புதுடெல்லி: தமிழகத்தில் தற்காலிக பொறுப்பு டிஜிபியை நியமித்தது ஏன் என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், நிரந்தர டிஜிபியை விரைந்து நியமிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க யுபிஎஸ்சி மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவி்ட்டுள்ளனர்.
இதுதொடர்பாக மனித உரிமைகள் செயற்பாட்டாளரான மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹென்றி திபேன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அவமதிப்பு வழக்கில், தமிழகத்தில் டிஜிபியாக பதவிவகித்த சங்கர் ஜிவாலின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டது. அவரது பதவிக்காலம் முடிவடைவதற்கு 3 மாதங்களுக்கு முன்பாகவே அடுத்த டிஜிபிக்கான பரிந்துரைப் பட்டியலை தமிழக அரசு யுபிஎஸ்சி-க்கு அனுப்பியிருக்க வேண்டும்.
ஆனால் தற்போது தமிழக அரசு தற்காலிக பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமனை நியமித்துள்ளது. இவ்வாறு தற்காலிக டிஜிபியை நியமிக்கக்கூடாது என ஏற்கெனவே பிரகாஷ் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை தமிழக அரசு மதித்து நடக்கவில்லை என்பதால், தமிழகத்தில் தற்காலிக டிஜிபியை நியமித்துள்ள தமிழக அரசின் தலைமை செயலருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரியிருந்தார்.
இந்த அவமதி்ப்பு வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழகத்தில் தற்காலிக பொறுப்பு டிஜிபியை நியமித்தது ஏன் என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழக அரசு தரப்பி்ல், யுபிஎஸ்சி-க்கு பரிந்துரை செய்யப்படும் பட்டியலில் தனது பெயரையும் சேர்க்க வேண்டும் எனக்கோரி மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை தீர்ப்பாயம் கடந்த ஏப்.30 அன்றுதான் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து அவர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் கடந்த ஆக.22-ம் தேதிதான் தள்ளுபடி செய்தது. ஆகவே தான் தற்காலிக பொறுப்பு டிஜிபியை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என விளக்கமளிக்கப்பட்டது.
அதையேற்ற நீதிபதிகள், நிரந்தர டிஜிபியை தேர்வு செய்யும் வகையில் தமிழக அரசு அனுப்பியுள்ள பரிந்துரைப் பட்டியலை யுபிஎஸ்சி விரைவாக பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பி்க்க வேண்டும். அதன்படி தமிழக அரசு நிரந்தர டிஜிபியை விரைவாக தமிழகத்தில் நியமிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தனர்.