பட மூலாதாரம், Annamalai/X
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
-
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் ஒன்றாக எதிர்கொள்ள இருப்பதாகப் பேச்சுகள் அடிபடும் நிலையில், சமீபத்தில் பா.ஜ.கவின் மாநிலத் தலைவரான கே. அண்ணாமலை அளித்த பேட்டி, இந்தக் கூட்டணியை கிட்டத்தட்ட உறுதிப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். அண்ணாமலை என்ன செய்யவிருக்கிறார்?
சில நாட்களுக்கு முன்பாக அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பில் மாநிலத்தின் நலன் குறித்தே பேசப்பட்டதாக பழனிசாமி தெரிவித்தாலும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை இரு கட்சிகளும் இணைந்தே எதிர்கொள்ளப்போவது தொடர்பான பேச்சுவார்த்தைகளே நடந்ததாக யூகங்கள் முன்வைக்கப்பட்டன.
இதற்குப் பிறகு உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்த சில கருத்துகளும் இந்தத் திசையிலேயே இருந்தன.
இந்தச் சந்திப்பு குறித்து இதுவரை விரிவாக எந்தக் கருத்தையும் தெரிவிக்காத கே. அண்ணாமலை, ஞாயிற்றுக்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, பா.ஜ.கவின் தொண்டனாகப் பணியாற்றவும் தான் தயார் என கட்சித் தலைமையிடம் கூறியிருப்பதாகக் கூறினார். மேலும், முன்பு தெரிவித்த கருத்துகளை மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போதும் 2021 சட்டமன்றத் தேர்தலின்போதும் அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.கவுக்கும் இடையில் இருந்த கூட்டணி, அண்ணாமலை முன்வைத்த கருத்துகளால்தான் முடிவுக்கு வந்தது.
ஆகவே, தற்போது மீண்டும் அதே கூட்டணி உருவானால் அதில் அண்ணாமலையின் நிலை என்ன என்ற கேள்விகள் எழுந்தன. மாநிலத் தலைவராக அண்ணாமலையை வைத்துக்கொண்டே, மாநில மட்டத்தில் அ.தி.மு.க உடனான கூட்டணிப் பேச்சு வார்த்தைகளை நடத்த முடியுமா என்ற கேள்வியும் இருந்து வந்தது. இந்தப் பின்னணியில்தான் அண்ணாமலை அளித்திருக்கும் செய்தியாளர் சந்திப்பு சில கேள்விகளுக்குப் பதில் அளித்திருப்பதோடு, மேலும் பல யூகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியது என்ன?
பட மூலாதாரம், Annamalai/X
ஞாயிற்றுக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, கூட்டணி குறித்து நான் எதையும் பேச விரும்பவில்லை எனக் கூறினார். மேலும், உள்துறை அமைச்சர் அமித் ஷா, தலைவர் ஜே.பி. நட்டா, சந்தோஷ் ஆகியோரிடம் தமிழக அரசியல் களம் எப்படியுள்ளது என விரிவாகக் கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“தமிழ்நாட்டில் பிரதான கட்சிகள் எப்படி இருக்கின்றன? நம்முடனேயே இருக்கும் டி.டி.வி. தினகரன், ஓ. பன்னீர்செல்வம் போன்றவர்களின் கட்சிகள் எப்படியிருக்கின்றன? தென் தமிழகத்தின் சூழல் எப்படியிருக்கிறது? மேற்கு மண்டலம் எப்படியிருக்கிறது” என்பவை குறித்துக் கீழ் மட்டம் வரை ஆராய்ந்து கட்சித் தலைமைக்கு அறிக்கை அளித்திருப்பதாகவும் அண்ணாமலை கூறினார்.
அதோடு, “துல்லியமாகத் தகவல் கொடுத்தால், தலைவர்கள் சரியாக முடிவெடுப்பார்கள். இந்த நிலையில் கூட்டணி குறித்து நான் ஏதும் சொல்ல விரும்பவில்லை. இது தொடர்பாக அமித் ஷா சொல்லியதையே இறுதிக் கருத்தாக எடுத்துக்கொள்ளுங்கள். நான் எந்தக் கட்சிக்கும், தலைவருக்கும் எதிரானவன் அல்ல. நான் டெல்லியில் பேசும்போது, தொண்டனாகப் பணியாற்றவும் தயார் என்ற வார்த்தையைச் சொல்லியிருக்கிறேன். அதன் பொருளையும் நன்றாக உணர்ந்து கொள்ளுங்கள்,” என்றார்.
அ.தி.மு.கவுடன் கூட்டணி இல்லை என்பதில் மாநிலத் தலைமை தெளிவாக இருப்பதாக முன்பு சொல்லியிருந்தீர்களே எனச் செய்தியாளர்கள் கேட்டபோது குறுக்கிட்ட அண்ணாமலை, “நான் எதையும் மாற்றிப் பேசுபவன் அல்ல. எதற்காக அரசியலுக்கு வந்தேனோ, அந்த நெருப்பு உள்ளே எரிந்துகொண்டிருக்கிறது. கட்சிதான் முதன்மையானது. எல்லா முடிவுகளையும் தொலைநோக்குப் பார்வையோடுதான் எப்போதும் எடுத்து வந்திருக்கிறோம். பா.ஜ.கவின் வளர்ச்சிதான் முக்கியம்” என்று மட்டும் தெரிவித்தார்.
பாஜகவில் அண்ணாமலையின் பயணம்
பட மூலாதாரம், Annamalai/X
கர்நாடகா கேடரை சேர்ந்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான கே. அண்ணாமலை, 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக பா.ஜ.கவில் இணைந்தார். அடுத்த ஓராண்டிற்கு உள்ளாகவே, அதாவது 2021ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி அக்கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக நியமிக்கப்பட்டார்.
இது அக்கட்சிக்குள் மட்டுமின்றி, கட்சிக்கு வெளியிலும் பலரது புருவங்களை உயர்த்தியது. இருந்தபோதும், அவரது தலைமையின் கீழ் கட்சி, மாநில அரசியலில் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியது.
இவரது தலைமையின் கீழ், 2024ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலை கட்சி சந்தித்தது. அ.தி.மு.க. கூட்டணியுடன் இணைந்து சந்தித்த சட்டமன்றத் தேர்தலில் நான்கு இடங்கள் பா.ஜ.கவுக்கு கிடைத்தன. இதற்குப் பிறகு, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, கே. அண்ணாமலை அ.தி.மு.க. குறித்து வைத்த விமர்சனங்களே இந்தக் கூட்டணி முறியக் காரணமாக அமைந்தது. இதனால் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-விடம் இருந்து பிரிந்து தனித் தனியாகப் போட்டியிட்டது. ஆனால், அதில் பா.ஜ.கவுக்கு வெற்றியேதும் கிடைக்கவில்லை.
இப்போது மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு ஓராண்டே இருக்கும் நிலையில், மீண்டும் அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் இணையக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. உள்துறை அமைச்சருடனான சந்திப்பு அரசியல் ரீதியானதல்ல என பழனிசாமி தெரிவித்தார். இருந்தபோதிலும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, அது அரசியல் ரீதியான சந்திப்பு என்பதை உறுதிப்படுத்துவதைப் போலவே பேசி வருகிறார். இந்தப் பின்னணியில்தான், கடந்த தேர்தலில் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியை ஏற்காத அண்ணாமலை இப்போது என்ன செய்வார் என்ற கேள்வி எழுந்தது.
அண்ணாமலை விரக்தியில் உள்ளாரா?
பட மூலாதாரம், Edappadi K Palanisamy/X
“அண்ணாமலையின் ஞாயிற்றுக்கிழமை பேட்டியில் விரக்தி தென்பட்டது. டெல்லி சென்ற அவர், கட்சியின் மூத்த தலைவர்களிடம் பல புள்ளிவிவரங்களை முன்வைத்து, விரிவாகப் பேசியுள்ளார். தனித்து நின்றால் எங்கெல்லாம் வாய்ப்பிருக்கிறது என்றெல்லாம் விளக்கியிருக்கிறார். ஆனால், தேசியத் தலைமை அந்தக் கருத்துகளை முழுமையாக ஏற்றதைப் போலத் தெரியவில்லை,” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.
மேற்கொண்டு பேசிய அவர், “நாடாளுமன்றத் தேர்தலில் இதேபோலத்தான் சொன்னீர்கள். ஆனால், ஏதுவும் நடக்கவில்லை’ என்று தலைமை கூறியிருக்கலாம். பழனிசாமியை பொறுத்தவரை, அண்ணாமலை மாநிலத் தலைவராக இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார். அதனால், அப்படி வாக்குறுதி ஏதும் வராத நிலையில், கூட்டணி குறித்து வெளிப்படையாகப் பேச அவர் தயங்குகிறார்.
இதற்கிடையில், செங்கோட்டையனை அ.தி.மு.க-வுக்குள் எடப்பாடிக்கு எதிராக நிறுத்தவும் சில சக்திகள் முயல்கின்றன. பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணி உறுதிப்பட்டால், அந்த முயற்சி தோல்வியடையும். இவற்றையெல்லாம் மனதில் வைத்துதான் அண்ணாமலையின் பேட்டியைப் பார்க்க வேண்டும்,” என்றார்.
பா.ஜ.கவின் தேசியத் தலைமையைப் பொறுத்தவரை அ.தி.மு.கவுடன் கூட்டணியாகச் செல்லவே விரும்பும் எனக் கூறும் ப்ரியன், “ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் விவகாரங்களில் சில உறுதி மொழிகளை எடப்பாடியிடம் இருந்து அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதனால்தான், அண்ணாமலை குறித்து எந்த வாக்குறுதியையும் தேசியத் தலைமை தரவில்லை” என்கிறார்.
ஆனால், அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி உறுதியாகிவிட்டால், அண்ணாமலை தலைவராகத் தொடர்வது கடினம் என்பதோடு, அது அவருக்கும் தெரியும் என்றும் கூறுகிறார் ப்ரியன். மேலும், அண்ணாமலை இதனால்தான் தொண்டராகவும் செயல்படத் தயார் எனச் சொல்லியிருப்பதாகவும் தெரிவித்தார் மூத்த பத்திரிகையாளரான ப்ரியன்.
பட மூலாதாரம், Edappadi K Palanisamy/X
இந்தக் கருத்தையே எதிரொலிக்கிறார் பத்திரிகையாளர் எஸ்.பி. லக்ஷ்மணன். “அண்ணாமலை வந்த பிறகுதான் கட்சி தீவிரமாகச் செயல்பட ஆரம்பித்தது என்பது உண்மைதான். ஆனால், கூட்டணிக்காக அவரை பா.ஜ.க. மாற்றலாம். அண்ணாமலையின் பேட்டி இதைத்தான் உணர்த்துகிறது” என்கிறார் அவர்.
பா.ஜ.கவை பொறுத்தவரை, தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணியை வீழ்த்துவதுதான் முக்கியமான விஷயம் என்கிறார் பா.ஜ.கவின் மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர். சேகர்.
“அண்ணாமலை துடிப்புமிக்க இளைஞர். தமிழ்நாட்டில் பா.ஜ.க. தனித்து வளர வேண்டும் என்பதுதான் அவரது செயல்திட்டம். இதற்காக, நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடலாம் என அவர் தேசியத் தலைமையிடம் சொன்னபோது, அவர்கள் அதற்கு ஒப்புக்கொண்டார்கள். ஆனால், பெரிய அளவில் அதற்குப் பலன் இல்லை.
மேலும், தி.மு.க. கூட்டணியுடன் வலுவாக இருக்கும் நிலையில், தாங்களும் இங்கே ஒரு கூட்டணியை அமைக்கலாம் என தேசியத் தலைமை முடிவெடுத்திருக்கக்கூடும். இதையடுத்துத்தான் அ.தி.மு.கவை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கொண்டுவர முடிவெடுத்தார்கள். அந்தக் கூட்டணி வேண்டாமென அண்ணாமலை நினைக்கலாம். ஆனால், அவர் கட்சியின் மிகத் தீவிரமான தொண்டர். ஆகவேதான் கட்சியின் நலன் முக்கியம் எனச் சொல்லியிருக்கிறார்” என்கிறார் அவர்.
கூட்டணி தொடர்பாக, தமிழ்நாடு பா.ஜ.கவில் உள்ள மூத்த தலைவர்கள் அனைவரிடமும் அபிப்பிராயம் கேட்கப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கும் எஸ்.ஆர். சேகர், எல்லாவற்றையும் மனதில் வைத்துத்தான் கட்சி முடிவெடுக்கும் என்கிறார்.
ஒருவேளை அண்ணாமலையை நீக்க மறுத்தால், அதை வைத்தே பா.ஜ.கவுடன் கூட்டணி அமையாமல் போனால் நல்லது என்ற எண்ணமும் அ.தி.மு.க.வுக்குள் சிலரிடம் இருக்கிறது என்கிறார் ப்ரியன்.
“அ.தி.மு.கவில் உள்ள பா.ஜ.கவின் நலன் விரும்பிகள் சொல்படி எடப்பாடி கே. பழனிச்சாமி அமித் ஷாவை சந்தித்திருக்கிறார். அந்தச் சந்திப்பின்போது, நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவின் வாக்கு வங்கி அதிகரித்திருப்பதாக பா.ஜ.கவினர் சுட்டிக்காட்டியுள்ளனர். பா.ஜ.கவின் வாக்கு சதவீதம் அதிகரித்திருந்தாலும், எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறும் அளவுக்கு கட்சி வளரவில்லை என்பதை அ.தி.மு.க. தரப்பில் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான் தேசியத் தலைவர்களைச் சந்தித்த அண்ணாமலை, புள்ளிவிவரங்களை முன்வைத்திருக்கிறார். அப்படியே கூட்டணி அமைந்தாலும் பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கக்கூடாது என்றும் தெரிவித்திருக்கிறார். ஆனால், அவருடைய பேச்சில் தென்படும் விரக்தியைப் பார்த்தால், இதெல்லாம் ஏற்கப்படவில்லை என்பது தெரிகிறது. இருந்தபோதும், இப்போதே கூட்டணி முடிவாகிவிட்டதாகவும் அண்ணாமலை நீக்கப்படப் போவதாகவும் சொல்ல முடியாது” என்கிறார் ப்ரியன்.
வரும் ஏப்ரல் 6ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதி தமிழ்நாட்டிற்கு வரவிருக்கிறார். அப்போது எடப்பாடி கே. பழனிசாமி அவரைச் சந்தித்தால் கூட்டணி குறித்த நகர்வுகள் மேலும் உறுதிப்பட்டதாகச் சொல்லலாம் என்கிறார் அவர்.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு