• Fri. Oct 3rd, 2025

24×7 Live News

Apdin News

தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய தனிப்படை அமைப்பு | task force formed to arrest tvk General Secretary bussy Anand

Byadmin

Oct 1, 2025


சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அக்கட்சியின் மாநில இணைச் செயலாளர் நிர்மல் குமாரை கைது செய்ய தனிப்படை அமைத்துள்ளது மத்திய மண்டல காவல் துறை. இந்த உத்தரவை மத்திய மண்டல காவல் துறையின் தலைவர் ஜோஷி நிர்மல் குமார் பிறப்பித்துள்ளார்.

கரூர் வேலு​சாமிபுரத்​தில் செப். 27-ம் தேதி நடை​பெற்ற தவெக பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். இது தொடர்​பாக கரூர் மேற்கு மாவட்​டச் செய​லா​ளர் வி.பி.ம​தி​யழகன், பொதுச் செய​லா​ளர் புஸ்ஸி ஆனந்த், மாநில இணைச் செய​லா​ளர் நிர்​மல்​கு​மார் ஆகியோர் மீது கரூர் நகர போலீ​ஸார் 5 பிரிவு​களின் கீழ் வழக்கு பதிவு செய்து விசா​ரணை நடத்தி வந்​தனர்.

இதில் தலைமறை​வாக இருந்த மாவட்​டச் செய​லா​ளர் மதி​யழகன், அவருக்கு அடைக்​கலம் கொடுத்த கட்சி நிர்​வாகி பவுன்​ராஜ் ஆகியோரை திண்​டுக்​கல் மாவட்​டம் குஜிலி​யம்​பாறை​யில் தனிப்​படை போலீ​ஸார் கடந்த 29-ம் தேதி கைது செய்​தனர். அவர்கள் இருவரையும் நேற்று கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் 15 நாள் நீதிமன்ற காவல் அறிவித்தார் நீதிபதி பரத்குமார்.

இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமாரை கைது செய்ய தனிப்படை அமைத்துள்ளது மத்திய மண்டல காவல் துறை. நேற்று தவெக தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டு கரூர் விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்திருந்தார்.



By admin