படக்குறிப்பு, வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு, புகார்தாரரை அவர் சடலங்களை புதைத்ததாகக் கூறிய 17 இடங்களுக்கு அழைத்துச் சென்றது.கட்டுரை தகவல்
தர்மஸ்தலா வழக்கில், சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT), முன்னாள் துப்புரவுத் தொழிலாளி சி.என். சின்னையா மற்றும் அவருடன் தொடர்புடைய ஐந்து பேருக்கு எதிராக 4,000 பக்கங்கள் கொண்ட அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இவர்கள் மீது, ‘பாலியல் வன்முறை மற்றும் கொலைக்குப் பிறகு பெண்களின் சடலங்களை சட்டவிரோதமாகப் புதைத்ததாக’ பொய்க் கதைகளை உருவாக்கியது மற்றும் போலி சாட்சிகளை உருவாக்கிய சதி ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
நுட்பமாகப் பார்த்தால் இந்த 4,000 பக்க அறிக்கை, ஆதாரமற்ற வழக்குகள் மற்றும் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதில் இருந்து நீதிமன்ற நடைமுறைகளைப் பாதுகாப்பதற்காக பிஎன்எஸ் சட்டத்தின் பிரிவு 215இன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட புகாராகக் கருதப்படுகிறது.
சி.என். சின்னையா தவிர, கிரிஷ் மட்டன்னவர், மகேஷ் ஷெட்டி திமரோடி, டி. ஜெயந்த், விட்டல் கௌடா, சுஜாதா பட் ஆகியோரின் பெயர்களும் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
இவர்கள் மீது போலி சாட்சிகளை உருவாக்கியது, போலி ஆவணங்கள் தயாரித்தது, மற்றும் பிற சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி சிறப்புப் புலனாய்வுக் குழு கடந்த வாரம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.
இந்த வழக்குடன் தொடர்பில்லாத பெயர் வெளியிட விரும்பாத கர்நாடகாவின் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் பிபிசி ஹிந்திக்கு அளித்த பேட்டியில், “நீதிமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்துவிட்டுப் பொய் சொல்வது சிறிய குற்றம் அல்ல. இது ஒரு தீவிரமான குற்றமாகக் கருதப்படுகிறது” என்றார்.
வழக்கின் பின்னணி என்ன?
கடந்த ஜூலை 3ஆம் தேதி, சின்னையா பெல்தங்கடி என்பவர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், தான் ஒரு செல்வாக்குமிக்க குடும்பம் மற்றும் அவர்களின் ஊழியர்களுடைய அறிவுறுத்தலின் பேரில் நூற்றுக்கணக்கான சடலங்களைப் புதைத்ததாகக் கூறியிருந்தார்.
கடந்த 1995 முதல் 2014க்கு இடையே புதைக்கப்பட்ட இந்த சடலங்களில், பல பெண்கள் பாலியல் வன்முறை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டவர்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பேசுபொருளானது.
போலீஸ் புகாரைத் தொடர்ந்து, அவர் ஒரு நீதிபதி(magistrate) முன்னிலையிலும் வாக்குமூலம் அளித்தார். தனது கூற்றை உறுதிப்படுத்த, அவர் ஒரு மண்டை ஓட்டை நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்தார்.
பட மூலாதாரம், UGC
படக்குறிப்பு, புகார்தாரர் தலை முதல் கால் வரை கருப்பு நிற உடையணிந்து சாட்சியமளிக்க நீதிபதி முன் ஆஜரானார்.
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தனது மனதின் பாரத்தைக் குறைக்கவே கர்நாடகாவின் தெற்கு கன்னட மாவட்டத்தில் உள்ள தர்மஸ்தலாவுக்கு வந்ததாக அவர் கூறினார்.
அவர் இந்தக் குற்றச்சாட்டை மதத் தலமான தர்மஸ்தலா குறித்து தெரிவித்ததால் இது தொடர்ந்து தலைப்புச் செய்தியானது.
இந்த இடத்தில், இந்தியா முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் புகழ்பெற்ற மஞ்சுநாத சுவாமி கோவில் உள்ளது.
விசாரணையில் என்ன நடந்தது?
பெண்களின் சடலங்களைப் புதைத்ததாக சின்னையா கூறிய இடங்களுக்கு சிறப்புப் புலனாய்வுக் குழு அவரை அழைத்துச் சென்றது.
அவர் உறுதிப்படுத்திய 14க்கும் மேற்பட்ட இடங்கள் மேஜிஸ்திரேட்கள் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டன. சில இடங்களில் இருந்து மனித எலும்புக்கூடு எச்சங்களை விசாரணைக் குழு கண்டுபிடித்தது. அவை தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டன.
இதையடுத்து, ஆகஸ்ட் 23ஆம் தேதி பொய் சாட்சியம் அளித்த குற்றச்சாட்டில் சின்னையாவை சிறப்புப் புலனாய்வுக் குழு கைது செய்தது.
தடயவியல் சோதனையில், அவர் நீதிமன்றத்தில் மேஜிஸ்திரேட் முன் “ஒரு பெண்ணுடையது” என்று காண்பித்த மண்டை ஓடு உண்மையில் ஒரு பெண்ணுடையது அல்ல என்று தெரிய வந்தது.
இரண்டு மருத்துவமனைகளில் (ஒரு அரசு மருத்துவமனை மற்றும் ஒரு தனியார் மருத்துவமனை) நடத்தப்பட்ட தடயவியல் சோதனையில், அது ஓர் ஆணின் மண்டை ஓடு என்று கண்டறியப்பட்டது. பின்னர், தனக்கு அந்த மண்டை ஓட்டைத் தனது கூட்டாளி ஒருவரே கொடுத்ததாக அவர் கூறினார்.
படக்குறிப்பு, கர்நாடகாவின் தர்மஸ்தலாவில் சட்டவிரோதமாக சடலங்களைப் புதைத்ததாகக் கூறி ஒரு நபர் ஏற்படுத்தினார்.
சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கை
வியாழக் கிழமையன்று, சிறப்புப் புலனாய்வுக் குழு கூடுதல் சிவில் நீதிபதி மற்றும் முதல் வகுப்பு நீதித்துறை நடுவர் (Judicial Magistrate) சி.எச். விஜேந்திராவின் நீதிமன்றத்தில் ஒரு புகாரைத் தாக்கல் செய்தது.
இப்போது, போலி ஆதாரங்களைச் சமர்ப்பித்தது, ஆதாரங்களைத் திரித்தது மற்றும் பிற குற்றங்கள் தொடர்பான இந்த அறிக்கையை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
சின்னையா மற்றும் அவரது கூட்டாளிகள், சின்னையாவின் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ள நிலையில், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விசாரணைக்காக சிறப்புப் புலனாய்வுக் குழு அளித்த நோட்டீஸுக்கு எதிராக கிரிஷ் மட்டன்னவர் மற்றும் பிற குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
கர்நாடக உயர் நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி அமர்வு ஆரம்பத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணைக்குத் தடை விதித்தது, ஆனால் நவம்பர் 12 அன்று அந்தத் தடை நீக்கப்பட்டது.
கடந்த வாரம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், புகார்தாரர் (சின்னையா) அவரது ஐந்து கூட்டாளிகளின் முழு கட்டுப்பாட்டில் இருந்தார் என்று சிறப்புப் புலனாய்வுக் குழு கூறியது.
அரசுத் தரப்பில் வழக்குடன் தொடர்புடைய, பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் பிபிசி ஹிந்திக்கு அளித்த பேட்டியில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருப்பது முதல் அறிக்கைதான் என்றும், மற்ற இடங்களில் விசாரணை முடிந்த பிறகு ஒரு துணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் கூறினார்.
ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில், சிறப்புப் புலனாய்வுக் குழு தனது விசாரணையில் பங்கலேகுட்டே மலைப் பகுதிகளில் தோண்டியபோது, அங்கிருந்து ஐந்து மண்டை ஓடுகளும் மேலும் சில மனித எச்சங்களும் மீட்கப்பட்டன.