பட மூலாதாரம், Getty Images
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இது போன்ற திறந்த வெளி பொதுக்கூட்டங்களுக்கு செல்பவர்களுக்கு நெரிசல் தவிர, வேறு ஒரு ஆபத்தான பிரச்னை ஒன்றும் உள்ளது. அதுதான் நீரிழப்பு.
நேரடி சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருக்க நேரும் போது, நீரிழப்பு தவிர்க்க இயலாதது. இது யாருக்கெல்லாம் ஆபத்தானது, உணர முடியாமலே நீரிழப்பை எதிர்கொள்பவர்கள் யார் என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.
நீரிழப்பு பாதிப்பு என்பது கோடை காலங்கள் மட்டுமல்லாது பல்வேறு சூழல்களிலும் மனித உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக உள்ளது.
இது தொடர்பாக உள்ள கேள்விகளுக்கு பதில் காண நிபுணர்களிடம் பிபிசி தமிழ் பேசியது.
உடலில் அறிகுறி இல்லாமலே கூட நீரிழப்பு பாதிப்பு ஏற்படலாம் என்கிறார் எஸ்.ஆர்.எம் குளோபல் மருத்துவமனையின் மூத்த ஆலோசகரான மருத்துவர் ஆர். நந்தகுமார்.
நீரிழப்பு நோய்க்கான அறிகுறிகளை புறக்கணிப்பதும் பாதிப்பை தீவிரமாக்கும் என்கிறார் சென்னையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் மருந்தியல் துறை தலைவராக உள்ள எஸ். சந்திரசேகர்.
எந்தெந்த வழிகளில் நீரிழப்பு ஏற்படும்?
பட மூலாதாரம், Getty Images
மனித உடலுக்கு நீர் உட்கொள்வதும் நீர் வெளியேறுவதும் இருவேறு வழிகளில் நடைபெறுவதாகக் குறிப்பிடுகிறார் நந்தகுமார்.
“மனித உடலில் 70% நீர் நிறைந்திருக்கிறது. நீர் ஆதாரத்தை நாம் நேரடியாக மட்டுமல்லால் மறைமுகமாகவும் எடுத்துக் கொள்கிறோம். தண்ணீர் பருகுவதோடு மட்டுமல்லாமல் நாம் எடுத்துக் கொள்கின்ற பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மூலமாகவும் உடலுக்கு நீர்ச்சத்து கிடைக்கிறது.” என்றார்.
நீரிழப்பு ஏற்படும் வழிகளை விவரித்த அவர், “அதே வேளையில் நீரிழப்பு என்பது சென்சிபிள் (Sensible), இன்சென்சிபிள் (Insensible) என்கிற இரு வழிகளில் ஏற்படுகிறது. சென்சிபிள் நீரிழப்பு என்பது நம் உடலில் வழிகிற வியர்வை மற்றும் சிறுநீர் மூலமாக நீர் வெளியேறுவது. இன்சென்சிபிள் நீரிழப்பு என்பது நாம் பேசுவதன் மூலமாகவும் வாய் வழியாக சுவாசிப்பதன் மூலமாகவும் கூட ஏற்படுகிறது. தாக உணர்வு ஏற்படாமலே கூட நீரிழப்பு ஏற்படுவதும் உண்டு.” என்றும் தெரிவித்தார்.
நீரிழப்பு யாரை அதிகம் பாதிக்கும்?
நீரிழப்பு என்பது குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களைத் தான் எளிதாகவும் அதிகாகவும் பாதிக்கக்கூடியது என்கிறார் நந்தகுமார்.
“நீரிழப்பு நிலையில் நீர்ச்சத்து மட்டுமல்லாது எலக்ட்ரோலைட் இழப்பும் சோடியம் குறைபாடும் ஏற்படும். நமது தோலில் நீரிழப்பை தடுக்கும் அம்சம் உள்ளது. வயது அதிகமாக அது குறைந்துவிடுகிறது. அதனால் தான் முதியவர்களுக்கு எளிதில் நீரிழப்பு ஏற்படுகிறது. அவர்களுக்கு தாக உணர்வு குறைந்து தண்ணீர் கேட்க வேண்டும் என்கிற எண்ணமும் குறைந்துவிடுகிறது” என்றார்.
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நீரிழப்பு பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று கூறும் நந்தகுமார், “ஏற்கெனவே மருத்துவ பிரச்னைகள் இருப்பவர்களுக்கும், தொடர்ந்து மருந்து மற்றும் சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களுக்கும் நீரிழப்பு பாதிப்பு அதிகமாக இருக்கும். அவர்கள் கூடுதல் கவனமுடன் இருக்க வேண்டும்.” என்றும் தெரிவித்தார்.
வெளிப்புற சூழலில் தான் நீரிழப்பு பாதிப்புகள் அதிகம் ஏற்படுகிறது. ஏற்கெனவே மருத்துவ சிக்கல்கள் உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவது போல உடலில் கண்டறியப்படாத பிரச்னைகள் இருந்தாலும் நீரிழப்பால் அவை தூண்டப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
நீண்ட நேரம் தண்ணீர் எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் என்னவாகும்?
பட மூலாதாரம், Getty Images
நீரிழப்பு ரத்த ஓட்டத்தையும் நேரடியாக பாதிப்பதாகக் கூறுகிறார் நந்தகுமார்.
“சரியான அளவில் தண்ணீர் எடுத்துக் கொள்ளவில்லையென்றால் முதலில் தலைவலி ஏற்படும். ரத்தம் உறைவதும் நீரிழப்பின் இன்னொரு தீவிரமான பாதிப்பாக உள்ளது. ரத்தத்தில் உள்ள நீர் தான் ரத்த ஓட்டத்திற்கு உதவியாக உள்ளது. ரத்தத்தில் நீரின் அளவு குறைகிறபோது ரத்த ஓட்டமும் பாதிக்கப்படும். இதனால் இதய நோய் உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.”
“ரத்தம் ஓட்டம் குறைகிறபோது மனித உடல் இதயம் போன்ற முக்கியமான உறுப்புகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் ரத்தத்தைச் செலுத்தும், அதனால் வெளிப்புற உறுப்புகள் முதலில் பாதிக்கப்படும். தசைகள் உடைய ஆரம்பிக்கும். உரிய நேரத்தில் நீரிழப்பு பாதிப்பை சரி செய்யவில்லையென்றால் முக்கிய உறுப்புகளும் பாதிப்படைய துவங்கும். இதய துடிப்பு அதிகமாகிறபோது நீரிழப்பால் ஏற்படும் சிக்கல்கள் மேலும் அதிகரிக்கும். ரத்த அழுத்தம் அதிகமாகி சிறுநீரகம் பாதிக்கப்படும்.” என்று தெரிவித்தார்.
எந்தச் சூழலில், யாருக்கு தாக உணர்வு ஏற்படாமல் போகும்?
நீரிழப்பின் அறிகுறிகள் வெளிப்படையாக தென்படும் என்றாலும் அறிகுறிகள் இல்லாமலுமே நீரிழப்பு ஏற்படலாம் என்கிறார் நந்தகுமார்.
அதனை விளக்கிப் பேசுகையில், “நரம்பியல் பிரச்னைகள் இருப்பவர்களுக்கு தாக உணர்வு ஏற்படுவது குறையும். தாக உணர்வு ஏற்படாமலே நீரிழப்பும் ஏற்படும். ஒவ்வொரு தனிப்பட்ட நபரின் உடல்நிலையைப் பொருத்து பாதிப்புகள் வேறுபடும்.” என்றார்.
நீண்ட நேரம் குளிரூட்டப்பட்ட சூழல்களில் இருப்பவர்களுக்கு உடலியல் ரீதியான மாற்றங்கள் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
“குளிரூட்டப்பட்ட அறைகளில் இருப்பவர்களுக்கு வியர்வை வெளியேறுவதும் குறையும். இதனால் தாக உணர்வும், சிறுநீர் வெளியேற்றமும் பாதிக்கப்படுகிறது. தாக உணர்வு மற்றும் வியர்வை வெளியேற்றம் ஏற்படாமலே நீரிழப்பு உடலில் ஏற்படுகிறது. இத்தகைய சூழலில் இருப்பவர்கள், வெயில் நேரத்தில் வெளியில் அதிகம் செல்லும் அனுபவம் இல்லாதவர்கள் திடீரென பொதுவெளிக்கு வருகிறபோது தாக உணர்வு ஏற்படாமலே நீரிழப்பு ஏற்படும்.”
நீரிழப்பு பாதிப்பும் என்பது வயதையும் ஒருவரின் தனிப்பட்ட உடல்நிலையையும் பொருத்து வேறுபடும் என்கிறார் மருத்துவர் சந்திரசேகர்.
“நீர் என்பது மனித உடலில் ரத்தம் மற்றும் அனைத்து உறுப்புகளிலும் உள்ளது. ஒரு வயது வந்த நபர் தினசரி சராசரியாக 2 லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் ஒருவர் இருக்கின்ற சூழலைப் பொருத்து அதிகமான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.”
“தாக உணர்வு, சோர்வு, வியர்வை, பசி மற்றும் சிறுநீர் வெளியேறுவது தான் நீரிழப்பின் முதன்மை அறிகுறிகளாக உள்ளன. சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் நீரிழப்பு பாதிப்பு என்பது இருக்காது. அதே சமயம் சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறினால் அவர்களுக்கு நீரிழப்பு பாதிப்பு உண்டு. எனவே அறிகுறிகளைப் புறக்கணிக்கக்கூடாது.” என்று தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு