கரூர் துயரத்துக்குப் பின்னர் விஜய் இன்னும் வீட்டைவிட்டுக்கூட வெளியே வரவில்லை. ஆனால், அவரை கூட்டணிக்குள் கொண்டுவர இரண்டு பெரிய தேசிய கட்சிகளும் பக்கா பிளானோடு களமிறங்கியுள்ளன.
திமுகவோடு அசைக்க முடியாத பிணைப்போடு கூட்டணியில் தொடர்கிறது காங்கிரஸ். அதேபோல பாஜகவும் அதிமுகவை விடாமல் கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ளது. ஆனாலும், தேர்தல் அரசியலில் இதுதான் இறுதியான கூட்டணி நிலைப்பாடு என சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஏனென்றால், கரூர் துயரத்துக்குப் பிறகு விஜய்க்கு ஆதரவாக போட்டிப் போட்டி வேலை செய்துகொண்டிருக்கிறது பாஜகவும், காங்கிரஸும். கரூர் துயரத்தில் விஜய் மீது சிறு துரும்பும் படவிடாமல், மொத்த பழியையும் திமுக அரசின் மீது திசை திருப்பும் வகையில் முதல் நாள் முதலே அதிமுகவும், பாஜகவும் பேச ஆரம்பித்தன.
கூட்ட நெரிசலில் 41 உயிரிழந்ததில் தொடக்கத்தில் ரொம்பவே ஆடிப்போயிருந்த விஜய், தன்மீது தவறே இல்லை, எல்லாத்துக்கும் அரசுதான் காரணம் எனும் வகையில் வீடியோ வெளியிட காரணம் பாஜகவும், அதிமுகவும்தான் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். இதனை அடிப்படையாக வைத்தே ‘திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப ஓரணியில்’ இணைய வேண்டும் என்று பாஜக, விஜய்க்கு டிமாண்ட் வைத்தாகவும் சொல்கின்றனர்.
ஆனாலும், தொடக்கம் முதலே ‘பாசிச கட்சி’ என பாஜகவை விஜய் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், தற்போது கூட்டணி சேர்ந்தால் சரிப்பட்டு வருமா என யோசிக்கிறதாம் தவெக தரப்பு. ஆனால், 1967-ல் திமுகவுக்கு, நேரெதிர் கொள்கை கொண்டிருந்த ராஜாஜியே ஆதரவு தந்தார். அந்த அடிப்படையில் தற்போது திமுக அரசை வீழ்த்த நாம் கூட்டணி சேருவதில் தவறு இல்லை என்ற ரீதியில் விஜய்யிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
சில டெல்லி மேலிட தலைவர்கள் கூட விஜய்யிடம் பேசியதாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். ஆனாலும், விஜய் என்ன முடிவெடுப்பார் என்பதை அடுத்தடுத்த நகர்வுகள் மூலமே உணர முடியும்.
விஜய்-க்கு கைகொடுக்கும் காங்கிரஸ்?: விஜய் கட்சி தொடங்கியது முதலே திமுக, பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். ஆனால், காங்கிரஸ் குறித்து அவர் எதுவும் விமர்சித்ததே இல்லை. மற்றொரு பக்கம் ராகுல் காந்தியுடன் விஜய்க்கு நல்ல நட்பும் தொடக்கம் முதலே உள்ளது. இதனைத் தொடர்ந்தே கரூர் துயர் குறித்து உடனே விஜய்க்கு போன் போட்டு விசாரித்தார் ராகுல்.
தமிழக காங்கிரஸ் தலைவர்களும் சமீப காலமாக தவெக குறித்து பாசிட்டிவாகவே பேசி வருகின்றனர். மேலும், 2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்றும், ஆட்சியில் பங்கு கேட்போம் என்றும் தெம்பாகவே பேசுகின்றனர். காங்கிரஸாரின் இந்த கர்ஜனைக்குப் பின்னால் தவெக இருப்பதாகவே விவரமறிந்தோர் சொல்கின்றனர்.
தவெக தரப்பில் டெல்லி காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலரோடு பேசப்பட்டதாகவும், 60-க்கும் மேற்பட்ட தொகுதிகள், ஆட்சியில் பங்கு, துணை முதல்வர் பதவி உள்ளிட்ட ஆஃபர்கள் கொடுக்க விஜய் தயாராக இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இதனை தொடர்ந்தே தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சில ‘தவெகவோடு கூட்டணி வைப்பது ஒன்றும் பாவமில்லையே’ என பொடிவைத்து பேச ஆரம்பித்துள்ளனர்.
தவெகவோடு கூட்டணி வைத்தால் அது தமிழகம் மட்டுமின்றி விஜய் செல்வாக்கு செலுத்தும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் புதுச்சேரியிலும் காங்கிரஸுக்கு பலமாக மாறும் என அக்கட்சியின் தலைவர்கள் சிலர் கணக்கு போடுகின்றனர்.
அதே நேரத்தில், நாடாளுமன்றத்தில் திமுகவுக்கு கணிசமான எம்.பிக்கள் உள்ளனர். எனவே, டெல்லி லாபிக்கு பல விதத்திலும் காங்கிரஸுக்கு திமுகவின் தயவு தேவை. இதனால், திமுகவின் உறவை அத்தனை எளிதில் காங்கிரஸ் முறித்துக்கொள்ளாது. ஆனாலும், தவெகவை காரணம் காட்டி தொகுதி பேரத்தை காங்கிரஸ் அதிகரிக்க திட்டம் போடலாம் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
பாஜக, காங்கிரஸ் மட்டுமின்றி பாமக, அமமுக, ஓபிஎஸ், தேமுதிக, புதிய தமிழகம் போன்ற கட்சிகளும் தவெக-வுடனான கூட்டணி ஆப்ஷனை இன்னும் மூடவில்லை. எனவே, தேர்தல் நெருக்கத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு கூட்டணி அமையவும் வாய்ப்புள்ளது என்பதையே இது காட்டுகிறது.
விஜய்யை பாஜக கூட்டணிக்குள் இழுக்குமா அல்லது காங்கிரஸை கூட்டணிக்குள் விஜய் இழுப்பாரா என்பதையும், தமிழகத்தில் வலுவான மூன்றாவது அணி விஜய் தலைமையில் உருவாகுமா என்பதையெல்லாம் பொறுத்திருந்து பார்ப்போம்.