பட மூலாதாரம், TVK
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் விஜய், ‘2026ல் இரண்டு பேருக்கு இடையேதான் போட்டி. ஒன்று தவெக, மற்றொன்று திமுக.’ என்றார்
‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற்றது.
சுமார் 4 மணியளவில் மாநாட்டு மேடைக்கு வந்த விஜய் கட்சி கொடியை ஏற்றினர். அதற்கு முன்பு மாநாட்டு மேடையில் அமைக்கப்பட்டிருந்த பாதையில், விஜய் நடந்து சென்றபோது, தடுப்புகளை தாண்டி தொண்டர்கள் பலரும் அந்த பாதையிலேயே ஏறிவிட்டனர்.
மேடையில் அமந்திருந்த தனது தந்தை எஸ்.வி சந்திரசேகர், தாய் ஷோபா ஆகியோரை விஜய் கட்டியணைத்தார். தன்னை பார்த்தவுடன் எழுந்து நின்ற இருவரையும் அமரும்படி விஜய் வற்புறுத்தினார். பின்னர் தவெகவினர் உறுதிமொழி ஏற்றனர்.
பட மூலாதாரம், TVK
‘எம்ஜிஆருடன் பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை’
தொடர்ந்து மாநாட்டில் பேசிய விஜய், ”ஒரு சிங்கம் எப்போதும் தனித்துவம் வாய்ந்தது, சிங்கம் ஒருமுறை கர்ஜித்தால் 8 கிலோமீட்டருக்கு அதிரும். அப்படிப்பட்ட சிங்கம் வேட்டைக்கு மட்டும் தான் வெளியே வரும், வேடிக்கை பார்க்க வராது. சிங்கம் உயிருடன் உள்ள, பெரிய விலங்குகளையே தாக்கும், ஜெயிக்கும். உயிருள்ளாததை, கெட்டுப் போனதை தொடாது. அப்படிப்பட்ட சிங்கம் எதையும் தொடாது, தொட்டால் விடாது. சிங்கம் காட்டின் எல்லையை தானே வகுக்கும். கூட்டத்துடனும் இருக்கும், அஞ்சாமல் தனியே வரும். தனியாக இருந்தாலும் அது காட்டின் அரசாக இருக்கும். ” என்றார்
”எம்ஜிஆருடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. எம்ஜிஆரை மாதிரியே குணம் கொண்ட விஜயகாந்துடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவரும் மதுரையை சேர்ந்தவர்தான், அவரை மறக்க முடியாது.
1967, 1977ல் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதேபோன்று 2026ல் அப்படியொரு வரலாறு திரும்பப் போகிறது என்பதை உறுதியாக சொல்வதற்கான மாநாடு இது.” என்றார் விஜய்.
பட மூலாதாரம், TVK
‘2026ல் இரண்டு பேருக்கு இடையேதான் போட்டி’
உரையை தொடர்ந்த விஜய், ”ஷூட்டிங்கில் இருந்து வந்துவிட்டு எப்படி ஆட்சியைப் பிடிப்பார் என தற்போது கேட்கின்றனர். இந்த விஜய் பல லட்சம் பேர் கூடும் கூட்டத்தில் மட்டும் இருக்கிறார் என நினைக்காதீர்கள். இது வெறும் ஓட்டாக அல்ல, மக்கள் விரோத ஆட்சிக்கு ‘வேட்டாக’ இருக்கும். என்னுடைய பிணைப்பு மக்களுடன் மட்டும்தான்.”
”எங்களின் நிலைப்பாட்டில் எந்த சமரசமும் இல்லை. ஒரே கொள்கை எதிரி பாஜக தான், அரசியல் எதிரி திமுக தான்.
ஒட்டுமொத்த மக்களின் சக்தி எங்களுடன் இருக்கிறது. உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் உறவுகள் நம்முடன் இருக்கும்போது பாசிச பாஜகவுடன் ஏன் மறைமுக கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும்? நாங்கள் என்ன மகா ஊழல் கட்சியா?
2026ல் இரண்டு பேருக்கு இடையேதான் போட்டி. ஒன்று டிவிகே, மற்றொன்று திமுக.” என்றார்
பாடல் பாடிய விஜய்
‘எதிர்காலம் வரும் என் கடமை வரும்’ என்ற பாடலை பாடிய விஜய், “மக்கள் அரசியல்’ எனும் சவுக்கை கையில் எடுக்கலாமா? பாசிச பாஜக, ‘பாய்சன்’ திமுகவுக்கு எதிராக கையில் எடுக்கலாமா?” என்றார்.
”மோதி மூன்றாவது முறையாக ஆட்சியை கையில் வைத்திருக்கிறார். ஒட்டுமொத்தமாக நல்லது செய்ய வந்தீர்களா? அல்லது இஸ்லாமியர்களுக்கு எதிராக சதி செய்யவா?
மக்களின் பிரதிநிதியாக உங்களிடம் (மோதி) சில கேள்விகள் கேட்க வேண்டும். தமிழக மீனவர்கள் 800 பேருக்கு மேல் தாக்கப்பட்டிருக்கின்றனர். இனியாவது மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க கச்சத்தீவை மீட்டுத் தாருங்கள். உங்கள் முரட்டுப் பிடிவாதத்தால் நடத்தப்படும் நீட் தேர்வால், பல அநியாயங்கள் நடக்கின்றன. அதை சொல்வதற்கே மனம் வலிக்கிறது. நீட் தேவையில்லை, என அறிவியுங்கள் போதும். இதைச் செய்வீர்களா?” என்றார்
பட மூலாதாரம், TVK
”நேரடி பாசிச பாஜக அடிமை கூட்டணி ஒருபக்கம், மறுபுறம் மறைமுக பாஜக-ஆர்.எஸ்.எஸ் கூட்டணி. மக்கள் சக்தி இல்லாத ஊழல் கட்சிகளை அடிபணிய வைத்து 2029 வரைக்கும் சொகுசுப் பயணம் செல்லலாம் என திட்டம் வைத்துள்ளீர்களா?” என சாடினார் விஜய்.
”நேரடி – மறைமுக கூட்டணி வைத்தாலும் தாமரை இலையில் தண்ணீரே ஒட்டாது, தமிழக மக்கள் எப்படி ஒட்டுவார்கள்? ஒரு எம்.பி. சீட் கூட தரவில்லையென்பதால் பாஜக ஓரவஞ்சனை செய்கிறது. கீழடி நாகரிகத்தை மறைத்து பாஜக ‘உள்ளடி’ வேலை செய்கிறது.” என்றார்
ஷார்ட் வீடியோ
‘டெல்லி சென்று ரகசிய கூட்டம்’
”எம்ஜிஆரின் மாஸ் என்னவென்று எல்லோருக்கும் தெரியும். அவர் உயிருடன் இருக்கும்வரை ஒருவராலும் முதலமைச்சர் சீட் பற்றி கனவு கூட காணமுடியவில்லை. ‘எப்படியாவது சி.எம். சீட்டை எனக்கு தாருங்கள், என் நண்பர் வந்தவுடன் திரும்பித் தருகிறேன்,” என தன் எதிரியைக் கூட மக்களிடம் கெஞ்ச வைத்தவர்.
ஆனால், எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியை கட்டிக் காப்பது யார்? அப்பாவி தொண்டர்களே அதை சொல்ல முடியாமல் வேதனையில் தவிக்கின்றனர். அந்த அப்பழுக்கற்ற தொண்டர்களுக்கு 2026ல் யாருக்கு ஓட்டு செலுத்த வேண்டும் என நன்றாகவே தெரியும். அதிமுக-பாஜக கூட்டணி பொருந்தாக் கூட்டணி.
திமுக பாஜகவுடன் மறைமுக கூட்டணி வைத்திருக்கிறது. ஒரு ரெய்டு நடந்தால், டெல்லி சென்று ரகசிய கூட்டம் நடத்துகின்றனர் திமுகவினர். அந்த சந்திப்புக்குப் பிறகு அந்த பிரச்னை அப்படியே காணாமல் போயிருக்கும்.” என்றார் விஜய்
”இந்த ஆட்சியை பார்த்து நாம் எப்படி அமைதியாக இருக்க முடியும்? நீங்கள் (ஸ்டாலின்) நடத்தும் ஆட்சியில் யாருக்காவது பாதுகாப்பு இருக்கிறதா? தமிழ்நாட்டில் நடக்கும் ஊழல்களைப் பார்த்து ‘வாயே இல்லாத வயிறு கூட சிரிக்கிறது’. பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதுமா? வெளியே செல்லும் இடங்களில் பாதுகாப்பு இல்லை என பெண்கள் கதறுகின்றனர். அந்த கதறல் உங்களுக்குக் கேட்கிறதா? ஒட்டுமொத்தமாக எல்லோரும் சேர்ந்து திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.” என்றார்
‘234 தொகுதிகளிலும் விஜய்தான் வேட்பாளர்’
”தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் இந்த விஜய் தான் வேட்பாளர். உங்கள் வீட்டில் இருக்கும் ஒருவர்தான் வேட்பாளராக நிற்பார்கள். அந்த வேட்பாளரும் நானும் வேறு வேறு இல்லை. நீங்கள் அவருக்கு வாக்கு செலுத்தினால், எனக்கு வாக்கு செலுத்தியது போன்று.
என்னையும் மக்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. சினிமாவில் ‘மார்க்கெட்’ போனவுடன் நான் அரசியலுக்கு வரவில்லை, படைக்கலத்துடன் வந்திருக்கிறேன். எல்லாவற்றுக்கும் தயாராகவே அரசியலுக்கு வந்திருக்கிறேன்.” என்றார் விஜய்
பட மூலாதாரம், TVK
‘எல்லா சினிமாக்காரர்களும் கெட்டவர்கள் கிடையாது’
”என்னையும் மக்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. சினிமாவில் ‘மார்க்கெட்’ போனவுடன் நான் அரசியலுக்கு வரவில்லை, படைக்கலத்துடன் வந்திருக்கிறேன்” என்றார் விஜய்
”எல்லாவற்றுக்கும் தயாராகவே அரசியலுக்கு வந்திருக்கிறேன். நன்றிக்கடனுக்காக அரசியலுக்கு வந்திருக்கிறேன். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக மக்கள் செலுத்திய அன்புக்காக ஆதரவுக்காக வந்திருக்கிறேன். எல்லா அரசியல்வாதியும் நல்லவர் கிடையாது, எல்லா சினிமாக்காரர்களும் கெட்டவர்கள் கிடையாது” என்று கூறினார்
விஜய் விமர்சனத்துக்கு எடப்பாடி பழனிசாமி பதில்
“எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சியை கட்டிக்காப்பது யார்? இன்று அந்த கட்சி எப்படி இருக்கிறது?” என விஜய், விமர்சித்திருந்தார்.
இதற்கு விஜய் பெயர் குறிப்பிடாமல் பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, ”அதிமுக இப்போது யார் கையில் இருக்கிறதென சிலர் கேட்கிறார்கள். அறியாமையின் காரணமாக பேசுவதாக பார்க்கிறேன்” என்றார்.
அத்துடன் விஜயின் பேச்சில் முதிர்ச்சியற்ற தன்மை இருப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார்.
திமுகவின் டிவிகேஸ் இளங்கோவன், திமுகவை விமர்சித்தால் தான் முதலமைச்சர் ஆக முடியும் என்ற நோக்கத்தில் விஜய் விமர்சிப்பதாக கூறினார்
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு