“இந்த வழக்குக்காக, என் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டி, நீதிமன்றத்தில் பல ஆண்டுகள் போராடினேன். இதற்காக எங்களின் மீத வாழ்க்கையையும் இழந்துவிட்டோம். இத்தனைக்குப் பிறகும் தஷ்வந்தை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இப்போது நாங்கள் என்ன செய்ய முடியும்? இன்னும் எத்தனை ஆண்டுகள் நாங்கள் போராடுவது?” என்கிறார் சென்னையில் 2017-ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட 7 வயது சிறுமியின் தந்தை.
இந்த வழக்கில் பொறியியல் பட்டதாரி தஷ்வந்திற்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை அக்டோபர் 8 அன்று உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
சந்தேகத்துக்கு இடமில்லாமல் குற்றத்தை நிரூபிப்பதற்கு அரசுத் தரப்பு தவறிவிட்டதாகவும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.
‘தஷ்வந்தை விடுவிப்பது சமூகத்தில் துயரத்தை ஏற்படுத்தும் என்றாலும் ஊகத்தின் அடிப்படையில் தண்டனை வழங்க முடியாது’ எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இப்படியான சூழலில் தான் சிறுமியின் தந்தையிடம் பிபிசி தமிழ் பேசியது.
சிறுமியின் இறப்புக்குப் பிறகு தானும் தன் மனைவியும் பிரிந்துவிட்டதாக அவர் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, தஷ்வந்திற்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை அக்டோபர் 8 அன்று உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
சிறுமியின் தந்தை சொன்னது என்ன?
“பணத்தை செலவழித்தது பொருட்டல்ல, ஆனால் நாங்கள் எங்கள் வாழ்க்கையையே இதனால் இழந்தோம்.” என்றார் சிறுமியின் தந்தை
“கீழமை நீதிமன்றம், உயர் நீதிமன்றம் என இரண்டு நீதிமன்றங்களிலும் சட்ட ரீதியாக போராடினோம். இப்போது உச்ச நீதிமன்றம் இப்படியொரு தீர்ப்பை அளித்துள்ளது. இனி நான் போராடினாலும் நீதி கிடைக்காது. இனி என்ன செய்ய முடியும்?” என தெரிவித்தார்.
யாருடைய அனுதாபமும் தனக்கு தேவையில்லை எனக்கூறிய அவர், “இந்த வழக்கில் நீதி கிடைக்க செய்ய வேண்டிய கடமை தமிழ்நாடு அரசுக்கும் நீதிமன்றத்திற்கும் இருந்தது. இன்று (அக்.,10) என் மகளின் பிறந்தநாள், ஆனால் அவளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது” என்றார்.
தன்னுடைய 14 வயது மகனும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் பள்ளிக்கு செல்வதில்லை என்றும் சிறுமியின் தந்தை கூறினார்.
“இங்கு பாதுகாப்பு இல்லை, அதனால் தமிழ்நாட்டை விட்டு வேறு இடத்திற்கு குடிபெயர உள்ளேன். என் மகன் மனைவியுடன் இருப்பதால், அவனிடமும் என்னால் பேச முடியவில்லை.” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சந்தேகத்துக்கு இடமில்லாமல் குற்றத்தை நிரூபிப்பதற்கு அரசுத் தரப்பு தவறிவிட்டதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
‘உடனடியாக நீதியை பெற முடிவதில்லை’
கடந்த 2018-ஆம் ஆண்டில் என்னிடம் பேசியிருந்த சிறுமியின் தந்தை, “இங்கே, நீதியைப் பெற தொடர்ந்து போராட வேண்டியிருக்கிறது. என் மகளின் வழக்கில் விசாரணை வேகமாக நடந்தும், காவல் துறையினர் தங்களால் இயன்ற ஒத்துழைப்பை வழங்கியும் நீதியை உடனடியாக பெற முடிவதில்லை.
பல வழக்குகளை காவல் நிலையத்தில் பதியவே முடிவதில்லையே. அத்தகைய வழக்குகள் நீதிமன்றத்திற்கு வருவதற்கே மிகப்பெரிய சட்ட போராட்டம் நடத்த வேண்டியுள்ளது.” என கூறியிருந்தார்.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு, இனி தன்னால் வழக்கில் எத்தகைய சட்ட ரீதியான போராட்டத்தைத் தொடர முடியும் என தெரியவில்லை என்றும் வழக்கறிஞர்களிடம் பேச வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இது குறித்து தமிழக அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக்,” தமிழ்நாடு அரசுக்கு மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன” என்றார்
வழக்கின் பின்னணி
2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதியன்று, தங்களின் 7 வயது மகளைக் காணவில்லை என காவல்நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்திருந்தனர்.
‘வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை வாங்குவதற்காக ஆறு மணியளவில் சிறுமியின் தாய் வெளியில் சென்றுள்ளார். சுமார் 7.15 மணியளவில் வீடு திரும்பியபோது மகளைக் காணவில்லை’ என, சிறுமியின் தந்தை அளித்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.
தங்கள் வீட்டுக்கு அருகில் வசிப்பவர்களின் உதவியுடன் சிறுமியை தேடும் முயற்சியில் பெற்றோர் ஈடுபட்டனர். ஆனால், அதற்கான முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை.
இந்தநிலையில், சிறுமியின் நிலையைப் பற்றி அறியும் வகையில் சிசிடிவி காட்சி ஒன்று அவரின் தந்தைக்கு கிடைத்தது. அது வீட்டுக்கு அருகில் உள்ள கோவிலில் பொருத்தப்பட்டிருந்தது.
சிறுமியின் பெற்றோர் குடியிருக்கும் அபார்ட்மென்ட்டின் இரண்டாவது மாடியில் வசித்து வந்த தஷ்வந்த் என்ற 23 வயது இளைஞர் மீது சந்தேகப் பார்வை திரும்பியுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
2017, பிப்ரவரி 8-ஆம் தேதியன்று காலையில் தஷ்வந்த் கைது செய்யப்பட்டார். காவல்துறையில் அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், எரிந்த நிலையில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டதாக நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்தது.
சிறுமி கொலை வழக்கில் நீதிமன்றக் காவலில் தஷ்வந்த் வைக்கப்பட்டார். தொடர்ந்து, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கின் விசாரணையில் அரசுத் தரப்பில் 30 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. ஆனால், இதனை மறுத்து, ‘குற்றம் செய்யவில்லை’ என தஷ்வந்த் தெரிவித்துள்ளார்.
வழக்கின் ஆவணங்களை ஆராய்ந்து, ‘தஷ்வந்த்தை ”குற்றவாளி” என கீழமை நீதிமன்றம் அறிவித்தது. அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தஷ்வந்த் மேல்முறையீடு செய்தார்.
மனுவை நிராகரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், ‘இந்த வழக்கு அரிதிலும் அரிதானது’ எனக் கூறி கீழமை நீதிமன்றம் அளித்த தண்டனையை உறுதி செய்தது. இதை எதிர்த்து தஷ்வந்த் செய்த மேல்முறையீடு வழக்கில்தான் அவரை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
”சம்பவ இடத்தில் பொருட்களை கைப்பற்றியவுடன் சாட்சிகள் முன்னிலையில் அவை சீல் வைக்கப்பட்டதாக சாட்சிகள் கூறவில்லை. மேலும் கைப்பற்றப்பட்ட தடயப் பொருட்கள் யார் பாதுகாப்பில் இருந்தது, யார் அந்த பொருட்களை தடய அறிவியல் அலுவலகத்திற்கு ஒப்படைத்தார்கள் என்று அவரை ஒரு சாட்சியாக இந்த வழக்கில் விசாரிக்கவில்லை. எனவே கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படும் தடய பொருட்கள் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது” எனத் தீர்ப்பில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
சிறுமியை கடைசியாக நேரில் பார்த்ததாக சாட்சியம் அளித்த முருகன் குறித்துக் குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், ‘சிறுமியை தேடிய நபர்களில் ஒருவராக முருகன் இருந்த போதிலும் இந்த உண்மையை அவர் பெற்றோரிடம் கூறவில்லை. காவல்துறையிலும் தெரிவிக்கவில்லை’ எனக் கூறியுள்ளனர்.