• Fri. Jan 17th, 2025

24×7 Live News

Apdin News

தருணம் | திரைவிமர்சனம்

Byadmin

Jan 17, 2025


தயாரிப்பு : ஜென் ஸ்டுடியோஸ்

நடிகர்கள் : கிஷன் தாஸ், ஸ்மிருதி வெங்கட் ,பால சரவணன், ராஜ் ஐயப்பா, கீதா கைலாசம் மற்றும் பலர்

இயக்கம் : அரவிந்த் சீனிவாசன்

மதிப்பீடு : 2.5 / 5

‘தேஜாவு’ எனும் திரில்லர் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் அரவிந்த் சீனிவாசன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மற்றொரு திரில்லர் ஜேனரிலான திரைப்படம் தான் ‘தருணம்’. பொங்கல் திருநாளான இன்று வெளியாகும் இந்தத் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

கதையின் நாயகனான கிஷன் தாஸ் தேசிய துணை ராணுவ படை பிரிவில் அதிகாரியாக பணியாற்றுகிறார். பணியில் ஈடுபட்டிருக்கும் போது கவன குறைவு செயல்பாட்டின் காரணமாக பணியிலிருந்து இடை நீக்கம் செய்யப்படுகிறார். மேலும் இது தொடர்பான துறை ரீதியான விசாரணையையும் எதிர்கொண்டு வருகிறார். இந்த தருணத்தில் அவருடைய தாயாரின் வற்புறுத்தலுக்கு இணங்க திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவிக்கிறார். அதன் பிறகு சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஸ்மிருதி வெங்கட்டை ஒரு திருமண நிகழ்வில் தற்செயலாக சந்திக்கிறார்.

அந்த சந்திப்பு அவர்களுக்கு இடையே நட்பாகி, காதலாகவும் வளர்கிறது. பெற்றோர் சம்மதத்துடன் அவரை திருமணம் செய்து கொள்ள திட்டமிடுகிறார்கள்.  திருமண நிச்சயதார்த்தம் நடைபெறும் திகதிக்கு முதல் நாள் ஸ்மிருதி வெங்கட் எதிர்பாராத விதமாக அவருடைய பக்கத்து வீட்டில் வசிக்கும் இளைஞரை எதிர்பாராத தருணத்தில் கொலை செய்கிறார். அந்தத் தருணத்தில் அங்கு கிஷன் தாஸ் வருகிறார். இருவரும் இணைந்து அந்த கொலையை மறைக்க திட்டமிடுகிறார்கள். இதில் அவர்கள் வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பதும், அந்த கொலைக்கான பின்னணி குறித்தும் , அந்தக் கொலையை செய்தது யார்? என்பது குறித்தும் விவரிப்பது தான் படத்தின் கதை.

முதல் பாதியில் சுவாரசியமில்லாமல் செல்லும் திரைப்படம்.. இரண்டாம் பாதியில் வேகம் எடுக்கிறது. பார்வையாளர்கள் எளிதில் யூகிக்க முடியாத காட்சிகளும், உச்சகட்ட காட்சியில் சுவாரசியமான திருப்பமும் வைத்து ரசிகர்களை ஆறுதல் படுத்துகிறார் இயக்குநர்.

முதல் பாதியை சற்று சிரமத்துடன் ( செல்போன், பொப்கார்ன் உதவியுடன்) கடந்து விட்டால்.. இரண்டாம் பாதி பார்வையாளர்களுக்கு உற்சாகத்தை தரும்.

திருமணத்தில் இணையவிருக்கும் தம்பதிகளுக்கு இடையூறாக இருக்கும் சடலத்தை அப்புறப்படுத்துவதற்காக காத்திருக்கும் தருணங்கள் தான் படத்தின் தலைப்பு. கதைக்கு பொருத்தமாக இருந்தாலும்.. பக்கத்து அறையில் ஒரு பிணத்தை வைத்துக் கொண்டு தம்பதிகள் தங்கள் அன்பை பரிமாறிக் கொள்வது நெருடலாக இருக்கிறது. கொலையை மறைப்பதற்காக தடயங்களை உருவாக்குவதில் புத்திசாலித்தனம் இருந்தாலும் லாஜிக் மீறல்களும் உண்டு.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் கிஷன் தாஸ் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முடிந்தவரை நியாயம் செய்திருக்கிறார். இருந்தாலும் பார்வையாளர்களிடத்தில் அந்த கதாபாத்திரம் குறித்த திரை சித்தரிப்பும், கிஷன் தாஸின் பங்களிப்பும் போதாமையால் தள்ளாடுகிறது.

கதையின் நாயகியாக நடித்திருக்கும் ஸ்மிருதி வெங்கட்- தன்னுடைய அனுபவமிக்க நடிப்பால் ரசிகர்களை எளிதாக கவர்கிறார்.

பால சரவணன் சில காட்சிகளில் தோன்றினாலும் புன்னகைக்க வைக்கிறார்.  வில்லனாக நடித்திருக்கும் ராஜ் ஐயப்பா இயக்குநர் சொன்னதை கச்சிதமாக செய்திருக்கிறார்.

முதல் பகுதியை விட இரண்டாம் பகுதி காட்சிகளில் ஒளிப்பதிவாளரின் பங்களிப்பு நிறைவை வழங்குகிறது. படத்தொகுப்பில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால்.. பார்வையாளர்களுக்கு ஏற்படும் சில குழப்பங்களும் தவிர்க்கப்பட்டிருக்கும். பின்னணி இசை சில காட்சிகளை உயிர்பிக்கிறது.

தருணம் – முதல் பாதி வேஸ்ட் .. இரண்டாம் பாதி பெஸ்ட்..

The post தருணம் | திரைவிமர்சனம் appeared first on Vanakkam London.

By admin