திண்டுக்கல்: கொடைக்கானல் கீழமலைப்பகுதி தாண்டிக்குடியில் தவெக தலைவர் விஜய் திடீர் ‘ரோடு ஷோ’ நடத்தினார். அவரைக் காண சாலையின் இரு புறங்களிலும் காத்திருந்த மலைக்கிராம மக்கள் உற்சாகக் குரல் எழுப்பி வரவேற்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதி மலைக் கிராமமான தாண்டிக்குடி சுற்றுப்புறப் பகுதிகளில் தவெக தலைவர் நடிக்கும் படப்பிடிப்பு கடந்த மூன்று தினங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த மே.1-ம் தேதி சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வந்த விஜய், அங்கிருந்து கொடைக்கானல் கீழ் மலைப் பகுதி கிராமமான தாண்டிக்குடிக்கு கார் மூலம் சென்றடைந்தார். மே 2-ம் தேதி படப்பிடிப்பில் பங்கேற்றார்.
அன்று அப்பகுதியில் மழை பெய்தது. முதல் நாள் மக்கள் அவரைக் காண காத்திருந்தபோதும் படப்பிடிப்பு முடிந்து காருக்குள்ளே அமர்ந்து பயணித்தார். இந்நிலையில் நேற்று மே 3-ம் தேதி படப்பிடிப்பு முடிந்து தங்கியிருக்கும் ஓட்டலுக்கு திரும்பும்போது திடீரென திறந்த ஜீப்பில் பயணித்து ‘ரோடு ஷோ’ நடத்தினார்.
தாண்டிக்குடி மலைக் கிராமத்தில் சாலையின் இருபுறமும் உள்ளூர் மக்கள், விஜய்யை காண வெளியூர்களில் இருந்து வந்திருந்த ரசிகர்கள், கட்சியினர் என நீண்ட நேரம் காத்திருந்தனர். விஜய்யை திறந்த வாகனத்தில் கண்டவுடன் உற்சாகமுடன் குரல் எழுப்பினர். இதில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டனர்.
இன்று மே 4-ம் தேதி மாலையில், படப்பிடிப்பு முடிந்து தங்கியிருக்கும் ஓட்டலுக்கு திரும்புவதை எதிர்பார்த்து மீண்டும் சாலையின் இரு புறங்களிலும் காத்திருந்து விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். விஜய் வருகையால் தாண்டிக்குடி கிராமத்தில் திருவிழா நடப்பது போன்ற கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக காணப்பட்டது.
படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், மே 5-ம் தேதி (நாளை) பகல் 12 மணிக்கு தாண்டிக்குடியில் இருந்து கார் மூலம் மதுரைக்கு புறப்படுகிறார். அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.