சென்னை: தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக இடையேதான் தேர்தல் போட்டி என விஜய் கூறியது கேலிக்கூத்தாக உள்ளது என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்தார்.
தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநில பொதுக்குழு கூட்டம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. கட்சியின் தலைவர் ஜான்பாண்டியன் தலைமை வகித்தார். பின்னர் அவர் கூறியதாவது:
ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் யாருடனும் சேரலாம். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார். சந்திப்பு குறித்த முடிவுகள் வெளியிடப்படவில்லை. கூட்டணி நல்லபடியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அனைவரும் ஒன்றிணைந்தால் நன்றாக இருக்கும். இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியை தமிழக முதல்வர் விமர்சித்திருக்கிறார். ஆளுங்கட்சிக்கு இதையெல்லாம் பார்த்து பயம் வந்திருக்கிறது.
மும்மொழி கொள்கை விவகாரத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பதாக திமுக அரசு பொய் பிரசாரம் செய்கிறது. வக்பு வாரியத்தில் ஊழலே இல்லை என்பது முதல்வருக்கு தெரியாதா? தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக இடையேதான் தேர்தல் போட்டி என விஜய் கூறியது கேலிக்கூத்தாக உள்ளது. எங்களின் கூட்டணி குறித்து இப்போது சொல்ல முடியாது. விரைவில் உரிய தகவலை வெளியிடுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், பொதுச்செயலாளர் பிரிசில்லா பாண்டியன் உள்பட மாநில – மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக கூட்டத்தில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மீண்டும் ஜான்பாண்டியன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேவேந்திரகுல வேளாளர்களை எஸ்.சி பட்டியலை விட்டு வெளியேற்ற வேண்டும். தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.