அரூர்: “கரூர் துயர சம்பவத்தில் தவெக தொண்டர்கள் நிர்வாகிகள் துயரத்தில் உள்ள நிலையில், குள்ளநரித்தனமாக அவர்களை கூட்டணிக்கு அழைக்கும் வகையில் செயல்படுவது துரோகத்தின் எப்பேர்பட்ட வகையை சார்ந்தது” என இபிஎஸ் குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
தருமபுரி மாவட்ட அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அரூரில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், அரூர் சட்டப்பேரவை (தனி) தொகுதிக்கு அமமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ஆர்.முருகனை வேட்பாளராக அறிமுகப்படுத்தினார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “அமமுகவை தவிர்த்துவிட்டு யாராலும் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை தற்போது உள்ளது.
2026-தேர்தலில் அமமுக அமைக்கும் கூட்டணி வெற்றி கூட்டணியாக இருக்கும். எங்கள் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். எந்த கூட்டணியில் இருந்தாலும் அரூர் தொகுதியில், ஏற்கெனவே அதிமுக சார்பில் வெற்றி பெற்ற ஆர்.ஆர். முருகன் போட்டியிடும் வகையில் உறுதியாக இந்த தொகுதியை ஒதுக்குவார்கள். ஏற்கெனவே சோளிங்கர் உள்ளிட்ட தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நாங்கள் தற்போது யாரோடும் கூட்டணி அமைக்கும் முயற்சியில் இல்லை. ஏற்கெனவே 2017-ல், சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தனித்து நின்று வெற்றி பெற்றோம். 2021 தேர்தலில் நாங்கள் வெற்றி பெற முடியாவிட்டாலும் துரோகம் செய்த பழனிசாமியை ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்தோம். வரும் காலத்தில் துரோகத்தை முதலீடாக கொண்டு அரசியலில் யாரும் வெற்றி பெற முடியாது என்பதை உணர்த்தும் வகையில் எடப்பாடி திமுக (எடிஎம்கே) இந்த தேர்தலில் படுதோல்வியடைய வேண்டும்.
பழனிசாமி தற்போது விரக்தியில் தரம் தாழ்ந்து பேசி வருகிறார். தனது கூட்டத்தில் மற்றொரு கட்சியின் கொடியை கொடுத்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். கரூர் துயர சம்பவத்தில் தமிழகமே துயரில் ஆழ்ந்து கொண்டிருக்கும் வேளையில், தவெக தொண்டர்கள், நிர்வாகிகள் துயரத்தில் உள்ள நிலையில், குள்ளநரித்தனமாக அவர்களை கூட்டணிக்கு அழைக்கும் வகையில் செயல்படுவது துரோகத்தின் எப்பேர்பட்ட வகையை சார்ந்தது?!
பழனிசாமி தலைமையில் கட்சி நாளுக்கு நாள் பலவீனமாகி வருகின்றது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபிக்கு எதிராக பேசி, மோடிக்கு துரோகம் செய்துவிட்டு வெளியேறியவர், இன்று பச்சோந்தி போல் பிஜேபிக்கு கூட்டணியில் சேர்ந்துள்ளார். இதனை அந்தக் கூட்டணியில் உள்ள பிற கட்சியினரே விரும்பவில்லை.
தவெக புதிய கட்சி, கொடுமையான விபத்து நடந்ததால் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர். கரூர் சம்பவம் ஒரு விபத்து, அதற்கு விஜய் தார்மிக பொறுப்பு ஏற்க வேண்டும். அதற்காக அவர் மீது குற்றம் சாட்டக்கூடாது. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் பிரச்சார பயணம் செல்ல உள்ளார். முதல்வர் வேட்பாளராக பழனிச்சாமி தோளில் வைத்துக் கொண்டு போகப் போகிறார். அவரது பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார் தினகரன்.