தென்காசி: முதல்நிலை காவலரான அ.பிரபாகரன் பெயரில் கையெழுத்தின்றி தமிழக டிஜிபி.க்கு எழுதப்பட்ட கடிதம் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 17 பக்கங்கள் கொண்ட அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தென்காசி மாவட்டம், சிவகிரியில் கடந்த 18-ம் தேதி உரிய ஆவணங்களின்றி எம்.சாண்ட் ஏற்றிவந்த டிராக்டரை பறிமுதல் செய்து, ஓட்டுநருடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தேன். மேலும் ரகசிய தகவலின்பேரில் சொக்கநாதன்புதூரில் அனுமதியின்றி ஜல்லி ஏற்றி வந்த டிராக்டர், மணல் ஏற்றி வந்த 2 மாட்டு வண்டிகள் மற்றும் தொடர்புடைய 3 பேரையும் பிடித்தேன்.
உதவி ஆய்வாளர், தனிப்பிரிவு காவலர் உதவியுடன் 3 பேரையும், பறிமுதல் செய்த வாகனங்களுடன் அழைத்துச் சென்றபோது, வழிமறித்த 3 பேர் கொலை மிரட்டல் விடுத்து, வாகனங்களையும், பிடிபட்டவர்களையும் கொண்டு சென்றுவிட்டனர். காவல் நிலையத்தில் ஒப்படைத்த டிராக்டரையும் எடுத்துச் சென்றுவிட்டதை அறிந்து மிகுந்த அச்சத்துக்கு உள்ளானேன்.
இதுதொடர்பாக, காவல் ஆய்வாளர், டிஎஸ்பிக்கு தெரிவித்தும் என்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் என்னை வேறு பணிக்கு மாற்றிவிட்டனர். இது எனக்கு மேலும் மன அழுத்தத்தை கொடுத்துள்ளது.
இதுதொடர்பாக காவல்துறை தலைமை இயக்குநருக்கு புகார் மனு அளித்து, பொது நாட்குறிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த மனுவை காவல்துறை இயக்குநருக்கு அனுப்பாமல் நிலுவையில் வைத்து குற்றவாளிகளை பாதுகாத்து, குற்றத்துக்கு உடந்தையாக உள்ளனர்.
இதுபோன்ற காரணங்களால் கடந்த 4 ஆண்டுகளில் 300-க்கும் மேற்பட்ட காவலர்கள் தற்கொலை செய்துள்ளனர். கடந்த 12 ஆண்டுகளில், 4,125 காவலர்கள் சஸ்பெண்ட் செய்ததும், 344 காவலர்களை டிஸ்மிஸ் செய்ததும் மிகுந்த வருத்தமளிக்கிறது என காவல்துறை அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் கூறப்பட்டுள்ளன.
இக்கடிதம் சமூக வலைதளங்களில் பரவியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட தலைமைக் காவலர் பிரபாகரனை தொலைபேசியில் தொடர்புகொள்ள பலமுறை முயன்றும் முடியவில்லை.
இதுகுறித்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர்.ஸ்ரீனிவாசனிடம் கேட்டபோது, “அந்த கடிதத்தில் கையெழுத்தில்லை. கடிதம் தொடர்பானவை குறித்தும் விசாரணை நடந்து வருகிறது” என்றார். சிவகிரி காவல் நிலையத்தில் ஏடிஎஸ்பி ரமேஷ், டிஎஸ்பி வெங்கடேசன் ஆகியோர் நேற்று இதுதொடர்பாக விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், பிரபாகரன் பேசிய வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் பரவியது. அதில், கடிதத்தில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் குறித்து விளக்கி பேசியுள்ளார். மேலும், இந்த பிரச்சினையில் தமிழக முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார் மனுவை தமிழக டிஜிபி, தலைமைச் செயலாளர், தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கும் அனுப்பி உள்ளதாகவும் கூறியுள்ளார்.