சென்னை: “எஸ்ஐஆர் படிவம், தவெகவினருக்கு கிடைப்பதில்லை, கொடுக்க மறுக்கிறார்கள் என்ற புகார் எழுந்துள்ளது. தற்போது ஆட்சியில் இருப்பவர்கள், அவர்களுக்கு கைப்பாவையாக இருக்கக் கூடியவர்கள்தான் இதைச் செய்கிறார்கள்” என்று விஜய் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியது: “இந்திய அரசியல் சாசனம், தமிழக மக்கள் அனைவருக்கும் கொடுத்துள்ள உரிமையில் மிகவும் முக்கியமானது வாக்குரிமை. ஒரு மனிதன் உயிரோடு இருக்கிறான் என்பதற்கு அடையாளமாக இருப்பதில் அவனது ஓட்டுரிமை மிகவும் முக்கியம். அதனால்தான், வாக்குரிமை என்பது நமது உரிமை மட்டுமல்ல, அது நமது வாழ்வும்கூட.
ஒரு முக்கிய விஷயத்தை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகிறேன். இதை நான் முதலில் கேள்விப்பட்டபோது எனக்கே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. நான் பேசிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தமிழ்நாட்டில் இருக்கும் நம் யாருக்குமே ஓட்டுப்போடும் உரிமையே இல்லை என்று சொன்னால் நம்புவீர்களா? நான், நீங்கள் உட்பட யாருக்குமே அது இல்லை. நான் பயமுறுத்துகிறேன் என்று நினைக்காதீர்கள். அதுதான் உண்மையும்கூட. கொஞ்சம் ஏமாந்தால்கூட லட்சக்கணக்கானோருக்கு ஓட்டுப் போடும் உரிமையே இல்லாத ஒரு நிலை வந்தாலும் வரலாம்.
இதற்கு முக்கிய காரணம் அந்த எஸ்ஐஆர். இந்த எஸ்ஐஆர் தமிழ்நாட்டில் எப்படி வேலை செய்யப்போகிறது? கடந்த ஜனவரியில் எடுத்த கணக்கெடுப்பில் 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் யாருக்குமே தற்போது ஓட்டு போடும் உரிமை இல்லை.
பிஎல்ஓ என சொல்லப்படும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் வீடு வீடாகச் சென்று படிவத்தைக் கொடுப்பார், நாம் அதை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். தேர்தல் ஆணையம் அதை பரிசீலித்து, அனைத்தும் சரியாக உள்ளதாக என்பதை உறுதிப்படுத்திய பிறகு வாக்காளர் பட்டியலை வெளியிடுவார்கள். அந்த வாக்காளர் பட்டியலில் நமது பெயர் இருக்க வேண்டும். அப்போதுதான் நம்மால் ஓட்டு போட முடியும்.
அந்த புது பட்டியல் வரும் வரை நாம் வாக்காளரா என்பதை உறுதி செய்யவே முடியாது. ஒருவேளை அந்த புது பட்டியலில் நமது பெயர் இல்லை என்றால், நமது பெயரைச் சேர்க்க தனியாக ஒரு நடைமுறை உள்ளது.
இதுபோன்று நிறைய சிரமங்கள், குழப்பங்கள் இருப்பதால் மக்களுக்கு இதன்மீது ஒரு குழப்பம் இருக்கிறது. இது என்ன சரிபார்க்கும் நடைமுறையா, இல்லை மறைமுக மறு பதிவா, இல்லை இது ஒரு புதிய பதிவுதானா என்பது போன்ற நிறைய குழப்பங்கள் இருக்கின்றன.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். கணக்கீட்டுப் படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கும்போது, அதற்கான ஒப்புகைச் சீட்டை நீங்கள் கண்டிப்பாக வாங்கிக் கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியம். இது எல்லாமே வாக்காளர் பட்டியலில் ஏற்கெனவே பெயர் இருப்பவர்கள் பற்றியது.
புது வாக்காளர்களுக்கு படிவம் 6 என்று ஒன்று இருக்கிறது. அதை அவர்கள் பூர்த்தி செய்து நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். ஆன்லைனில் சமர்ப்பித்தால் அதற்கான ஸ்கிரீன்ஷாட்டை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். மொபைலில் மெசேஜ் வரும். அதை சேவ் பண்ணி வைத்துக்கொள்ள வேண்டும். வெளிநாட்டில் இருப்பவர்களும் எஸ்ஐஆர் படிவத்தை ஆன்லைனில் டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். அவர்கள் அதற்கான ஒப்புகைச் சீட்டை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
முக்கியமாக, உங்கள் பிஎல்ஓ யார் என்பதை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். தேர்தல் ஆணைய இணைய தளத்திற்குச் சென்றால் அந்த குறிப்பிட்ட பிஎல்ஓவின் தொடர்பு எண்ணை பெற முடியும். ஒருவேளை உங்களுக்கு எஸ்ஐஆர் படிவம் கிடைக்கவில்லை என்றால், நீங்கள் அவரை தொடர்பு கொண்டு படிவத்தை வாங்கி பூர்த்தி செய்து கொடுக்கலாம். முக்கியமாக அதற்கான ஒப்புகைச் சீட்டை நீங்கள் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
இதையெல்லாம் சரியாக செய்தாலும் இந்த எஸ்ஐஆர் மீது சில சந்தேகங்கள் இருக்கின்றன. அது என்னவென்றால், இந்த 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்களுக்கும் ஒரே மாதத்தில் எவ்வாறு படிவம் சென்று சேரும்? ஒருவேளை அவர்கள் வரும்போது நீங்கள் வீட்டை பூட்டிக்கொண்டு வேலைக்குச் சென்றுவிட்டால் என்ன செய்வது? அவர்கள் வருவார்கள் என்பதற்காக வேலையை விட்டுவிட்டு வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டுமா?
இதில் அதிகம் பாதிக்கப்படப் போவது உழைக்கும் மக்கள், ஏழைகள், வேலைக்குப் போகும் பெண்கள். இவர்களுக்கு சரியான பதிலை சொல்லப் போவது யார்? ஒரு நியாயமான எஸ்ஐஆர் எப்படி நடத்த வேண்டும். இறந்து போனவர்களை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும், போலி வாக்காளர்கள் இருந்தால் அவர்களை நீக்க வேண்டும், ஏற்கெனவே வாக்குரிமை இருப்பவர்களுக்கு எதற்காக இந்த பதிவு என்ற பெயரில் இவ்வளவு குழப்பங்கள்.
புதிய வாக்காளர்கள் மற்றும் வாக்குரிமை இல்லாதவர்களை மட்டும் சேர்த்தால் போதாதா? சமீபத்தில் 2021, 2024ல் நடந்த தேர்தலில் எப்படி எல்லோரும் வாக்களித்தோம். அதில் வாக்களித்தவர்களும்கூட புதிதாக பதிய வேண்டும் என்றால், ஏன் இந்த குழப்பம் என்பதுதான் எங்கள் கேள்வி. அதற்காகத்தான் நாங்கள் எஸ்ஐஆர்-ஐ எதிர்க்கிறோம்.
தற்போது புதிதாக புகார்கள் வரத் தொடங்கி உள்ளன. முக்கியமாக நமது தவெக தோழர்களுக்கு அந்த படிவம் கிடைப்பதில்லை, கொடுக்க மறுக்கிறார்கள் என்பதுதான் அந்த புகார். இதை யார் செய்கிறார்கள் என்பதை நான்தான் சொல்லி தெரிய வேண்டும் என்பதில்லை. தற்போது ஆட்சியில் இருப்பவர்கள், அவர்களுக்கு கைப்பாவையாக இருக்கக்கூடிய சிலர்தான் இதைச் செய்கிறார்கள்.
தவெக தொண்டர்கள் இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. எல்லோருக்கும் அந்த படிவம் சென்று சேர வேண்டும். இதில் மிகவும் உறுதியாக இருங்கள். அதையும் மீறி உங்களுக்கு படிவம் கிடைக்கவில்லை என்றால், ஆன்லைனில் டவுன்லோடு செய்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு, பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு இவ்விஷயத்தில் உதவுங்கள். தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், பழகியவர்கள், பழகாதாவர்கள் என அனைவருக்கும் உதவுங்கள்.
குறிப்பாக ஜென்ஸீ கிட்ஸ், முதல்முறை வாக்காளர்கள், புது வாக்காளர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும. முதல்முறை வாக்காளர்கள் படிவம் 6-ஐ பயன்படுத்தி சரியாக சமர்ப்பிக்க வேண்டும். வரக்கூடிய தேர்தலில் நீங்கள்தான் மிகவும் முக்கியமானவர்கள் என்பது எல்லோருக்கும் நன்றாக தெரியும்.
உங்களை தொந்தரவு செய்வதற்கு, உங்கள் பெயரை பட்டியலில் சேர்க்காமல் தவிர்ப்பதற்கு என்னவெல்லாம் தில்லுமுள்ளு வேலைகளைச் செய்ய முடியுமோ அனைத்தையும் அவர்கள் செய்வார்கள். ஏற்கெனவே எல்லா திசைகளிலும் நமக்கு பிரச்சினைகளை கொடுத்துக்கொண்டுதானே இருக்கிறார்கள். அது நடந்து கொண்டுதான் இருக்கும். அதை ஒன்றும் செய்ய முடியாது. ஓட்டு போடும் விஷயத்திலும் அவர்கள் என்ன உத்தமராகவா மாறப் போகிறார்கள்?
கூட்டங்களின்போது நான் ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் சொல்கிறேன் இல்லையா, இரண்டே இரண்டு பேருக்கு நடுவில்தான் போட்டியே என்று. மேடைக்கு மேடை அதை அவர்கள் நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள்.
வரப்போகும் தேர்தலில் நாம் யார் என்பதைக் காட்ட வேண்டும், நமது பலம் என்ன என்பதைக் காட்ட வேண்டும். அதற்கு வலிமை மிகுந்த அந்த ஆயுதத்தை நாம் கைகளில் எடுக்க வேண்டும். அந்த ஆயுதம் வேறு எதுவும் இல்லை, ஓட்டு, வாக்கு, ஜனநாயகம்தான். அது இருந்தால்தான் வெற்றியை நோக்கி நம்மால் பயணிக்க முடியும்.
வாக்குச்சாவடி முன்பாக தமிழ்நாடே திரண்டு நிற்க வேண்டும். அதைப் பார்த்து தமிழக வெற்றிக் கழகம்தான் தமிழ்நாடா அல்லது தமிழ்நாடுதான் தமிழக வெற்றிக் கழகமா என்பது போல இருக்க வேண்டும். வீடு என்று ஒன்று இருந்தால்தான் அதற்கு ஓடு மாற்ற முடியும் என்று அண்ணா சொல்லி இருக்கிறார். அதைப் போல ஓட்டு என்று ஒன்று இருந்தால்தான், இந்த நாட்டையே காப்பாற்ற முடியும்.
ஆன்லைனில் நாம் பதிவிறக்கம் செய்து வழங்குவதாக இருந்தால், வாக்காளர் அடையாள அட்டையில் இருக்கும் பெயரும், ஆதாரில் உள்ள பெயரும் ஒரே மாதிரியாக இருந்தால்தான் அது ஏற்கப்படும். இல்லாவிட்டால் ஏற்கப்படாது. எனவே, அதை கவனமாகச் செய்யுங்கள். பயனர்களுக்கு எளிதாக இருக்கும் முறையில் இதைச் செய்யலாமே என்று கேட்டதற்கு அதற்கெல்லாம் ஆட்கள் கிடையாது, அதையெல்லாம் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்கள். எனவே, முதல்முறை வாக்காளர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நம்பிக்கையோடு இருக்க வேண்டும். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்” என்று விஜய் கூறியுள்ளார்.