கரூர்: தமிழக வெற்றிக் கழக கட்சி நிர்வாகி பவுன்ராஜின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பாக கரூர் நகர போலீஸார் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த மதியழகனை திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகேயுள்ள கிராமத்தில் உள்ள க ட்சி நிர்வாகி வீட்டில் பதுங்கியிருந்தப்போது தனிப்படையினர் கைது செய்தனர். மேலும், அவருக்கு அடைக்கலம் கொடுத்த தவெக நிர்வாகி பவுன்ராஜையும் செப்.29-ம் தேதி கைது செய்தனர்.
கரூர் நகர காவல் நிலையத்தில் இருவரிடம் விடிய விடிய விசாரணை நடத்திய நிலையில், இருவரையும் கரூர் குற்றவியல் நீதிமன்றம் 1-ல் செப்.30-ம் தேதி நேரில் ஆஜர்படுத்தினர். அரசு தரப்பு, தவெக தரப்பு வழக்கறிஞர்கள் இருவரிடையே காரசாரமான விவாதங்கள் நடைபெற்ற நிலையில் மதியழகன், பவுன்ராஜ் ஆகிய இருவரையும் 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்ட்ரேட் பரத்குமார் உத்தரவிட்டார்.
இதையடுத்து பவுன்ராஜ் அக்.6-ம் தேதி கரூர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு தொடர்பாக இன்று (அக்.8) கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த மாவட்ட அமர்வு நீதிபதி இளவழகன், கைதான வழக்கின் விசாரணை ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால் ஜாமீன் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.