பட மூலாதாரம், Facebook
(எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில விவரிப்புகள் சங்கடம் தரலாம்)
சென்னையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் பொறியியல் பட்டதாரி தஷ்வந்தின் மரண தண்டனையை அக்டோபர் 8 அன்று உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
சந்தேகத்துக்கு இடமில்லாமல் குற்றத்தை நிரூபிப்பதற்கு அரசுத் தரப்பு தவறிவிட்டதாகவும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.
‘தஷ்வந்தை விடுவிப்பது சமூகத்தில் துயரத்தை ஏற்படுத்தும் என்றாலும் ஊகத்தின் அடிப்படையில் தண்டனை வழங்க முடியாது’ எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. தஷ்வந்தின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது ஏன்?
தமிழ்நாட்டை உலுக்கிய படுகொலைகளில் சென்னை, போரூரை சேர்ந்த ஏழு வயது சிறுமியின் வழக்கும் ஒன்று.
2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதியன்று, தங்களின் 7 வயது மகளைக் காணவில்லை என காவல்நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்திருந்தனர்.
‘வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை வாங்குவதற்காக ஆறு மணியளவில் சிறுமியின் தாய் வெளியில் சென்றுள்ளார். சுமார் 7.15 மணியளவில் வீடு திரும்பியபோது மகளைக் காணவில்லை’ என, சிறுமியின் தந்தை அளித்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.
தங்கள் வீட்டுக்கு அருகில் வசிப்பவர்களின் உதவியுடன் சிறுமியை தேடும் முயற்சியில் பெற்றோர் ஈடுபட்டனர். ஆனால், அதற்கான முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை.
பட மூலாதாரம், Getty Images
‘தஷ்வந்த் பக்கம் திரும்பிய சந்தேகம்’
இந்தநிலையில், சிறுமியின் நிலையைப் பற்றி அறியும் வகையில் சிசிடிவி காட்சி ஒன்று அவரின் தந்தைக்கு கிடைத்தது. அது வீட்டுக்கு அருகில் உள்ள கோவிலில் பொருத்தப்பட்டிருந்தது.
இதன்பிறகு சிறுமியின் பெற்றோர் குடியிருக்கும் அபார்ட்மென்ட்டின் இரண்டாவது மாடியில் வசித்து வந்த தஷ்வந்த் என்ற 23 வயது இளைஞர் மீது சந்தேகப் பார்வை திரும்பியுள்ளது.
2017, பிப்ரவரி 8-ஆம் தேதியன்று காலையில் தஷ்வந்த் கைது செய்யப்பட்டார். காவல்துறையில் அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், எரிந்த நிலையில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டதாக நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்தது.
பட மூலாதாரம், Getty Images
‘இரண்டு பாட்டில்களில் பெட்ரோல்’
தஷ்வந்த் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸார், குற்றம் நடந்த இடத்தில் இருந்து தடயங்களை சேகரித்து தடயவியல் ஆய்வுக்கு அனுப்பினர்.
வழக்கில் அரசுத் தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், ”அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஊழியர் சந்தோஷ்குமாரிடம் புலனாய்வு அதிகாரி விசாரணை நடத்தினார். இரண்டு பாட்டில்களில் தஷ்வந்துக்கு பெட்ரோல் விற்றதாகவும் கிரடிட் கார்டு மூலம் அவர் பணம் செலுத்தியதாகவும் கூறியுள்ளார். இதற்கான ஒப்புகைச் சீட்டு பறிமுதல் செய்யப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது.
டி.என்.ஏ ஆய்வு மற்றும் சூப்பர் இம்போசிஸன் (superimposition) ஆகியவற்றின் அடிப்படையில் இறந்து போனது காணாமல் போன சிறுமிதான் என்பது உறுதி செய்யப்பட்டது.
நீதிமன்றத்தில் தஷ்வந்த் அளித்துள்ள வாக்குமூலத்தில், ”காவல் ஆய்வாளர் ஒருவர் தன்னைக் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று வெற்றுப் பத்திரங்களில் கையெழுத்து போடுமாறு நிர்பந்தித்தார்” எனக் கூறியுள்ளார்.
‘வழக்கு அரிதிலும் அரிதானது’
சிறுமி கொலை வழக்கில் நீதிமன்றக் காவலில் தஷ்வந்த் வைக்கப்பட்டார். தொடர்ந்து, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கின் விசாரணையில் அரசுத் தரப்பில் 30 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. ஆனால், இதனை மறுத்து, ‘குற்றம் செய்யவில்லை’ என தஷ்வந்த் தெரிவித்துள்ளார்.
வழக்கின் ஆவணங்களை ஆராய்ந்து, ‘தஷ்வந்த்தை ”குற்றவாளி” என கீழமை நீதிமன்றம் அறிவித்தது. அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தஷ்வந்த் மேல்முறையீடு செய்தார்.
மனுவை நிராகரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், ‘இந்த வழக்கு அரிதிலும் அரிதானது’ எனக் கூறி கீழமை நீதிமன்றம் அளித்த தண்டனையை உறுதி செய்தது.
பட மூலாதாரம், Getty Images
‘கடைசியாக பார்த்த சாட்சி’
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தஷ்வந்த் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தஷ்வந்த் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முழு வழக்கும் பொய்யானது மற்றும் ஜோடிக்கப்பட்டது என வாதிட்டார்.
சம்பவம் நடந்த நாளில் சிறுமியை கடைசியாக பார்த்த (Last seen) சாட்சியமாக முருகன் என்கிற வெங்கட முருகன் குணா என்பவர் அரசுத் தரப்பில் முன்னிறுத்தப்பட்டார்.
சிறுமி வசித்த கட்டடத்தின் இரண்டாவது மாடியில் தஷ்வந்துடன் சிறுமி விளையாடுவதை தான் கண்டதாக அவர் சாட்சியம் அளித்தார். “ஆனால், அந்த உண்மையை சிறுமியின் தந்தையிடமோ அல்லது சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை அதிகாரிகளிடமோ அவர் கூறவில்லை” என தஷ்வந்த் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
‘தஷ்வந்துடன் சிறுமி இருந்ததை அவரது பெற்றோருக்கு முருகன் தெரிவித்திருந்தால் இரண்டாவது மாடியில் உள்ள தஷ்வந்தின் வீட்டில் சோதனை நடத்துவதற்கான முயற்சிகள் நடந்திருக்கும். அப்படி எதுவும் நடக்கவில்லை. அப்படியானால், கடைசியாக தஷ்வந்துடன் பார்த்ததாகக் கூறப்படும் தியரி, ஏற்றுக் கொள்ள முடியாதது’ எனவும் தஷ்வந்த் தரப்பில் வாதிடப்பட்டது.
‘1 மணிநேர இடைவெளி’
‘பிப்ரவரி 5 ஆம் தேதி மாலை 6 மணியளவில் சிறுமி தனது தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். காய்கறிகளை வாங்கச் சென்ற சிறுமியின் தாய் ஒரு மணிநேரத்தில் வீடு திரும்பிவிட்டார். அதன்பிறகு சிறுமியைக் காணவில்லை. ஒரு மணிநேர இடைவெளியில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது’ என, நீதிமன்றத்தில் தஷ்வந்த் தரப்பு தெரிவித்தது.
‘காணாமல் போன ஒரு மணிநேரத்துக்குள் குழந்தையைத் தேடத் தொடங்கிவிட்டதால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தவும் அரசுத் தரப்பு கூறும் நேரத்துக்குள் சடலத்தை அப்புறப்படுத்துவதும் சாத்தியமாக இல்லை’ எனவும் அவர் வாதிட்டார்.
‘இப்படியொரு கொடூரமான ஒரு குற்றத்தை செய்த பிறகு உடலை மறைத்து எடுத்துச் சென்று பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்கி பிறகு அந்த உடலை நீண்ட தொலைவு எடுத்துச் சென்று எரித்ததாக’ அரசுத் தரப்பு கூறியிருந்தது.
“ஆனால், இது நம்ப முடியாத ஒன்று. ஒரு மணிநேரத்துக்குள் இவற்றைச் செய்ய முடியாது” என தஷ்வந்த் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
தன்னிடம் தஷ்வந்த் தவறாக நடந்த கொண்டதாக சிறுமி கூறினார் என்று அவரது தாய் வழக்கின் விசாரணையில் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனைக் குறிப்பிட்ட தஷ்வந்த் தரப்பு வழக்கறிஞர், ”சிறுமி காணாமல் போனதாக கூறப்பட்ட நாளில் தஷ்வந்த் மீது பெற்றோரின் சந்தேகம் சென்றிருக்காது என்பதையும் நம்ப முடியவில்லை” எனத் தெரிவித்தார்.
தீர்ப்பில் நீதிபதிகள் கூறியது என்ன?
வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சஞ்சய் கரோல் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வு, “தடயங்களை சேமித்து வைப்பது தொடர்பான செயல்முறையை அரசுத் தரப்பில் சரியாக விவரிக்கவில்லை. ஆதாரங்களை சேமித்து வைக்கும் அதிகாரியும் விசாரிக்கப்படவில்லை. மாறாக, தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்ட கடிதம் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டது” எனத் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
டி.என்.ஏ பகுப்பாய்வும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறியுள்ள நீதிபதிகள், ‘தஷ்வந்த்தின் ரத்த மாதிரியும் சம்பவம் நடந்து பல மாதங்களுக்குப் பிறகு (ஜூன் 8, 2017) சேகரிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
கடைசியாக நேரில் பார்த்ததாக சாட்சியம் அளித்த முருகன் குறித்துக் குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், சிறுமியை தேடிய நபர்களில் ஒருவராக முருகன் இருந்த போதிலும் இந்த உண்மையை அவர் பெற்றோரிடம் கூறவில்லை. காவல்துறையிலும் தெரிவிக்கவில்லை’ எனக் கூறியுள்ளனர்.
பட மூலாதாரம், Getty Images
சிசிடிவி காட்சிகள் எங்கே?
கடைசியாக பார்த்ததாக சாட்சியம் அளித்த நபரின் வார்த்தைகளை ஜோடிக்கப்பட்டதாகக் கருதி உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
வழக்கில் நீலநிற பையை தஷ்வந்த் எடுத்துச் செல்வதாக கூறப்படும் மங்கலான படத்தின் சிசிடிவி காட்சியை காவல்துறை சேகரிக்கவில்லை எனவும் நீதிமன்றத்தில் காட்சிப்படுத்தப்படவில்லை எனவும் தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மாறாக, சிறுமியின் பெற்றோருடன் சிசிடிவி காட்சிகளைப் பார்த்ததாக கோவில் ஊழியரான துரைவேலு என்பவர் வாக்குமூலம் அளித்துள்ளார். தான் அதைப் பார்த்ததாக விசாரணை அதிகாரியும் எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
மிகக் குறைந்த நேரத்தில் குழந்தையை மாடிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு பிறகு அவரைக் கொலை செய்து உடலை பையில் வைத்து எடுத்துச் சென்றதாகக் கூறப்படுவதை சந்தேகத்துக்குரியதாக பார்ப்பதாகவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
சிறுமி கொலை வழக்கில் 2017 ஆகஸ்ட் 17 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறியுள்ள உச்ச நீதிமன்றம், ‘ தஷ்வந்துக்கு வழக்கறிஞர் என யாரும் இல்லாத காலகட்டத்தில் குற்றச்சாட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன’ என விமர்சித்துள்ளது.
‘துயரத்தை ஏற்படுத்தும்’
தஷ்வந்த் மீதான குற்றத்தை சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிப்பதற்கு அரசுத் தரப்பில் தவறிவிட்டதாகக் கூறியுள்ள உச்ச நீதிமன்றம், இவரை விடுவிப்பது சமூகத்திலும், பாதிக்கப்பட்ட பெற்றோருக்கும் துயரத்தை ஏற்படுத்தும் என கூறியுள்ளது.
அதேநேரம், ஊகத்தால் நீதிமன்றங்கள் தண்டனை வழங்க முடியாது எனவும் தீர்ப்பில் தெரிவித்துள்ளது. ”குற்றவாளியின் குற்றத்தை சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிப்பதற்கு அரசுத் தரப்பு கடமைப்பட்டுள்ளது என்ற குற்றவியல் நீதித்துறையின் அடிப்படையை நம்மால் புறக்கணிக்க முடியாது” எனவும் நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
ஆனால், வருத்தப்படத்தகுந்த வகையில் அரசுத் தரப்பு அவ்வாறு செய்யத் தவறிவிட்டதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆகவே, ‘தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்வதாகவும் அவர் மீது வேறு எந்த வழக்குகளும் இல்லாவிட்டால் சிறையில் இருந்து அவரை விடுதலை செய்ய வேண்டும்’ எனவும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமி வழக்கின் தீர்ப்பு அரசியல்ரீதியாகவும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வழக்கில் வலிமையான ஆதாரங்களை காவல்துறை தாக்கல் செய்திருக்க வேண்டும். டிஎன்ஏ ஆய்வு முடிவுகள் கூட ஒத்துப்போகும் வகையில் இல்லாததால் தான் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்’ எனத் தெரிவித்துள்ளார்.
‘சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மறுஆய்வு மனுவை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய வேண்டும்’ எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பட மூலாதாரம், Facebook
‘கொலையை பார்த்த சாட்சிகள் இல்லை’
“சிசிடிவி காட்சிகளை வைத்துப் பார்க்கும்போது தஷ்வந்தை விசாரித்துள்ளனர். இந்த வழக்கில் அடிப்படையான விஷயங்களைப் பார்த்து மரண தண்டனை வழங்கப்பட்டது” என்கிறார் வழக்கறிஞர் ப.பா.மோகன்.
“சிறுமியை கடைசியாக பார்த்த நபர் என்ற கோட்பாட்டின்படி (Last seen theory) முருகன் என்ற நபர் சாட்சியம் அளித்தார். இரண்டாவது மாடியில் தஷ்வந்துடன் சிறுமி இருந்ததாக அவர் கூறியுள்ளார். ஆனால், கொலையை நேரடியாக பார்த்த சாட்சிகள் யாரும் இல்லை” எனக் கூறுகிறார் ப.பா.மோகன்.
பட மூலாதாரம், Facebook
நிரூபிக்கத் தவறிய 3 விஷயங்கள்
வழக்கில் சந்தர்ப்ப சூழலைக் கண்ட சாட்சிகள் இருந்ததாகக் கூறும் ப.பா.மோகன், “அரசுத் தரப்பில் மூன்று முக்கியமான விஷயங்களை நிரூபிக்க வேண்டும். கொலைக்கான உள்நோக்கம், கடைசியாக பார்த்த நபர், குற்றம் தொடர்பான பிற சூழல்கள் ஆகியவற்றை நிரூபிக்க வேண்டும்” என்கிறார்.
“பாலியல் ரீதியாக சிறுமிக்கு தொல்லை கொடுத்து கொன்றதாக காவல்துறை கூறுகிறது. சிசிடிவி காட்சியில் உள்ள காட்சிகளையும் செல்போனில் அவரது நடவடிக்கைகளையும் ஆய்வு செய்து தவறு செய்ததாக முடிவு செய்தனர். ஆனால், இவற்றையெல்லாம் நீதிமன்றத்தில் நிரூபித்திருக்க வேண்டும்” எனவும் ப.பா.மோகன் குறிப்பிட்டார்.
“புலனாய்வு அதிகாரியின் தவறை அடிப்படையாக வைத்து வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட நபரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது” எனக் கூறுகிறார், வழக்கறிஞர் பா.புகழேந்தி.
“தஷ்வந்த் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் சடலம் பறிமுதல் செய்யப்பட்டது என்கிறது காவல்துறை. இதற்கு கிராம நிர்வாக அலுவலர் சாட்சியாக இருந்துள்ளார். அவரோ, ‘சிறுமியை எரித்ததை வாக்குமூலமாக தஷ்வந்த் தர உள்ளதாக போலீஸ் கூறியது’ எனக் கூறியுள்ளார். அப்படியானால், முன்கூட்டியே தகவல் தெரிந்துள்ளதாக கூறி உச்ச நீதிமன்றம் வாக்குமூலத்தை ஏற்கவில்லை” எனவும் அவர் குறிப்பிட்டார்.
இனி அடுத்து என்ன நடக்கும்?
டிஎன்ஏ பரிசோதனை அறிக்கை வருவதற்கு முன்பே குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ததாகக் கூறும் ப.பா.மோகன், “குற்றம் சுமத்தப்பட்ட நபருக்கு தேவையான ஆவணங்களை அளிக்க வேண்டும். ஆனால், விசாரணை நடக்கும்போது தான் ஆவணங்களைத் தந்தனர்” என்கிறார்.
“குழந்தையை யார் கொன்றது என்பது முக்கியம். இந்தச் செயலில் தஷ்வந்த் ஈடுபட்டதாக சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கவில்லை என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பாக உள்ளது” எனக் கூறுகிறார், மற்றொரு வழக்கறிஞரான பா.புகழேந்தி.
“சிறுமி கொலை வழக்கை காவல்துறை மோசமாக கையாண்டுள்ளது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தெரியவருகிறது. இது மிக முக்கியமான வழக்கு என்பதால் தமிழக அரசு மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன” எனவும் அவர் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு