• Tue. Mar 11th, 2025

24×7 Live News

Apdin News

தர்மேந்திர பிரதானுக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டம் – நடந்தது என்ன? | DMK members protest across TN against Union minister Dharmendra Pradhan explained

Byadmin

Mar 10, 2025


சென்னை: தமிழக எம்.பி.க்களை ‘அநாகரிகமானவர்கள்’ என நாடாளுமன்றத்தில் கடுமையாக விமர்சித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

சென்னை மயிலாப்பூரில் எம்எல்ஏ மயிலை வேலு தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேப்பாக்கம் பகுதி திமுக சார்பில் சிந்தாதிரிப்பேட்டையிலும், தொடர்ந்து ஆழ்வார்ப்பேட்டை, சைதாப்பேட்டையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. திருவல்லிக்கேணியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தர்மேந்திர பிரதானின் உருவபொம்மையை எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை சந்திப்பு அருகே கட்சியின் மாநகர செயலாளர் ரகுபதி தலைமையில் திமுகவினர் 150-க்கும் மேற்பட்டோர் திரண்டு மத்திய அமைச்சரின் உருவ பொம்மையை எரித்து முழக்கங்களை எழுப்பினர். தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் தலைமையில் பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தருமபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் பழனியப்பன் தலைமையில் பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் அருகிலும், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட அவைத்தலைவர் தட்ர அள்ளி நாகராஜ் தலைமையில் கிருஷ்ணகிரி ரவுண்டானாவிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மதுரையில் மாநகர இளைஞரணி துணை செயலாளர் மூவேந்தன் தலைமையில் பெரியார் பேருந்து நிலையம் அருகே மத்திய அமைச்சரின் உருவ பொம்மையை எரித்து, கண்டன முழக்கங்களை எழுப்பினர். விழுப்புரத்தில் மத்திய மாவட்ட திமுக சார்பில் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடந்தது. கடலூர் மாநகர திமுக செயலாளர் கே.எஸ்.ராஜா தலைமையில் கடலூர் பாரதி சாலையில் மத்திய அமைச்சரின் உருவ பொம்மையை எரித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சார்பில் பாளையங்கோட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்திலும் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. தூத்துக்குடியில் தர்மேந்திர பிரதான், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரின் உருவப்படங்களை கிழித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

பேசியது என்ன? – நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு திங்கள்கிழமை தொடங்கியது. தமிழகத்துக்கு கல்வி நிதி மறுப்பு விவகாரம் குறித்து திமுக எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுகிறது என்பது தவறானது. தமிழக மாணவர்களை திமுக தவறாக வழிநடத்தி அரசியல் செய்கிறது. தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. தமிழக எம்.பி.க்கள் ஜனநாயகமற்றவர்கள், அநாகரிகமானவர்கள்’ என்று தெரிவித்தார்.

இதையடுத்து, அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்து, நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். அதன்பின், மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான், ‘நான் தமிழக எம்.பி.க்களை தவறாக பேசவில்லை. எனினும் நான் பேசியது புண்படுத்தி இருந்தால், எனது வார்த்தைகளை திரும்ப பெற்று கொள்கிறேன்’ என்று தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின் கண்டிப்பு: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி தனக்கு எழுதிய கடிதத்தை பதிவிட்டு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும். தமிழகத்தின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழக எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா?

தமிழக மக்களை அவமானப்படுத்துகிறீர்கள். பிரதமர் நரேந்திர மோடி இதனை ஏற்கிறாரா, தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கையைத் தமிழக அரசு அனுப்பிய பிஎம் ஸ்ரீ புரிந்துணர்வு ஒப்பந்தம் முற்றிலுமாக நிராகரித்து விட்டது என எனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே?

பிரதான் அவர்களே, நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம். உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல. நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது. தமிழக மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.



By admin