சிவகாசி: தலைவர்கள் வாழ்ந்த காலத்தில் எப்படி அழைக்கப்பட்டார்களோ, அப்படியே அழைப்பது தான் அந்த தலைவர்களுக்கு நாம் செலுத்தும் மரியாதை என பாமக மாநில பொருளாளர் திலகபாமா கூறியுள்ளார்.
சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ஆதரவு பாமக மாநில பொருளாளர் திலகபாமா கூறியதாவது: “தெருக்களுக்கு உள்ள சாதி பெயர்கள் மாற்றும் தமிழக அரசின் முடிவால் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. தலைவர்கள் வாழ்ந்த காலத்தில் எப்படி அழைக்கப்பட்டார்களோ, அப்படியே அழைப்பது தான் அந்த தலைவர்களுக்கு நாம் செலுத்தும் மாறியாதை. அதில் திருத்தம் செய்வது சரியாக இருக்காது. ஜி.டி.நாயுடு பெயரை அழித்த திமுக, இப்போது அரசியலுக்காக அவரது பெயரையே பாலத்திற்கு சூட்டியுள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றி உள்ளது வரவேற்க்கத்தக்கது. அப்போது தான் உண்மைக் காரணம் வெளிவரும். திராவிட மாடல் ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 1,968 விவசாயிகள் இறந்துள்ளனர் என்பது மக்கள் கவனத்துக்கே வரவில்லை. காவேரி – குண்டாறு திட்டத்திற்கு வரும் கூட்டத்தொடரில் நிதி ஒதுக்க, நிதியமைச்சரும் தொகுதி எம்எல்ஏவுமான தங்கம் தென்னரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவகாசி மாநகராட்சி சிறப்பாக செயல்படவில்லை என திமுக கவுன்சிலர்களே கூறுகின்றனர். கூட்டத்தின் கருபொருள் குறித்து விவாதம் செய்யாமலேயே கூட்டத்தை முடிப்பது சரியானதல்ல” என்று திலகபாமா கூறினார்.