இந்திய நீதித்துறையின் சமீபத்திய வரலாற்றில் மிகவும் செல்வாக்கு மிக்க தலைமை நீதிபதிகளில் ஒருவரான தனஞ்சய் யஷ்வந்த் சந்திரசூட் (டி.ஒய். சந்திரசூட்) நவம்பர் 10-ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். அவரது பதவிக்காலம் பல காரணங்களால் விமர்சனத்துக்குள்ளானது.
அவரால் நீதிமன்றம் செயல்படும் விதத்தை மாற்றியமைக்க முடியும், அவர் பெரும்பான்மை பலம் கொண்ட ஓர் அரசாங்கத்தை எதிர்ப்பார், சாதாரண மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்வார், எனப் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் அவரை நம்பியவர்கள் ஏராளம்.
எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக இருந்ததாலோ என்னவோ, அவரது பதவிக் காலத்தை பலருக்கு ஏமாற்றமளித்துள்ளது. அவரது உத்தரவுகள் மற்றும் அவரது தனிப்பட்ட நடத்தை ஆகிய இரண்டும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன.
அவரது உரைகள், பதவியேற்பு விழாக்கள் மற்றும் நேர்காணல்கள் ஆகியவற்றின் காரணமாக, சந்திரசூட் வரலாற்றில் வேறு எந்த நீதிபதியையும் விட அதிக ஊடக கவனத்தைப் பெற்றார்.
விமர்சனம் ஏன்?
குறிப்பாக இரண்டு சமீபத்திய நிகழ்வுகள், ஒரு நீதிபதியாக அவரது நடத்தையை பற்றி கடுமையான விமர்சனங்கள் வர வழிவகுத்தது.
முதல் நிகழ்வு, அயோத்தி கோவில் தொடர்பான பிரச்னையில் தீர்வுக் காண உதவி வேண்டி ‘தெய்வத்தின் முன் அமர்ந்தேன்’ என்று அவர் கூறியது. இரண்டாவது நிகழ்வு, சந்திரசூட் வீட்டில் பிரதமர் நரேந்திர மோதி விநாயகர் பூஜை செய்தது. சந்திரசூட் உடன் மோதி பூஜை செய்யும் வீடியோ இணையத்தில் வைரலானது.
இரண்டு நிகழ்வுகளும் நீதிபதிகளின் வழக்கமான செயல்பாட்டின் கீழ் வராது. பொதுவாக நீதிபதிகள் தங்களின் தீர்ப்பை பற்றி பொது இடங்களில் இப்படிப் பேச மாட்டார்கள், மத நிகழ்வுகளுக்காக அரசியல்வாதிகளைச் சந்திப்பதும் அரிது.
சமீப காலமாக வேறு எந்த நீதிபதியையும் விட, அவர் தன்னை ஒரு இந்துவாக அடையாளப்படுத்தியுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்த போதிலும், சந்திரசூட் பதவிக் காலத்தை, ‘அரசுக்கு ஆதரவானது’ என்றோ ‘தனியுரிமைகளுக்கு ஆதரவானது’ என்றோ ஒரு அடைமொழிக்குள் விவரிப்பது கடினம்.
அவர் ஓய்வு பெறுகையில், அவரை பலர் ஒரு நல்ல தலைமை நீதிபதியாகப் பார்க்கிறார்கள், பலர் அவரை தனக்கென நிர்ணயித்த பல நோக்கங்களை அடையத் தவறிவிட்டதாக கருதுகிறார்கள்.
சந்திரசூட், அரசாங்கத்தின் ஆதிக்கத்திற்கு எதிராக வழங்கிய தீர்ப்புகள், மக்களின் உரிமைகள் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையை அளித்தன.
அதேநேரத்தில், குடிமக்களின் உரிமைகளை பாதிக்கும் வகையிலும் அவர் சில தீர்ப்புகளை வழங்கியுள்ளார். அதனை பலரும் எதிர்மறையாக பார்க்கின்றனர்.
நீதிபதி சந்திரசூட்டின் சில தீர்ப்புகள் எதிர்காலத்திற்கான ஒரு சிறந்த அடித்தளத்தை அமைத்தன. ஆனால் பலவற்றில் உடனடி பலன் கிடைக்கவில்லை.
இவைதவிர, அரசாங்கம், முன்பு போலவே, நீதித்துறையில் நியமனங்கள் தொடர்பாக தொடர்ந்து அழுத்தம் கொடுத்தது. பல அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை ஒத்திவைப்பது குறித்து விமர்சனங்கள் எழுந்தன.
‘மாஸ்டர் ஆஃப் த ரோஸ்டர்’ சந்திரசூட்
இந்திய நீதிமன்றத்தின் தலைமைப் பொறுப்பில் அமர்ந்திருக்கும் இந்தியத் தலைமை நீதிபதிக்கு மகத்தான அதிகாரம் உள்ளது.
தலைமை நீதிபதி பொறுப்பில் இருப்பவர் தான் ‘மாஸ்டர் ஆஃப் தி ரோஸ்டர்’ (master of the roster) . ஒரு வழக்கை விசாரணைக்கு எப்போது பட்டியலிட வேண்டும் என்று தலைமை நீதிபதி முடிவு செய்கிறார். இந்த சிறப்புரிமை தான் ‘மாஸ்டர் ஆஃப் த ரோஸ்டர்’ என்று அழைக்கப்படுகிறது.
பெரும்பாலும், எந்த நீதிபதி வழக்கை விசாரிக்கிறார் என்பது தீர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும். சில நீதிபதிகள் பழமைவாதிகளாக இருப்பர், சிலர் தாராளவாதிகள். நீதிபதிகளின் இந்த சார்பு நிலைகள் குறித்து பெரும்பாலும் சட்ட வட்டாரங்களில் தெரிந்திருக்கும். எனவே, தலைமை நீதிபதி இந்த ‘மாஸ்டர் ஆஃப் ரோஸ்டர்’ அதிகாரத்தைப் பயன்படுத்தி மறைமுகமாக வழக்கில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
2017-ஆம் ஆண்டு, நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமை நீதிபதியாக இருந்தபோது, உச்ச நீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகள் வரலாற்றுச் சிறப்புமிக்க செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளைத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமர்வுகளுக்கு அவரது தலைமை நீதிபதி ஒதுக்குவதாக புகார் தெரிவித்தனர். அப்போதிருந்து, வழக்குகளை பட்டியலிட்டு ஒதுக்குவது தொடர்பான பிரச்னைகள் முக்கியத்துவம் பெற்றன.
சந்திரசூட் பதவிக்காலத்தின் முக்கிய தருணங்கள்
சந்திரசூட்டின் பதவிக் காலத்திலும், சில முக்கிய வழக்குகளை பட்டியலிட்டதில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அவர் பதவியேற்றதும், நீதிமன்றங்களை இன்னும் வெளிப்படைத்தன்மை கொண்டதாக மாற்ற விரும்புவதாக ஒரு பேட்டியில் கூறினார். ஆனால், வழக்குகளை பட்டியலிடும் விஷயத்தில் விமர்சனங்களை சந்தித்தார்.
அவரது பதவிக்காலத்தில் 33 வழக்குகள் தொடர்பாக அரசியல் சாசன அமர்வுகள் அமைக்கப்பட்டன. இவை முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள். சட்டத்தின் முக்கியமான கேள்விகளைக் கையாளும் இந்த வழக்குகளுக்கு ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தேவைப்படும்.
370-ஆவது பிரிவை ரத்து செய்தல், தேர்தல் பத்திரங்கள் சர்ச்சை உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளை கையாள, அவர் 5,7 , மற்றும் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வுகளை அமைத்தார். அவரது பதவிக் காலத்திற்கு முன்பு, உச்ச நீதிமன்றம் இந்த வழக்குகளில் தீர்ப்பு வழங்க தாமதித்ததாக ஒரு பெரிய விமர்சனம் இருந்தது.
இந்த விஷயத்தில், சந்திரசூட் வழக்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். உதாரணமாக, தன்பாலினத் திருமணத்தைச் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கக் கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பு வழங்கப்பட்டது. தனியுரிமையை அடிப்படை உரிமையாக அறிவித்தது மற்றும் தன்பால் ஈர்ப்பை குற்றமற்றதாக அறிவித்த அமர்வுகளின் ஒரு பகுதியாக சந்திரசூட் இருந்தார்.
இதனால், அவர் தன்பால் ஈர்ப்பினரின் திருமண உரிமையை வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்த வழக்கு பட்டியலிடப்பட்டு ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு வழங்கப்பட்டது. இந்த செயல்முறைகள் அதிவேகமாக நகர்ந்தன.
இருப்பினும், இறுதி தீர்ப்பு பால்புதுமை சமூகத்தினருக்கு திருப்திகரமாக இல்லை.
ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை என்று கூறியது.
சில வழக்குகள் மிகுந்த வேகத்துடன் விசாரிக்கப்பட்டாலும், இன்னும் பல வழக்குகள் நிலுவையில் போடப்பட்டன. குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அரசியலமைப்புத் தன்மை மற்றும் திருமண உறவில் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஜாமீன் விவகாரங்கள்
தனிநபர் சுதந்திரம் தொடர்பான சில வழக்குகளில், சந்திரசூட் விரைவாகச் செயல்பட்டார். உதாரணமாக, சமூக ஆர்வலர் டீஸ்டா சீதல்வாட்டுக்கு குஜராத் உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்ததை அடுத்து, சிறப்பு விசாரணையில் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.
அதேசமயம் பீமா – கொரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மகேஷ் ராவுத்திற்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. அவர் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில், தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் உடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், சாதி அடிப்படையிலான வன்முறையை ஊக்குவித்ததாகவும் 16 ஆர்வலர்கள் மற்றும் அறிஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
2023-ஆம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் பெற்றார். ஆனாலும், அவரது ஜாமீனுக்கு தடை விதிக்கப்பட்டு, அதுதொடர்பான வழக்கு இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. பொதுவாக, உயர் நீதிமன்றங்கள் வழங்கும் ஜாமீன்கள் உச்ச நீதிமன்றத்தால் அரிதாகவே நிறுத்தி வைக்கப்படும். இந்த வழக்கு நீதிபதி பேலா திரிவேதி தலைமையிலான அமர்வில் நிலுவையில் உள்ளது.
விமர்சகர்கள் கூற்றுபடி, இந்த வழக்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது, அதில் நீதிபதி பேலா திரிவேதி இளைய நீதிபதியாக சேர்க்கப்பட்டிருந்தார். அதன் பின்னர் பட்டியல் விதிகளுக்கு மாறாக, மூத்த நீதிபதியாக பேலா திரிவேதி இருந்த பெஞ்சிற்கு இந்த வழக்கு சென்றது. இது விமர்சனங்களுக்கு வழிவகுத்தது.
இதே போல், டெல்லி கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட உமர் காலித்தின் ஜாமீன் விவகாரமும் விமர்சனங்களை சந்தித்தது. அவர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளார். நீதிபதி பேலா திரிவேதி அமர்வில் விசாரிக்கப்படுவதற்கு முன்பு, அவரது வழக்கு முதலில் மற்ற அமர்வுகளிலும் பட்டியலிடப்பட்டது.
மற்றொரு வழக்கு ரிது சபாரியா தொடர்பானது. ரிது சபாரியா வழக்கில் சந்திரசூட் வழக்கை தள்ளுபடி செய்தார். இந்த வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் தாமதமாவது, குற்றம்சாட்டப்பட்டவர், தானாக ஜாமீன் பெற வழிவகுக்கும் என இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. அதாவது சட்டப்பூர்வ காலக்கெடுவுக்குள் விசாரணை முடிக்கப்படாவிட்டால், விசாரணைக் கைதி ஜாமீனில் விடுவிக்கப்படுவதற்கான உரிமையை இந்தத் தீர்ப்பு அங்கீகரிக்கிறது.
இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் இருந்து சந்திரசூட், இந்த வழக்கை தனது அமர்வுக்கு மாற்றி, வாய்மொழியாகக் குறிப்பிட்டு, இறுதியில் வழக்கு உத்தரவுக்குத் தடை விதித்தார். இது நீதித்துறை விதிமுறைகளுக்கு எதிரானது என கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று வரை நிலுவையில் உள்ளது.
மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, சந்திரசூட் தலைமை நீதிபதியாக இருந்த காலம் குறித்து, ‘பெஞ்சுகள் அமைப்பதிலும், வழக்குகள் ஒதுக்கீடு விவகாரத்திலும் பல குறைபாடுகள் இருந்தன’ என எழுதினார்.
சந்திரசூட்டின் பதவி காலத்தில், சில வழக்குகள் விசாரணைக்கே பட்டியலிடப்படாதது, குடிமக்களின் சுதந்திரம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் பொறுப்புக்கூறல் பற்றிய கேள்விகளை எழுப்பின.
பணமோசடி தடுப்புச் சட்டத்தை (Prevention of Money Laundering Act) மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவும் சந்திரசூட்டின் பதவிக் காலத்தில் சிக்கித் தவித்தது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தை சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியதாக அரசு மற்றும் எதிர்க்கட்சிகளை விமர்சிப்பவர்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த மனு நீண்ட காலம் நிலுவையில் இருந்தது.
2022-ஆம் ஆண்டு தீர்ப்பில், அமலாக்கத் துறைக்கு கைதுகள், விசாரணைகள் மற்றும் ஜாமீன்கள் மீதான முழு அதிகாரத்தை உச்சநீதிமன்றம் வழங்கியது.
இந்த தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து உடனடியாக மறுஆய்வு செய்ய மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
பெயர் வெளியிட விரும்பாத உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஒருவர், “பணமோசடி தடுப்புச் சட்டம் தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்பட்ட விதம், இந்த விஷயத்தில் அரசின் நிலைப்பாட்டை நீதிமன்றம் ஏற்றுக்கொள்வது போல் தெரிகிறது” என்றார். மேலும் சில ஜாமீன் வழக்குகள் விசாரிக்கப்பட்ட விதம் கவலையளிக்கிறது என்றும் அவர் கூறினார்.
நீதிபதி சந்திரசூட் பதவிக் காலத்தில் நிலுவையில் இருந்த மற்றொரு வழக்கு, சண்டிகர் மேயர் தேர்தலில் தலைமை அதிகாரியான அனில் மசிஹின் அணுகுமுறை தொடர்பானது.
சண்டிகரில் ஜனவரி 30-ஆம் தேதி நடைபெற்ற மேயர் தேர்தலில் தேர்தல் அதிகாரியாக இருந்த அனில் மசிஹ், பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் முடிவுகளை மாற்றியமைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு முன்பு முதற்கட்டமாக வழக்கு விசாரணைக்கு வந்தது. அனில் மோசடி செய்ததாக அமர்வு கூறியது. இந்த ஆண்டு அவர் மீது பொய்யான வாக்குமூலம் அளித்ததாக நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது சந்திரசூட் மசிஹை கடுமையாக விமர்சித்தார். எனவே, அவரது செயல்களுக்கு நீதிமன்றம் தண்டனை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை.
மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டேயின் கூற்றுப்படி, “சுதந்திரம் மற்றும் பொறுப்புணர்வை உறுதிப்படுத்தும் வகையில் நீதிபதி சந்திரசூட்டின் பதவிக் காலத்தை ஒரே வாக்கியத்தில் விவரிக்க வேண்டுமெனில், உமர் காலித் சிறையில் இருக்கிறார், அனில் மசிஹ் சுதந்திரமாக வெளியே இருக்கிறார் என்று கூறலாம்” என்றார்.
நீதித்துறை வரலாற்றில், நீதிபதி சந்திரசூட் பதவியில் இருந்தபோது, முன்பை விட அதிகமான அரசியல் சாசன அமர்வு வழக்குகள் தீர்க்கப்பட்டன. இருப்பினும், அவரின் பதவிக்காலத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
அவர் பதவியேற்ற போது 69,000 வழக்குகள் நிலுவையில் இருந்தது. ஆனால் அவர் ஓய்வு பெறும் நிலையில், அது 82,000 ஆக அதிகரித்துள்ளது.
“நிர்வாக ரீதியாக திறமையான தலைமை நீதிபதி, நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கையை குறைப்பதில் திறனைக் காட்டவேண்டும். தற்போதைய தலைமை நீதிபதி, அரசியல் சாசன அமர்வு (Constitution bench cases) வழக்குகளில் முன்வைக்கப்பட்ட சவால்களை ஏற்றுக்கொண்டார். ஆனால் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தத் தவறிவிட்டார்” என்று ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி லோகூர் கூறினார்.
‘கொலீஜியத்தின்’ தலைவராக சந்திரசூட்
பலரின் கூற்றுப்படி, சந்திரசூட்டின் பதவிக்காலம் நீதித்துறை நியமனங்களில் ஒரு பெரிய தோல்வியை சந்தித்தது.
உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பதில் கொலீஜியம் தான் தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றுள்ளது என்று சட்டம் கூறுகிறது. பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் அரசாங்கத்திற்கு சிக்கல்கள் இருந்தாலும், அதை ஒரு முறை மட்டுமே மறுஆய்வுக்கு அனுப்ப முடியும். ஆனால் அந்த பெயருக்கான பரிந்துரையை மீண்டும் கொலிஜியம் அனுப்பினால், அதை அரசு ஏற்றே ஆக வேண்டும்.
பல ஆண்டுகளாக, அரசாங்கம் இந்த நடைமுறையை பின்னுக்குத் தள்ளி, நியமனங்களில் முன்னுரிமையைப் பெற முயற்சித்தது. இது பெரும்பாலும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படும் நீதிபதிகளின் நியமனங்களுக்கு வழிவகுக்கிறது.
சந்திரசூட் பொறுப்பேற்றபோது, அவர் ஒரு நேர்காணலில், பல்வேறு தகுதியாக நபர்களுடன் நீதித்துறையில் காலியிடங்களை நிரப்புவதே தனது குறிக்கோள்களில் ஒன்று என்று கூறினார்.
ஆனால் அவரது பதவிக்காலத்தில் இந்த நியமன செயல்முறையை அரசாங்கம் கையகப்படுத்துவதைத் தடுக்க முடியவில்லை என்று பல சட்ட வல்லுநர்களிடையே ஒருமித்த கருத்து உள்ளது.
“அவரால் அரசாங்கத்துக்கு போதுமான அளவு அழுத்தம் கொடுக்க முடியவில்லை. நியமன செயல்முறையின் அடிப்படையில் இது ஒரு பெரிய பிரச்னை ,” என்று சந்திரசூட்டுடன் பணியாற்றிய மற்றும் பெயர் கூற விரும்பாத முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் கூறினார்.
“அரசாங்கத்திற்கு அடிபணியும் சூழல் அதிகமாக இருந்தது,” என்று அவர் கூறினார்.
அவர் ஒரு நீண்ட பதவிக்காலத்தைக் கொண்டிருந்தார், இதன் மூலம் நியமனங்களில் நீதித்துறையின் மேலாதிக்கத்தை நிறுவ அவருக்கு நேரம் கிடைத்தது என்று அந்த நீதிபதி விளக்கினார்.
நீதிமன்றங்களில் 351 காலி பணியிடங்கள்
“உயர் நீதிமன்றங்கள் மிகவும் கடினமான சூழலை எதிர்கொள்கின்றன,” என்று உச்சநீதிமன்ற நீதிபதி கூறினார். சந்திரசூட் பதவியேற்றபோது, உயர்நீதிமன்றத்தில் 323 காலியிடங்கள் இருந்தன. இருப்பினும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, காலியிடங்கள் 351 ஆக அதிகரித்துள்ளன.
அவரது பதவிக்காலத்தில் ஒரு வழக்கு மிகவும் சுவாரஸ்யமானதாக கருதப்பட்டது. நீதிபதிகள் நியமனங்கள் பொதுவாக நிர்வாகத்தால் கையாளப்படுகிறது.
நீதித்துறை நியமனங்கள் தொடர்பான சட்டத்தை, அரசாங்கம் பின்பற்றவில்லை என்று போடப்பட்ட ஒரு `அரிய’ அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், விசாரணையின் போது, அரசு சட்ட நடைமுறைகளை பின்பற்றவில்லை என்றால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அரசு அதிகாரிகளை குற்றவாளியாக்குவேன் என்று எச்சரித்திருந்தார்.
இருப்பினும், அவரது பதவிக்காலத்தின் முடிவில், இந்த வழக்கு பட்டியலிடப்பட்ட போதிலும், விசாரணை பட்டியலில் இருந்து காணாமல் போனது.
இந்த விவகாரத்தில் நீதிபதி கவுல் “வழக்கை நான் நீக்கவில்லை” என்று அதிர்ச்சியுடன் கூறினார். “சில விஷயங்களில் வாயை மூடிக்கொண்டு இருந்தால் நல்லது. இதை தலைமை நீதிபதி அறிந்திருப்பார் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.
இது ஒரு விசித்திரமான நிகழ்வு, ஏனெனில் கவுல் முன்னதாக இந்த வழக்கை டிசம்பர் 5 ஆம் தேதி தனது அமர்வின் முன் பட்டியலிட உத்தரவிட்டார்.
அப்போதிருந்து இந்த விஷயம் பட்டியலிடப்படவில்லை.
எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி, சம்பந்தப்பட்ட பெஞ்சின் அனுமதியின்றி வழக்கு ஏன் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது என்பதில் பதிவுத்துறையின் பங்கு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டபோது, நீதித்துறை மத்திய அரசுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை வெளியிட்டது. இதன் விளைவாக சில நியமனங்கள் செய்யப்பட்டன. இருப்பினும் தற்போது உயர் நீதிமன்றங்களில் நியமன வழக்குகள் தேங்கி கிடக்கின்றன.
நீதித்துறையின் வலைத்தளத்தின்படி, அப்போதிருந்து 30 க்கும் குறைவான உயர் நீதிமன்ற நீதிபதிகளே நியமிக்கப்பட்டுள்ளனர்.
நீதிபதிகள் நியமனங்களில் பிரச்னை
சில நீதிபதிகளுக்குப் பதவி உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்காதது குறித்து கவலைகள் இருந்தன.
அதில் ஒன்று, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எல். விக்டோரியா கௌரி பற்றியது. அவரது பதவியேற்பு விழாவுக்கு முன்பு, அவர் சிறுபான்மையினருக்கு எதிராக ‘வெறுக்கத்தக்க உரையை’ நிகழ்த்தியதாக சுட்டிக்காட்டப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
சந்திரசூட் இந்த விஷயத்தில், கொலிஜியம் இது குறித்து தெரியப்படுத்தவில்லை என்றும், மறு நாளுக்கு இந்த வழக்கை பட்டியலிடுவதாகவும் கூறினார். இந்த வழக்கை விசாரித்த மற்றொரு அமர்வு, எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு கொலிஜியம் தீர்ப்பு வழங்கியதால் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாகக் கூறியது.
அரசாங்கத்திற்கு எதிராக உத்தரவு வழங்கியதால், சில நீதிபதிகளுக்கு உச்ச நீதிமன்றத்துக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சந்திரசூட்டின் பதவிக்காலத்தில் நீதிபதி எஸ். முரளிதர் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். டெல்லி உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளில் ஒருவரான இவருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு தரப்படவில்லை. மாறாக ஒரு சிறிய உயர் நீதிமன்றமாகக் கருதப்படும் ஒரிசாவுக்கு மாற்றப்பட்டார்.
அவருக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டது தொடர்பாக மூன்று சட்ட வல்லுநர்களை ஒரு தலையங்கத்தை எழுதினர். “எஸ் முரளிதருக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பதவி ஏன் வழங்கப்படவில்லை, குறிப்பாக இப்போது இரண்டு காலியிடங்கள் இருக்கும் போது? ” என்று கேள்வி எழுப்பினர்.
முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் லோகூரின் கூற்றுப்படி, கொலீஜியம் அமைப்பு நீதித்துறையின் சுதந்திரத்தை “பிரதிபலிக்கிறது”. “இன்று நீதிபதிகள் மற்றும் வருங்கால நீதிபதிகளின் எதிர்காலம் குறித்து அரசே முடிவெடுப்பதாகத் தெரிகிறது” என்று அவர் கூறினார்.
அவரது பதவிக்காலத்தில், உச்ச நீதிமன்றத்தின் 18 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், இதைச் செய்யும்போது அவர் வெவ்வேறு தரப்பினருக்கும் வாய்ப்பு தரப்படும் என்ற தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. நியமிக்கப்பட்ட நீதிபதிகள் அனைவரும் ஆண்கள்தான்.
சந்திரசூட்டின் ஊடக வெளிச்சம்
துஷ்யந்த் தவே, ‘ஊடகங்களில் சந்திரசூட்டிற்கு மிகப்பெரிய செல்வாக்கு இருந்தது’ என்றார்.
சந்திரசூட்டின் பதவிக்காலத்தில் அவர் அடிக்கடி ஊடகங்கள் முன்பு தோன்றியது, அவரை பிரபல முகமாக மாற்றியது.
அவரது புகழ் காரணமாக, ஆன்லைன் ட்ரோல்களும் நீதிபதி சந்திரசூட்டை அதிகம் குறிவைத்தன. அவர் ‘இந்து எதிர்ப்பு’ மற்றும் ‘போலி பெண்ணியவாதி’ என்று விமர்சிக்கப்பட்டார். ஒரு நீதிபதிக்கு இவ்வளவு ஊடக வெளிச்சம் தேவையா என்ற கேள்வியை பலர் எழுப்புகின்றனர். ஏனெனில் நீதிபதிகள் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு, தற்போதைய போக்கிலிருந்து விலகி, நியாயமான முடிவுகளை மட்டுமே எடுக்க வேண்டும்.
“பத்திரிகையாளர்களுடன் நீங்கள் அதிகம் பழகினால், மக்கள் விரும்பக்கூடிய நல்ல விஷயங்களைச் செய்ய விரும்புவீர்கள், உண்மையில் கடினமான முடிவுகளை எடுக்க முடியாத சூழல் ஏற்படும்” என்று துஷ்யந்த் கூறினார்.
பல சம்பவங்களில், அவர் ஒரு ‘இந்து’ என்ற அடையாளம் வெளிப்படையாகத் தெரிந்தது.
ஜனவரியில், குஜராத்தில் உள்ள துவாரகா கோயிலுக்குச் சென்றபோது, சந்திரசூட் கோயில்களில் உள்ள கொடி “நம் அனைவரையும் பிணைக்கிறது” என்றும், அதை அரசியலமைப்புடன் ஒப்பிட்டுப் பேசினார்.
இந்த ஆண்டும், விநாயக சதுர்த்தியின் போது, பிரதமர் நரேந்திர மோதி சந்திரசூட் வீட்டில் பூஜையில் கலந்து கொண்டார். இது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அக்டோபரில், ஒரு கூட்டத்தில் உரையாற்றும் போது, ராம ஜென்மபூமி வழக்கின் போது கடவுளிடம் பிரார்த்தனை செய்துவிட்டு தீர்ப்பை கூறியதாகக் குறிப்பிட்டார். இவை அனைத்தும் கடுமையாக விமர்சிக்கப்பட்டன.
நீதிமன்றங்களின் முன் அரசுதான் மிகப் பெரிய வழக்காடுபவராக இருப்பதால், அரசு தொடர்பான பிரமுகர்களுடன் நெருக்கம் காட்டுவது மற்ற நீதிமன்றங்களுக்கும் பொதுமக்களுக்கும் தவறான செய்தியை அனுப்புகிறது என்று சட்ட வல்லுனர்கள் கருதுகின்றனர். .
‘இதெல்லாம் தேவையா?’ என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஒருவர் கேள்வி எழுப்பினார். “உங்கள் வீட்டில் பிரதமருடன் ஆரத்தி எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அப்படியே செய்தாலும், அதை ஏன் கேமராவில் பதிவு செய்ய வேண்டும்?” என்று கேள்வியெழுப்பினார்.
மற்றொரு முன்னாள் நீதிபதி, “நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன் என்று வெளிப்படையாக காட்டுவது நீதிபதிகள் தவிர்க்க வேண்டிய ஒன்று. இது அவர்களுக்கு ‘பகுத்தறிவின்மை’ என்னும் பிம்பத்தை ஏற்படுத்துகிறது” என்று கூறினார்.
மேலும், ஓய்வுபெற்ற நீதிபதி மதன் லோகுர் கூறுகையில், “நீதிபதிகள் அரசியல் நிர்வாகிகளை எப்போதாவது சந்திப்பார்கள், ஆனால் இது பெரும்பாலும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளுக்காக மட்டும் தான், பூஜைக்காக அல்ல,” என்றார்.
நீதிபதிகள் தங்கள் நம்பிக்கையைப் பற்றி வெளிப்படையாகப் பேசத் தொடங்கினால், கடவுளைத் தங்கள் தீர்ப்புகளுக்குள் கொண்டுவந்தால் அல்லது அரசியல் நிர்வாகிகளுடன் பழகத் தொடங்கினால், அது சாதாரண மக்கள் மத்தியில் நீதித்துறையின் மீதான நம்பிக்கையைக் குறைக்க வழிவகுக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, நீதி வழங்கப்படுவது மட்டுமல்லாமல், அதை நிறைவேற்ற வேண்டும்.
சந்திரசூட்டின் பொது ஆளுமை பிம்பம் அவரது தனிப்பட்ட வட்டத்தில் இருப்பவர்கள் உடனான பிம்பத்தோடு ஒத்துப் போகவில்லை.
உண்மையில், அவர் அதிக ஊடக வெளிச்சத்தை விரும்புவதாக சிலர் உணர்ந்தனர்.
சக ஊழியர்கள் சொல்வது என்ன?
ஒரு முன்னாள் நீதிபதி, “அவரால் மிகவும் இனிமையாக இருக்க முடியும், மிகவும் கண்ணியமாக இருக்க முடியும். அதே சமயம் அவரால் மிகவும் சுயநலமாக இருக்க முடியும், அது மற்றவரை காயப்படுத்தும்,” என்று விவரித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை விழா நடந்தது. இன்னும் அதற்கான திட்டம் கூட தயாராகவில்லை, பிறகு பூஜை போட வேண்டிய அவசியம் என்ன?” என்று விமர்சித்தார்.
சமீபத்தில், மூத்த வழக்கறிஞரின் பதவி குறித்து தலைமை நீதிபதிக்கும் மற்ற நீதிபதிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்ததாக பெயர் கூற விரும்பாத உச்ச நீதிமன்ற நீதிபதிகளை மேற்கோள் காட்டி `தி வயர்’ செய்தி வெளியிட்டது.
இதுபோன்ற சம்பவங்கள் பொதுவெளியில் வந்ததாக இதுவரை கேள்விப்பட்டதே இல்லை.
மற்றொரு முன்னாள் நீதிபதி நீதிமன்றத்தில், “அவருடன் தனிப்பட்ட முறையில் பழகும் போது, அவரை பற்றி புரிந்துகொள்வது கடினமாக இருந்தது” என்று கூறினார். அவரது சக ஊழியர்களை பொறுத்தவரை, அவர் அதிகம் பேசாத தனிமை விரும்பும் மனிதராகக் காணப்பட்டார்.
“மதிய உணவு நேரத்தில், நீதிபதிகள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்கள். அவர் (சந்திரசூட்) இருக்கமாட்டார்” என்று முன்னாள் நீதிபதி கூறினார்.
நிர்வாகப் பிரச்னைகளைப் பற்றி விவாதிக்கவும் அவருக்கு நேரம் கிடைப்பது “கடினம்” என்று மேலும் கூறினார்.
சந்திரசூட் உச்ச நீதிமன்ற லோகோவில் மாற்றங்களைச் செய்து, அரசியல் சட்டத்தை வைத்திருக்கும் நீதி தேவதையின் புதிய சிலையை அதில் அறிமுகப்படுத்தினார். அந்த சிலையில் நீதிதேவதையின் கண்களில் இருந்த கட்டு கழற்றப்பட்டிருந்தது.
தலைமை நீதிபதியின் இந்த செயல்பாடுகள் குறித்து வழக்கறிஞர்கள் சங்கங்களில் இருந்தும் புகார்கள் வந்தன.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், உச்ச நீதிமன்றத்தின் சின்னத்தை மாற்றுவது, வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசிக்காமல் நீதி தேவதையில் தோற்றத்தை மாற்றுவது போன்ற “ஒருதலைப்பட்ச” முடிவை எடுத்ததற்காக தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியது.
வழக்கறிஞர்களின் கண்ணியத்தை காக்க தவறிவிட்டதாக அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கமும் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியது. அந்த கடிதத்தில், சந்திரசூட் “தன் விலைமதிப்பற்ற நேரத்தை விழாக்களில் கலந்துகொள்வதில் கவனம் செலுத்துகிறார்” , தலைமை நீதிபதி அலுவலகப் பொறுப்புகளை விட “விளம்பரத்தில்” அதிக அக்கறை காட்டுகிறார்” என்றும் எழுதப்பட்டது.
நீதிபதியாக சந்திரசூட் என்ன செய்தார்?
சந்திரசூட் ஒரு நீதிபதி மற்றும் தலைமை நீதிபதியாக பல முக்கிய தீர்ப்புகளில் பங்கெடுத்துள்ளார். இது வரவிருக்கும் ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் சட்டக் கருத்துக்களை நிறுவியது.
மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டேவின் கூற்றுப்படி, “மிக நீண்ட காலத்திற்கு மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்”.
சந்திரசூட் உட்பட ஒன்பது நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், தனியுரிமை உரிமை சட்டம் தொடர்பாக ஒருமனதாக தீர்ப்பளித்தது. அதில் பெரும்பான்மையான தீர்ப்பை சந்திரசூட் எழுதினார். இது பொது வாழ்வின் பல அம்சங்களில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்.
இந்தியாவில் தன்பால் ஈர்ப்பை குற்றமற்றது என்று அறிவித்த அரசியல் சாசன அமர்வில் அவர் ஒரு பகுதியாக இருந்தார். திருமணத்திற்கு புறம்பான உறவுகளை குற்றமாக்குவதற்கான விதிகளை ரத்து செய்த வழக்கிலும் அவர் இருந்தார்.
திருமணமாகாத பெண்களுக்கும் கருக்கலைப்பு செய்ய அனுமதி அளித்தது, சபரிமலைக்குள் பெண்களை அனுமதிப்பது ஆகிய தீர்ப்புகளையும் அவர் எழுதினார்.
மற்றொரு வழக்கிலும் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இருந்த அவர் பெரும்பான்மைத் தீர்ப்பை எழுதினார். எந்தவொரு தனியார் சொத்தையும் சமூக வளமாக எண்ணி அதை மீண்டும் பகிர்ந்தளிக்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை என்று கூறினார். அவ்வாறு செய்ததன் மூலம், அனைத்து தனியார் சொத்துக்களும் ஒரு சமூக வளம் என்ற சோசலிச நிலைப்பாட்டை நீதிமன்றம் மாற்றியது.
அவர் தனது தீர்ப்புகளின் மூலம், பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்குள் துணை ஒதுக்கீடுகளை வழங்க அனுமதித்தார். சிறைச்சாலைகளில் சாதி அடிப்படையிலான பாகுபாடு அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்றார். அஸ்ஸாம் ஒப்பந்தங்களின் அரசியலமைப்புத் தன்மையை நிலைநாட்டப்பட்டது. உத்தரபிரதேசத்தில் மதரஸாக்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் சிறுபான்மை கல்வி நிறுவனம் அல்ல என்ற தீர்ப்பை ரத்து செய்தது.
பல வரிவிதிப்பு சிக்கல்கள் மற்றும் நடுவர்மன்ற பிரச்னைகளைக் கையாளும் முடிவுகளில் அவர் ஒரு பகுதியாகவும் இருந்தார்.
கருத்து சுதந்திரம் மற்றும் ஊடகங்களை ஆதரிக்கும் அவரது சில தீர்ப்புகளுக்கு நிறைய எதிர்ப்புகள் இருந்தன. அவர் பத்திரிகையாளர்களான அர்னாப் கோஸ்வாமி மற்றும் ஜுபைர் அகமது ஆகியோருக்கு ஜாமீன் வழங்கினார், மத்திய அரசு கொண்டு வந்த உண்மைச் சரிபார்ப்புக் குழுவை நிறுவும் திட்டத்தை நிறுத்தினார், மலையாள செய்தி தொலைக்காட்சியான, மீடியா ஒன் மீதான ஒளிபரப்புத் தடையை மாற்றினார்.
முரண்கள்
சந்திரசூட்டின் பல தீர்ப்புகளில் நிறுவப்பட்ட கருத்துக்கள் எதிர்கால சந்ததியினருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றாலும், அதனால் வந்த பலன் என்ன என்று பல சட்ட வல்லுநர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியின் கூற்றுப்படி, “அவரது பல தீர்ப்புகள் இந்தப் பண்புகளைக் கொண்டிருந்தன. எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைக்கக்கூடிய கொள்கைகளைக் கண்டறிந்து தீர்ப்பளிக்கும் இந்தத் திறமை அவரிடம் இருந்தது. இதெல்லாம் சரிதான், ஆனால் அந்த குறிப்பிட்ட வழக்கில் நீதிமன்றம் என்ன செய்தது என்ற கேள்வி எழுகிறது”
“அவர் மற்றவர்களை அழுத்தமாக எதிர்கொள்ளவோ அல்லது விமர்சிக்கவோ தயங்குகிறார். விளைவுகளைப் பற்றி அஞ்சுகிறார். இது கவலையளிக்கிறது” என்று முன்னாள் நீதிபதி மேலும் கூறினார்.
உதாரணமாக, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் அவர் அளித்த தீர்ப்பு பிரபலமாக பேசப்பட்டது. அந்த வழக்கில், அரசியல் கட்சிகளுக்கு பெயர் குறிப்பிடாமல் நிதி வழங்கும் தேர்தல் பத்திர நடைமுறை சட்ட விரோதமானது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. தேர்தல் நடைமுறைகள் வெளிப்படையாக இருப்பதற்கு தேர்தல் நிதி தொடர்பான தகவல்கள் அவசியம் என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
ஆனால், அதன்பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நீதிமன்றம் மெத்தனமாக இருந்தது. உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த பின்னரும் அரசு அதிக பத்திரங்களை அச்சிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ரெய்டுகளுக்குப் பிறகு பத்திரங்கள் எவ்வாறு மாற்றப்பட்டன? பத்திரப் பரிமாற்றத்தைத் தொடர்ந்து அந்த பணம் எவ்வாறு விநியோகிக்கப்பட்டன? எனப் பல குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால் அவற்றை விசாரிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மனு தாக்கல் செய்த ஒரு அமைப்பின் சார்பில் பிரசாந்த் பூஷன் ஆஜரானார். இருப்பினும், 4 மாதங்களுக்குப் பிறகுதான் வழக்கு பட்டியலிடப்பட்டது. ஆனால் விசாரணைக்கு பிறகு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
“தேர்தல் பத்திரங்கள் வழக்கில் அடுத்தடுத்த நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை” என்று முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கூறினார்.
இந்த வழக்கைப் பற்றிப் பேசிய துஷ்யந்த் தவே “அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது, ஆனால் நோயாளி இறந்துவிட்டார்” என்று விமர்சித்தார்
குறிப்பாக சந்திரசூட் அவர் முக்கியமான வழக்குகள் என்று கருதிய வழக்குகளில் தானாக முன்வந்து விசாரித்த போது, விமர்சகர்கள் இந்த நிலைப்பாட்டை கேள்வி எழுப்பினர்.
உதாரணமாக, கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவமனை பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் மணிப்பூர் பாலியல் வன்முறை வழக்கில் கூட அவர் தானாக முன்வந்து விசாரணை நடத்தினார். மணிப்பூர் வன்முறை வழக்கில் எஸ்ஐடி விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டார்.
இருப்பினும், அவர் எந்த மாதிரியான வழக்குகளை தானாக முன்வந்து விசாரிப்பார் அல்லது நீதிமன்ற கண்காணிப்புக்கு உத்தரவிடுவார் என்பதற்கு தெளிவான வடிவங்கள் எதுவும் இல்லை.
அதானி குழும நிறுவனங்கள் “கார்ப்பரேட் வரலாற்றில் மிகப்பெரிய மோசடியை” நடத்துகிறது என்று அமெரிக்க நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் எழுப்பிய குற்றச்சாட்டுகள் மீதான நீதிமன்ற கண்காணிப்பு விசாரணைக்கும் அவர் அனுமதி வழங்கவில்லை.
இந்த வழக்கின் விசாரணைகளை செபியிடம் இருந்து சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மாற்ற வேண்டும் என்று கோரினர். ஆனால் செபியிடம் இருந்து அப்படி விசாரணையை மாற்ற எந்த முகாந்திரமும் இல்லை என்று நீதிமன்றம் கூறியது. செபியின் பாரபட்சமற்ற தன்மை குறித்த கேள்விகள் இருந்த நிலையில், இந்த தீர்ப்பு விமர்சிக்கப்பட்டது. இது அவரின் முரணான செயல்பாடுகளுக்கு மற்றொரு உதாரணம்.
சிவசேனாவின் 39 சட்டமன்ற உறுப்பினர்கள் உத்தவ் தாக்கரே குழுவிலிருந்து ஏக்நாத் ஷிண்டே குழுவுக்கு மாறியது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது, இது ஜூன் 2022 இல் தாக்கரேயின் அரசாங்கம் வீழ்ச்சியடைய வழிவகுத்தது.
சந்திரசூட் தலைமை நீதிபதியாகும் முன்பே உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்கினாலும், அவர் தலைமை நீதிபதியான 6 மாதங்களில் இந்த வழக்கு முடிக்கப்பட்டது.
இறுதியில் உத்தவ் தாக்கரேக்கு ஆதரவாக தீர்ப்பு இருந்தாலும் அவர் ஏற்கனவே ராஜினாமா செய்துவிட்டதால் நீதிமன்றத்தால் எதுவும் செய்ய முடியாது என்று கூறியது.
“மகாராஷ்டிராவில், அரசு செயல்பட்டு வந்தது. உடனடியாக தீர்ப்பு வழங்கி இருக்க வேண்டிய வழக்கு. எனவே, உத்தவ் தாக்கரேவை மீண்டும் முதல்வராக நியமித்ததன் மூலம், அவர் சரித்திரம் படைத்திருக்கலாம். இருப்பினும், சந்திரசூட் அதை விரும்பவில்லை” என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஒருவர் கூறினார்.
இது சண்டிகர் மேயர் தேர்தல் வழக்கிலிருந்து முற்றிலும் மாறுபட்டது, அங்கு நீதிமன்றம் இந்த விஷயத்தை விரைவாக விசாரித்து முடிவுகளை ரத்து செய்தது. ஆனால் மகாராஷ்டிரா வழக்கில் அப்படி நடக்கவில்லை.
சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, துணைநிலை ஆளுநரை காட்டிலும் டெல்லி அரசே தேசியத் தலைநகரில் சட்டங்களை இயற்றலாம் மற்றும் சிவில் சேவைகளை நிர்வகிக்கலாம் என்று தீர்ப்பளித்தது.
எவ்வாறாயினும், அவரது தீர்ப்புக்கு 10 நாட்களுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்ட ஒரு அவசரச் சட்டத்தால் இந்த தீர்ப்பு நீர்த்து போனது. இது தொடர்பான மேல்முறையீடு இன்னமும் நிலுவையில் உள்ளது.
சந்திரசூட் நீதிபதியாக இருந்தபோது கருக்கலைப்புக்கு ஆதரவாக தீர்பளித்தார். 2022 இல் திருமணமாகாத பெண்களுக்கும் கருக்கலைப்பு செய்ய உரிமை வேண்டும் என்று கூறியிருந்தார். அவரது தீர்ப்பில், ஒரு பெண்ணுக்கு மட்டுமே அவரின் உடலின் மீது முழு உரிமை உண்டு என்றும், மனநலம் உட்பட பல்வேறு காரணங்களுக்காக கருக்கலைப்பு செய்யப்படலாம் என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், 2023-இல் அவர் தனது சொந்த தீர்ப்பையே நீர்த்துப்போகச் செய்தார். மிகவும் விவாதிக்கப்பட்ட ஒரு வழக்கில், 26 வாரங்கள் கர்ப்பமாக இருந்த திருமணமான பெண்ணுக்கு உச்ச நீதிமன்ற அமர்வு முதலில் கருக்கலைப்புக்கு ஒப்புதல் வழங்கியது, ஆனால் சந்திரசூட்டின் அமர்வு இறுதியாக கருக்கலைப்புக்கு அனுமதி மறுத்தது.
தான் கடுமையான மனம் மற்றும் உடல்நலப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வருவதாகவும், தான் கர்ப்பமாக இருப்பதை தாமதமாகத் தெரிந்து கொண்டதாகவும், அதனால் நீதிமன்றத்தை அணுக முடியவில்லை என்றும் அந்தப் பெண் கூறினார். ஆனால் நீதிமன்றம் கருகலைப்புக்கு ஒப்புதல் வழங்கவில்லை, இது கருவின் உரிமைக்கு எதிரானது என்று கூறியது.
விமர்சகர்கள் இந்த வழக்கை கருக்கலைப்பு உரிமைகள் விஷயத்தில் இந்தியா ஒரு படி பின் தங்கியிருப்பதாக விவரித்தனர். இது ஒரு பெண்ணின் தன் உடல் மீதான உரிமையை நீர்த்துப்போகச் செய்தது.
கூட்டாட்சியைப் பொருத்தவரை, கனிமங்களை எடுக்கவும், மதுவுக்கு வரி விதிக்கவும் மாநிலங்களுக்கு உள்ள உரிமையை உறுதிப்படுத்தினார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப் பிரிவை மத்திய அரசு ரத்து செய்ததையும், ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
ஒரு மாநிலத்தை-குறிப்பாக குடியரசுத் தலைவர் ஆட்சியில் இருக்கும்போது, சட்டமன்றம் செயல்பாட்டில் இல்லாதபோது-மத்திய அரசு கலைக்கலாமா என்ற கேள்வி இந்த தீர்ப்பின் மூலமாக முற்றிலும் தவிர்க்கப்பட்டது.
இந்த தீர்ப்பு கூட்டட்சி முறையை பலவீனமாக்குகிறது என்று விமர்சிக்கப்பட்டது.
ராம ஜென்மபூமி வழக்கிலும் அவரது தலையீடு பற்றிப் பல விமர்சனங்கள் எழுந்தன. சந்திரசூட் இந்த விவகாரத்தில் தீர்ப்பை வழங்கிய அமர்வில் ஒரு பகுதியாக இருந்தார்.
மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதம் என்றும், கோவிலை இடித்தே பாபர் மசூதி கட்டப்பட்டது என்பதை தொல்பொருள் ஆய்வு நிரூபிக்கவில்லை என்றும் கூறினாலும், அந்த நிலத்தை இந்துக்களுக்கு வழங்க அந்த தீர்ப்பு வழிவகுத்தது. வேறொரு பகுதியில் மசூதி கட்டுவதற்கு முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி அந்த தீர்ப்பில் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த தீர்ப்பில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அதில் தீர்ப்பு எழுதியவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இது ஒரு விசித்திரமான நிகழ்வு. இருப்பினும், அந்த தீர்ப்பின் எழுத்து நடை சந்திரசூட்டின் தனித்துவமான பாணியுடன் பொருந்தியது.
பி.டி.ஐ. செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், இது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, எனவே ஒரு பெயரை மட்டும் குறிப்பிட வேண்டாம் என்று அமர்வு முடிவு செய்ததாக சந்திரசூட் கூறினார்.
ராமர் கோயில் தொடர்பான நீண்டகால வாக்குறுதியை நிறைவேற்ற பா.ஜ.க அரசுக்கு அனுமதி அளித்த இந்தத் தீர்ப்பு பல்வேறு சட்ட வல்லுநர்களிடமிருந்து விமர்சனத்தையும் பெற்றுள்ளது.
அரசியல் சாசன நிபுணரான கௌதம் பாட்டியா மற்றும் சுஹ்ரித் பார்த்தசார்த்தி ஆகியோர் இந்த தீர்ப்பை “சட்டம் மற்றும் நீதி ஆகிய இரண்டும் இதில் இல்லை” என்று அழைத்தனர்.
இருப்பினும், அந்த தீர்ப்பில் வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், 1992 இன் (Places of Worship Act, 1992) முக்கியத்துவம் குறித்து பல பத்திகள் உள்ளன.
சுதந்திரத்திற்குப் பிறகு ஒரு வழிபாட்டுத் தலத்தின் மத அடையாளம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, அயோத்தி மோதலைத் தொடர்ந்து இந்த ஒழுங்குமுறை இயற்றப்பட்டது. இது எதிர்காலத்தில் கோயில் – மசூதி மோதல்களைத் தடுக்கும் என்று பலர் நம்பினர்.
இருப்பினும், ஞானவாபி கோயில் பிரச்னை சந்திரசூட் முன் விசாரணைக்கு வந்தபோது. சுதந்திரத்தின் போது அந்த இடத்தின் மதப் பண்பு என்ன என்பதை தீர்மானிக்க நடத்தப்படும் ஆய்வை நீதிமன்றம் தடுக்கவில்லை. மசூதியில் நடைபெறும் ஆய்வுப்பணிகளுக்கு எதிராக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
நீதிமன்றம் தனது சொந்த கொள்கைகளை நீர்த்துப் போகச் செய்வதாக விமர்சிக்கப்பட்டது. இந்த வழக்கு உட்பட பல கோவில் வழக்குகள் இன்றுவரை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
சந்திரசூட் ஆதார் விவகாரத்தில் தனியுரிமைத் தொடர்பானத் தீர்ப்பை எழுதினார். அவர் அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட 12 இலக்க தனித்துவ எண் அரசியலமைப்பிற்கு முரணானது என்றும் அது ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார்.
அரசின் விமர்சகர்கள் மீது இந்திய அரசு ராணுவ தர ஸ்பைவேர் பெகாசஸைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்குகள் அவரது பதவிக்காலத்தில் நிலுவையில் இருந்தன. ஒரு தடவை கூட அதை விசாரிக்கவில்லை.
ஆதார் தவிர, பல வழக்குகளில் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதிலும் நினைவுகூரப்படுகிறார்.
உதாரணமாக, பீமா கோரேகான் வழக்கில், பெரும்பான்மை நீதிபதிகள் முடிவுக்கு மாறாக தீர்ப்பளித்த தலைமை நீதிபதி சந்திரசூட், மகாராஷ்டிர காவல்துறையின் நடத்தை அதன் பாரபட்சமற்ற தன்மையில் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், பீமா கோரேகான் வழக்கு உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் மீண்டும் விசாரிக்கப்படும் என்றும் கூறினார். ஆனால், அவரது பதவிக்காலம் முடிவுக்கு வரும் வேளையிலும் கூட பீமா கோரேகான் வழக்கு விசாரணைகள் தொடங்கப்படவில்லை.
இருப்பினும், அவரது தலைமை நீதிபதிப் பதவிக் காலத்தின் போது பிற அமர்வுகளினால் குறைந்தபட்சம் மூன்று பேர் ஜாமீன் பெற்றனர்.
இதற்கு நேர்மாறாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரதான குற்றம் சாட்டப்பட்டவராக இருந்த சொராபுதீன் ஷேக் என்கவுன்டர் வழக்கை மேற்பார்வையிடும் போது மாவட்ட நீதிபதி பி.எச்.லோயா காலமானதால் சந்திரசூட் அமர்வு தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் சுதந்திரமான விசாரணைக்கு அழைப்பு விடுக்கும் மனுக்களை நிராகரித்து அவர் ஒரு தீர்ப்பை எழுதினார்.
இந்த வழக்கின் தீர்ப்பு மற்றும் நடவடிக்கைகள், நீதிமன்ற வாதங்கள் உட்பட, பரவலாக விமர்சிக்கப்பட்டன. மூத்த பத்திரிகையாளர் மனு செபாஸ்டியன் இந்தத் தீர்ப்பை “நவீன கால ஏ.டி.எம் ஜபல்பூர்” (modern day ADM Jabalpur) என்று ஒப்பிட்டார்.
ஏ.டி.எம் ஜபல்பூர் வழக்கு தற்போதுவரை மிகவும் விமர்சிக்கப்படுகிறது. எமர்ஜென்சி காலத்தில் சாமானிய மக்களின் உரிமைகளை இடைநிறுத்துவது பற்றி அதிகம் விவாதிக்கப்பட்ட இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வில் நீதிபதி சந்திரசூட்டின் தந்தையும் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில்நுட்ப மேம்பாடு
சந்திரசூட் செய்த மாற்றங்களின் ஒரு நல்ல அம்சம் நீதிமன்றத்தை நவீனமயமாக்கியதாகும்.
உச்ச நீதிமன்றத்தில் மின்னணு குழுவின் (இ-கமிட்டி) தலைவராக இருந்த சந்திரசூட், பல முன்முயற்சிகளை மேற்கொண்டார். இப்போது அரசியல் சாசன அமர்வு வழக்குகளின் டிரான்ஸ்கிரிப்ட்கள் கிடைக்கின்றன, தீர்ப்புகள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன, மேலும் அனைத்து நீதிமன்றங்களை நேரடியாக ஒளிபரப்ப உச்ச நீதிமன்றம் தயாராகி வருகிறது.
“அந்த இடத்தை நவீனமயமாக்குவதிலும், வீடியோ கான்பரன்சிங் முறையை நிலைநிறுத்துவதிலும் இணையத்தில் மனு-தாக்கல் செய்வதை மிகவும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக மாற்றுவதிலும் அவர் மிகவும் சிறப்பாக செயல்பட்டார். நவீன உச்ச நீதிமன்றத்தைக் கட்டியெழுப்புவதிலும், அரசாங்க நிதியைப் பெறுவதிலும் அவர் சிறந்த பாரம்பரியத்தை விட்டுச் செல்கிறார் ” என்று சஞ்சய் ஹெக்டே கூறினார்.
“அவர் இந்த நீதித்துறையை பொது ஆய்வுக்கு ஏற்றவாறு மாற்றியுள்ளார்,” என்கிறார்.
சந்திரசூட்டின் மரபு
சில சட்ட வல்லுநர்கள் சந்திரசூட்டின் காலத்தை மிகுந்த விமர்சனத்துடன் பார்க்கிறார்கள். “அவரது பதவிக்காலம் பேரழிவை ஏற்படுத்தியது. அவரது மரபு மிகவும் மோசமான மற்றும் கசப்பான குறிப்புகளை விட்டுச் சென்றுள்ளது” என்று துஷ்யந்த் தவே கூறினார்.
அவர் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டதாக பலர் நம்புகிறார்கள்.
சஞ்சய் ஹெக்டே, “தொழில்நுட்ப மேம்பாடுகள் மற்றும் உச்ச நீதிமன்றத்திற்கு பொது அணுகலைப் பொருத்தவரை, அவர் வெளிப்படையாக அதை சிறப்பாகச் செய்துள்ளார். ஆனால், தார்மீக மேலாதிக்கம் என்று வரும்போது, உச்ச நீதிமன்றம் போதிய அளவு செல்லவில்லை என்றே தோன்றுகிறது. இருப்பினும், உச்ச நீதிமன்றத்தின் செல்வாக்கு எந்தளவுக்கு குறைந்துள்ளது, அது எவ்வளவு சரிவை சந்தித்தது என்ற கேள்விக்கு காலம் மட்டுமே பதில் சொல்லும். ” என்றார்.
முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் லோகூர் கூறுகையில், “சில சந்தேகத்திற்கிடமான தீர்ப்புகள் இருந்தபோதிலும், அவரது பதவிக்காலம் நீதித்துறை விஷயத்தில் சிறப்பாக செயல்பட்டது. நிர்வாக நீதியாகவும் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்” என்றார்.
“சந்திரசூட் மீது நாங்கள் அதிக எதிர்பார்ப்புகளை வைத்திருந்தோம்,” என்கிறார் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண்.