும் உறுதியாக நிற்கிறது. இந்தக் கோட்டை எதற்காக கட்டப்பட்டது?
தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரையில், மயிலாடுதுறையில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் அமைந்திருக்கிறது துறைமுக நகரமான தரங்கம்பாடி. சங்க காலத்திலேயே துறைமுக நகரமாக விளங்கிய இந்தப் பகுதி பிறகு தனது முக்கியத்துவத்தை இழந்து, 16, 17ஆம் நூற்றாண்டுகளில் மீண்டும் முக்கியமான வர்த்தகத் துறைமுகமானது.
14ஆம் நூற்றாண்டுக்கு முன்பாக இந்தப் பகுதி சடங்கன்பாடி என அழைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு ஆதாரமாக தரங்கம்பாடியில் உள்ள மாசிலாமணிநாதர் கோவிலில் குலசேகர பாண்டியனின் 37வது ஆட்சியாண்டு (கி.பி. 1,305) கல்வெட்டு ஒன்று இருப்பதை சுட்டிக்காட்டுகிறார் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மணல்மேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வரலாற்றுத் துறைத் தலைவர் ப. கலைச்செல்வன். “சடங்கன் பாடியான குலசேரன் பட்டினத்து உடையார் மணி வன்னீஸ்வர முடையார்க்கு” என்று தொடங்குகிறது அந்தக் கல்வெட்டு.
இதே கோவிலில் தஞ்சை நாயக்க மன்னரான அச்சுதப்ப நாயக்கரின் 1614ஆம் ஆண்டைச் சேர்ந்த முற்றுப் பெறாத கல்வெட்டிலும் ‘சடங்கன்பாடி’ என்றே இந்தப் பகுதி குறிப்பிடப்பட்டிருக்கிறது.