படக்குறிப்பு, வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு, புகார்தாரரை அவர் உடலை அடக்கம் செய்ததாகக் கூறும் 17 இடங்களுக்கு அழைத்துச் சென்றது.கட்டுரை தகவல்
கர்நாடகாவில் தர்மஸ்தலா வழக்கை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு, கோவில் நகரமான தர்மஸ்தலாவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான சிறுமிகள், பெண்கள் மற்றும் ஆண்களை சட்டவிரோதமாக அடக்கம் செய்ததாகக் கூறிய முன்னாள் துப்புரவுத் தொழிலாளியை கைது செய்துள்ளது.
பொய் சாட்சியம் அளித்த குற்றச்சாட்டின் பேரில் இந்த நபர் கைது செய்யப்பட்டதாக சிறப்பு விசாரணைக் குழு வட்டாரங்கள் பிபிசி இந்தியிடம் தெரிவித்தன.
மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்ட அந்த நபர், அங்கிருந்து பத்து நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த முன்னாள் துப்புரவுப் பணியாளர் காவல்துறை முன் புகார்தாரராகவும் சாட்சியாகவும் ஆஜரானார்.
இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 183 இன் கீழ் சாட்சியம் அளித்த பிறகு, சாட்சி பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது.
தனது குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த, இந்த முன்னாள் துப்புரவு பணியாளர் ஒரு மண்டை ஓடு மற்றும் எலும்புகளின் எச்சங்களை நீதிபதி முன் சமர்ப்பித்தார். இதன் மூலம், துப்புரவு பணியாளர் தனது கூற்றுகளை உண்மை என்று நிரூபிக்க முயன்றார்.
காவல்துறையில் அளித்த புகாரை நியாயப்படுத்த, 1995 முதல் 2014 வரை இறந்த உடல்களை அடக்கம் செய்த இடத்திற்கு தான் சென்றதாக அந்த நபர் கூறியிருந்தார்.
மேலும் தனது மனசாட்சியைத் திருப்திப்படுத்த இதைச் செய்ததாகவும் அவர் கூறினார்.
பொய் சாட்சியம் அளிப்பதற்கு என்ன தண்டனை?
பட மூலாதாரம், UGC
படக்குறிப்பு, புகார்தாரர் தலை முதல் கால் வரை கருப்பு நிற உடையணிந்து சாட்சியமளிக்க நீதிபதி முன் ஆஜரானார்.
கடந்த சில நாட்களாக நடந்த தீவிர விசாரணைக்குப் பிறகு, சிறப்பு விசாரணைக் குழு அந்த நபரைக் கைது செய்துள்ளது.
“அவர் கொண்டு வந்த மண்டை ஓடு மற்றும் எலும்பின் எச்சங்கள், அவர் உடல்களை புதைத்ததாகக் கூறிய இடங்களிலிருந்து எடுக்கப்பட்டவை அல்ல”என்று ஒரு அதிகாரி கூறினார்.
அந்த நபர் பெண்ணுடையது எனக் கூறிய மண்டை ஓடு, உண்மையில் ஒரு ஆணுடையது. துப்புரவுப் பணியாளர்கள் ஆதாரமாக கொண்டு வந்த அந்த மண்டை ஓட்டின் தடயவியல் பரிசோதனையில், அது ஆணுடையது என்பது உறுதியாகியுள்ளது என மற்றொரு அதிகாரி குறிப்பிட்டார்.
“நீதித்துறை நடவடிக்கையில் தெரிந்தே பொய்யான சாட்சியத்தை அளிப்பவர் அல்லது விசாரணையின் போது பயன்படுத்தக்கூடிய வகையில் பொய்யான சாட்சியங்களைத் தயாரிப்பவர், ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் வரை அபராதமும் பெறலாம்” என இந்திய நீதிச் சட்டத்தின் பிரிவு 229 இன் கீழ் உள்ள விதி கூறுகிறது.
“துணைப்பிரிவு (1) இல் குறிப்பிடப்பட்ட வழக்குகளைத் தவிர, வேறு எந்த வழக்கிலும் யாராவது தெரிந்தே பொய்யான சாட்சியத்தை அளித்தாலோ அல்லது உருவாக்கினாலோ, அவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் ஐந்தாயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படலாம்”
இந்த முன்னாள் துப்புரவுத் தொழிலாளி ஜூலை 3ஆம் தேதி தர்மஸ்தாலா காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது தலை முதல் கால் வரை மூடப்பட்ட வகையில் அவர் உடை அணிந்திருந்தார்.
பின்னர், அவர் மாஜிஸ்திரேட் முன் ஆஜராகி, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 183 இன் கீழ் தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார்.
புகார்தாரராகவும், சாட்சியாகவும் இருந்த அவரை , அவர் உடல்களை புதைத்ததாகக் கூறிய 17 இடங்களுக்கு எஸ்ஐடி (SIT) குழு அழைத்துச் சென்றது.
அந்த இடங்களில் ஆறாவது மற்றும் பதினொன்றாவது இடங்களுக்கு அருகில் ‘சில எலும்புக்கூடு எச்சங்கள்’ கண்டுபிடிக்கப்பட்டன. 13வது இடத்தில் நிலத்துக்கு அடியில் ஆய்வு செய்ய நிலத்தில் ஊடுருவும் ரேடார் பயன்படுத்தப்பட்டது, ஆனால் அங்கு எதுவும் கிடைக்கவில்லை.
பாஜக என்ன சொல்கிறது?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் உள்ள ஸ்ரீ மஞ்சுநாத சுவாமி கோவில்
கடந்த வாரத்தில், எதிர்க்கட்சியான பாஜக பெங்களூருவிலிருந்து தர்மஸ்தலா வரை பேரணி நடத்தி, “இந்து மதத் தலத்திற்கு எதிரான அவதூறு பிரச்சாரம்” எனக் கூறி தனது எதிர்ப்பை பதிவு செய்தது.
கட்சியின் மாநிலத் தலைவர் பி.ஒய். விஜயேந்திரா, பிற தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் சேர்ந்து, ஸ்ரீ க்ஷேத்ர மஞ்சுநாதசுவாமி கோவிலின் அதிகாரியையும், ராஜ்யசபா எம்பி வீரேந்திர ஹெக்டேயையும் சந்தித்து, தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.
பிபிசியிடமும் ஒரு செய்தி நிறுவனத்திடமும் பேசிய வீரேந்திர ஹெக்டே, புகார்தாரரும் சாட்சியுமான அந்த நபரின் குற்றச்சாட்டுகள் எந்த ஆதாரமும் இல்லாதவை என்றும், மக்களின் நலனுக்காக பல துறைகளில் சிறப்பான சேவையை வழங்கிய அமைப்பின் நற்பெயரை களங்கப்படுத்துவதே அவர்களின் நோக்கம் என்றும் கூறினார்.
அரசாங்கம், சிறப்பு புலனாய்வு குழுவுக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளது என இந்த வாரம் சட்டமன்றத்தில் பேசியபோது தெரிவித்த மாநில உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா,
“விசாரணைக்குப் பிறகு, புகார்தாரரும் சாட்சியுமான அந்த நபர் குறிப்பிட்ட இடங்களில் எப்போது தோண்டத் தொடங்குவது என்பதை சிறப்பு புலனாய்வு குழு தான் முடிவு செய்யும்” என்றும் கூறினார்.
ஊடகங்களுக்கு பேட்டியளித்த ஜி. பரமேஸ்வரா, சிறப்பு விசாரணை குழுவின் பணி விசாரணை முடியும் வரை தொடரும் என்றார்.
மேலும், “இது ஒரு சதித்திட்டமாக இருந்தாலும், விசாரணை முடியும் வரை நாம் காத்திருக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டார்.
படக்குறிப்பு, கர்நாடகாவின் தர்மஸ்தலத்தில் சட்டவிரோதமாக உடல்கள் புதைக்கப்படுவதாகக் கூறி ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஜூலை 3-ஆம் தேதி, அடையாளம் தெரியாத ஒருவர், 1998 முதல் 2014 வரை தர்மஸ்தலா என்ற புனிதத் தலத்தில் துப்புரவுப் பணியாளராக வேலை பார்த்தபோது, ஒரு செல்வாக்கு மிக்க குடும்பம் மற்றும் அவர்களது ஊழியர்களின் உத்தரவின்படி நூற்றுக்கணக்கான உடல்களை புதைத்ததாகக் கூறினார்.
பல பெண்களும், சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டதாகவும், அவர்களது உடல்களைப் புதைத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
அப்போது, தனது மேலதிகாரிகள் கொலை மிரட்டல் விடுத்ததால் தான் இத்தனை வருடங்களாக அமைதியாக இருந்ததாக புகார் அளித்தவர் கூறினார்.
ஜூலை 19-ஆம் தேதி, இந்த விவகாரத்தை விசாரிக்க கர்நாடக அரசு ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்தது.
புகார்தாரரின் உதவியுடன் அடையாளம் காணப்பட்ட 13 இடங்களில் தோண்டும் பணியை அந்த குழு மேற்கொண்டது.