தலைவலி என்பது கிட்டத்தட்ட நாம் அனைவரும் ஏதோ ஒரு கட்டத்தில் எதிர்கொள்ளும் ஒன்று.
தலைவலி வந்தால், அது சில நிமிடங்கள் முதல் பல நாட்கள் வரை நீடிக்கலாம், வலியின் தாக்கம் கூர்மையாகவோ, மந்தமாகவோ, துடிப்பது போன்றோ அல்லது குத்துவதைப் போன்றோ இருக்கலாம். தலைவலியானது சில சமயங்களில் ஒருவரின் தலையைத் தாண்டி, உச்சந்தலை, முகம் அல்லது கழுத்து வரை பரவக்கூடும்.
பிபிசியின் What’s Up Docs wellness podcast நிகழ்ச்சியை நடத்தும் டாக்டர் சாண்ட் வான் டுல்லெக்கன், தலைவலி எப்படி இருக்கும் என அனுபவபூர்வமாக உணர்ந்தவர். அவருக்கு மாதத்திற்கு ஒரு முறை அல்லது ஆறு வாரங்களுக்கு ஒருமுறை தலைவலி வருவதாகவும், அப்போது “யாரோ என் கண் விழியில் துளையிடுவது போல் இருக்கும்” என்றும் கூறுகிறார்.
தலைவலிக்கு காரணம் என்னவென்று அச்சப்படுவது இயல்பானது என்றாலும், பிரிட்டனின் தேசிய ஒற்றைத் தலைவலி மையத்தின் மருத்துவரும் நிபுணருமான மருத்துவர் கேட்டி முன்ரோ, தலைவலி என்பது அரிதாகவே தீவிரமான ஒன்றாக இருக்கும் எனக் கூறுகிறார்.
“ஏதோ மோசமான பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகக் கவலைப்படுவது இயற்கையானது, ஆனால் அதற்கான வாய்ப்புகள் உண்மையில் மிக மிகக் குறைவு” என்று அவர் விளக்குகிறார்.
“முதல் முறை தலைவலி வந்தாலும் அல்லது தலைவலி தீவிரமாக இருந்தாலும், மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொள்ளுங்கள்” என்று அவர் அறிவுறுத்துகிறார். ஆனால் உங்களுக்கு லேசான, தொடர்ச்சியான தலைவலி இருந்தால், வீட்டிலேயே சில எளிய விஷயங்களை முயற்சித்துப் பார்க்கலாம், மருத்துவரையும் சந்தித்து ஆலோசனை பெறலாம்.
பட மூலாதாரம், Getty Images
1. தலைவலியின் தாக்கத்தின் அளவு
தலைவலியைப் புரிந்துகொள்வது உண்மையிலுமே உதவியாக இருக்கும் என்று டாக்டர் சாண்ட் வான் டுல்லெக்கன் கூறுகிறார், ஏனெனில் தலைவலி ஏற்படுவதற்கு பெரும்பாலும் ஒரே காரணம் இருக்காது. எனவே தலைவலி ஏற்படும்போது அதை குறித்து வைப்பது, அது எந்தளவு இருந்தது, அது ஏற்படுவதற்கான காரணங்களையும், அதன் வடிவங்களையும் தூண்டுதல்களையும் கண்டறிய உதவும்.
சிலருக்கு, இடி, மின்னல் போன்ற வானிலையால் தலைவலி ஏற்படும் என்றால், வேறு சிலருக்கு ஒளியின் உணர்திறனால் ஏற்படலாம்.
“இலையுதிர்காலத்தில் வாகனம் ஓட்டும்போது, மரங்கள் வழியாக சூரியனின் ஒளிக்கதிர்கள் தெரிவதைப் பார்த்தால் எனக்கு தலைவலி ஏற்படும்” என்கிறார் மருத்துவர் கேட்டி முன்ரோ.
தலைவலி ஏற்படும்போது குறித்து வைக்க வேண்டிய விஷயங்கள்
தலைவலி தொடங்கியபோது என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?
என்ன சாப்பிட்டீர்கள் அல்லது குடித்தீர்கள்?
எவ்வளவு நன்றாக தூங்கினீர்கள்?
வானிலை எப்படி இருந்தது?
பெண்கள் மாதவிடாய் சுழற்சியைக் கண்காணிக்க வேண்டும், ஏனெனில் தலைவலி, ஹார்மோன் மாற்றங்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
ஆனால், எதையும் மிகைப்படுத்தக்கூடாது என்று மருத்துவர் கேட்டி முன்ரோ எச்சரிக்கிறார்.
“நான் எனக்கு தலைவலி ஏற்படும்போது, எழுதிய குறிப்பை மிகவும் விரிவாக எழுதி தவறு செய்துவிட்டேன், அது மனச்சோர்வை ஏற்படுத்தியது. அதற்கு பதிலாக அதை எளிமையாக குறிப்பிடவேண்டும். அது ஏற்படுத்திய தாக்கத்தை சுருக்கமாக ஒன்று முதல் 10 வரை ஒரு எண்ணை எழுதுங்கள். தலைவலிக் குறிப்பு எழுதுவது, மோசமான நாட்களை மட்டுமல்ல, எத்தனை நாட்கள் சாதாரணமாக இருந்தது என்பதைக் கண்காணிக்கவும் இது பயனுள்ளதாக இருக்கும்.”
உங்கள் மருத்துவர் இந்தக் குறிப்புகளை மதிப்பாய்வு செய்து தலைவலியின் வடிவங்களை அடையாளம் கண்டு சிகிச்சை அளிக்க உதவியாக இருக்கும்.
பட மூலாதாரம், Getty Images
2. காஃபினை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துங்கள்
தலைவலி இருந்தால் காஃபினை உடனடியாகத் தவிர்க்க வேண்டியதில்லை என்று கூறும் மருத்துவர் கேட்டி முன்ரோ, உண்மை மிகவும் நுணுக்கமானது என்கிறார்.
தினசரி அடிப்படையில் அதிக காஃபின் உட்கொள்ளாமல், சிறிய, கவனமாக அளவுகளில் எடுத்துக் கொண்டால், அது வலி நிவாரணிகளை மிகவும் பயனுள்ளதாக மாற்றும்.
“காஃபின் ஓர் இணை வலி நிவாரணி. அதாவது, இது வலி நிவாரணியின் விளைவுகளை அதிகரிக்கும்,” என்று மருத்துவர் கேட்டி முன்ரோ விளக்குகிறார், ஆனால் அது தூக்கத்தை சீர்குலைக்கும் என்பதால் பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் அதைத் தவிர்க்கவும்.
உங்களுடைய காஃபின் நுகர்வு பற்றி இன்னும் விரிவாக சிந்திப்பது நல்லது. தினசரி அதை அதிகமாக உட்கொள்வது, “தலைவலியை” அதிகப்படுத்தலாம், மேலும் அதை உட்கொள்வதை திடீரென்று நிறுத்தினால், “பொருள் தவிர்த்தல் தலைவலி” (withdrawal headache) வரக்கூடும்.
தலைவலி ஏற்படுவதற்கு, நாம் உண்ணும் உணவும் காரணமாக இருக்கக்கூடும். என்ன சாப்பிடுகிறோம், எப்போது சாப்பிடுகிறோம் என்பது தலைவலிக்கான காரணமாக இருக்கலாம்.
உங்கள் ஆற்றல் அளவை உறுதிப்படுத்த உதவும் புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த மெடிட்டரேனியன் டயட் (Mediterranean diet) போன்ற உணவுமுறையைப் பின்பற்றுமாறு டாக்டர் முன்ரோ பரிந்துரைக்கிறார்.
ரத்தத்தில் சர்க்கரை அளவு உடனடியாக அதிகரிக்கும் இனிப்பு பதார்த்தங்களை தவிர்க்க வேண்டும், மேலும் உணவைத் தவிர்க்க வேண்டாம், ஏனெனில் அது உணவு உண்பதற்கான தூண்டுதலை அதிகரிக்கலாம்.
பால் பொருட்கள் உணவை குறைத்ததன் மூலம் தனக்கு தலைவலி குறைந்ததாக டாக்டர் முன்ரோ கூறுகிறார், இருப்பினும் இது அனைவருக்கும் பொருந்தாது.
“உணவை தவிர்க்காமல் சரியான நேரத்தில் சாப்பிடுவதையும், வேலைக்குச் செல்லும்போது வீட்டில் இருந்து மதிய உணவை எடுத்துச் செல்வதும் வித்தியாசத்தை ஏற்படுத்தியதைக் கண்டேன்,” என அவர் கூறுகிறார்.
தலைவலியைக் குறைப்பதற்கு உணவு மட்டுமல்ல, வழக்கமான உடற்பயிற்சி, ஆழ்ந்த தூக்கம், மன அழுத்தத்தை நிர்வகித்தல் மற்றும் உடலில் நீர்சத்து குறையாமல் இருப்பது ஆகியவை உதவும் என்று மருத்துவர் கேட்டி முன்ரோ கூறுகிறார்.
பகலில் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும், அப்போதுதான் சிறுநீர் வெளிர் நிறத்தில் இருக்கும், உடலுக்குத் தேவையான நீர்சத்தும் கிடைக்கும்.
பட மூலாதாரம், Getty Images
4. கோடீன் கொண்ட வலி நிவாரணிகளைத் தவிர்க்கவும்
“வலி நிவாரணி மாத்திரைகளை மருந்துக் கடைகளில் வாங்கலாம், அவை தலைவலியை நிர்வகிக்க உதவியாக இருக்கும்” என்கிறார் மருத்துவர் கேட்டி முன்ரோ.
“கோடீன் உள்ள எதையும்” (codeine) தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கும் அவர், அது சில தலைவலிகளை அடிக்கடி ஏற்படுத்தும் மற்றும் குமட்டல் போன்ற அறிகுறிகளை மோசமாக்கும் என்று சொல்கிறார்.
“வலி நிவாரணிகள் மிகச் சிறப்பாக செயல்படும் என்றாலும் அது உங்கள் தலைவலி எவ்வளவு கடுமையானது என்பதைப் பொறுத்தது” என்று சொல்கிறார்.
“தலைவலி அடிக்கடி வந்தாலும் அல்லது தீவிரமானாலும், மருத்துவர் உங்களுக்கு மிகவும் பொருத்தமான மருந்தைக் கண்டுபிடிக்க உதவ முடியும்.”
வாரத்தில் இரண்டு நாட்களுக்கு மேல் வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்ளாதீர்கள், ஏனெனில் இது “மருந்து-அதிகப்படியாவதால் ஏற்படும் தலைவலி” ஏற்படும் அபாயத்தைக் அதிகரிக்கும்.