பட மூலாதாரம், Facebook/Mohanlal
பவித்ரம் (மலையாளம் 1994) திரைப்படத்தின் இறுதிக் காட்சி படப்பிடிப்பு. படத்தின் நாயகன் மோகன்லால், அதிர்ச்சியில் மனப்பிறழ்வுக்கு ஆளானவர் போல நடிக்க வேண்டும். ஆனால் அவரால், அந்தக் காட்சிக்கான சரியான நடிப்பு என்ன என்பதை முடிவு செய்ய முடியவில்லை.
அங்குமிங்கும் நடந்தபடி யோசித்துக் கொண்டே இருந்தார். 10 நிமிடங்கள் கழித்து இயக்குநர் ராஜீவ்குமாரிடம் வந்து, பல்லை அழுத்தமாகக் கடித்துக் கொண்டு, வாயை அரைப்பதைப் போல இந்தக் காட்சியில் நடிக்கட்டுமா என்று கேட்டார். அதற்கு இயக்குநரும், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனும் சரி என்றனர். அந்தக் காட்சி படமாக்கப்பட்டது.
பவித்ரம் திரையரங்குகளில் வெளியானது. மோகன்லாலின் நடிப்பை பார்த்த மனோதத்துவ நிபுணர் ஸ்வராஜ் மணி, ராஜீவ் குமாரை அழைத்தார். கடைசியில் பல்லைக் கடித்துக் கொண்டே மோகன்லால் நடித்த காட்சியைப் பார்க்கும்போதுதான், நீங்கள் எவ்வளவு நன்றாக ஆராய்ச்சி செய்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது என்றார். அதற்கு ராஜீவ் குமார், அது மோகன்லாலே யோசித்து நடித்தார் என்று சொல்ல அந்த நிபுணர் ஆச்சர்யப்பட்டுப் போனார்.
“மோகன்லால் மிகச் சிறந்த நடிகர் என்பதற்கான உதாரணம் இது. அவர் வாழ்க்கையில் கண்ட அத்தனை விஷயங்களும் அவர் மனதில் பதிந்திருக்கின்றன. ஒரு கதாபாத்திரத்துக்கு தேவையான சரியான நேரத்தில் அவரால் அதை மீண்டும் மனதில் கொண்டு வர முடிகிறது. அவர் இந்தியாவின் மிகச்சிறந்த நடிகராக இருப்பதற்கு இதுவே காரணம் என்று நினைக்கிறேன்” என்று ஸ்வராஜ் மணி கூறினார்.
நடிகர் மோகன்லாலின் நடிப்பின் மகத்துவம் பற்றிய ஒரே ஒரு சிறிய சம்பவம் இது. இதை ஒரு பேட்டியில் இயக்குநர் ராஜீவ் குமார் பகிர்ந்துள்ளார். அந்த மனோதத்துவ நிபுணர் மட்டுமல்ல, சக நடிகர், நடிகைகள், மற்ற மாநில மொழிப் படங்களின் நட்சத்திரங்கள், ஏன் சர்வதேச நடிகர்கள் வரை அனைத்து கலைஞர்களாலும் மிகச்சிறந்த நடிகராகப் போற்றப்படுபவர் மோகன்லால்.
பட மூலாதாரம், Facebook/Mohanlal
இந்திய சினிமாவின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்கினை கவுரவிக்கும் விதமாக, அவருக்கு தாதா சாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமா துறையின் உச்ச கவுரவமாகக் கருதப்படும் இவ்விருதினை, இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணனுக்குப் பிறகு பெறும் இரண்டாவது கேரள மாநிலக் கலைஞர் மோகன்லால்.
இப்படிப்பட்ட ஒரு நடிகர் நடித்த முதல் படம் குறித்து பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மோகன்லால் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதுதான் நடிகனாக வேண்டும் என்று முடிவு செய்தார்.
அவரது நண்பர்களுடன் சேர்ந்து ‘திறநோட்டம்’ என்கிற படத்தை உருவாக்கினார். அதில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பல நெருக்கடிகளுக்குப் பிறகு இந்தப் படம் வெளியீட்டுக்குத் தயாரானது. ஆனால், ஒரே ஒரு திரையரங்கில் மட்டுமே வெளியானது. இதனால் வந்த தடம் தெரியவில்லை.
இதற்குப் பின் இதே குழு ஒரு தமிழ் படம் எடுக்கத் திட்டமிட்டு, அதற்குப் ஒரு பாடல் பதிவு வரை பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும், அதற்கு முன்னால் மோகன்லாலுக்கு அடுத்த திரைப்பட வாய்ப்பு கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.
அவரைத் தேர்ந்தெடுத்தது, தயாரிப்பாளர் நவோதயா அப்பச்சன். ஆனால், இந்த முதல் வாய்ப்பு வில்லனாக நடிக்க கிடைத்தது. 1980ஆம் ஆண்டு, மஞ்சில் விரிஞ்ச பூக்கள் என்கிற படத்தில் வில்லனாக நடித்தார் மோகன்லால். இது இயக்குநர் ஃபாசிலின் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பட மூலாதாரம், Facebook/Mohanlal
படம் மாபெரும் வெற்றியடைய, மோகன்லாலின் கதாபாத்திரம் பேசப்பட்டது. தொடர்ந்து சில படங்களில் வில்லனாகவே நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. முதல் சில படங்களிலேயே ரசிகர்களிடையே இவருக்கென தனி அங்கீகாரம் உருவானது.
1982-ஆம் ஆண்டு, நவோதயா அப்பச்சன் தயாரிப்பில் படயோட்டம் என்கிற திரைப்படம் உருவானது. இதில் ப்ரேம் நசீர் நாயகனாக நடித்தார். அந்த காலகட்டத்தில், மலையாளத்தில் மிக அதிகமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படம் இது.
பல பிரபலமான நடிகர்கள் நடித்த இந்தப் படத்திற்கு இன்னொரு பெருமையும் உள்ளது. மம்முட்டி, மோகன்லால் என இரண்டு உச்ச நட்சத்திரங்களுமே இந்தப் படத்தில் சேர்ந்து நடித்திருந்தனர். அதிலும், மம்முட்டிக்கு மகனாக மோகன்லால் நடித்திருந்தார்.
மோகன்லாலின் முதல் நேர்மறை கதாபாத்திரமும் இதுவே. 1983-ஆம் ஆண்டு, கிட்டத்தட்ட 25 படங்களில் நடித்தார் மோகன்லால். தனது நடிப்புத் திறனை நிரூபிக்கும் வகையில் ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தார். நாயகனாக அவருக்குக் கிடைத்த முதல் பெரிய வெற்றி 1984ஆம் ஆண்டு வெளியான இவிடே துடங்குன்னு என்கிற திரைப்படமே.
இந்தக் காலகட்டம், மோகன்லால் என்கிற பெயரை, மலையாள சினிமா ரசிகர்களிடயே அழுத்தமாகப் பதித்தது. பின்னாட்களில் பல சிறந்த திரைப்படங்களைத் தந்த ப்ரியதர்ஷன், ஸ்ரீனிவாசன், சத்யன் அந்திக்காட் உள்ளிட்ட கதாசிரியர்கள், இயக்குநர்கள் எனப் பலருடன் மோகன்லால் இணைய ஆரம்பித்ததும் இந்த காலகட்டத்தில்தான் நடந்தது.
மோகன்லால் தீவிரமாக இயங்கி வந்த இந்தக் காலமே, மலையாள சினிமாவுக்கும் பொற்காலமாக அமைந்தது தற்செயல் அல்ல. சிக்கலான, நுணுக்கமான, ஆழமான கதாபாத்திரங்களை, கதாசிரியர்களால் எழுத முடிய வேண்டுமென்றால், அதை ஏற்று நடிக்கும் ஒரு சிறந்த நடிகரும் இருக்க வேண்டியது அவசியம். மோகன்லால் அந்த நடிகராகத் தான் இருந்தார்.
1984-ஆம் ஆண்டு பூச்சக்கொரு மூக்குத்தி என்கிற திரைப்படத்தின் மூலம் ப்ரியதர்ஷன் இயக்குநராக அறிமுகமானார். இந்த நகைச்சுவைத் திரைப்படத்தில் மோகன்லால், நெடுமுடி வேணு, ஜகதி ஸ்ரீகுமார் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்தனர். இதுவரை மோகன்லாலை வைத்து அதிக திரைப்படங்கள் இயக்கியது ப்ரியதர்ஷன் மட்டுமே. கிட்டத்தட்ட 44 படங்களில் இருவரும் இணைந்து பணிபுரிந்துள்ளனர்.
பட மூலாதாரம், Facebook/Mohanlal
1986-ஆம் ஆண்டு, மோகன்லாலின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான ஆண்டு. இந்த ஆண்டில் தான், சத்யன் அந்திக்காட் இயக்கத்தில் டி.பி.பாலகோபாலன் எம்.ஏ என்கிற திரைப்படத்தில் நடித்ததற்காக, மோகன்லாலுக்கு முதல் முறையாக சிறந்த நடிகருக்கான கேரள மாநில விருது கிடைத்தது.
இதன் பிறகு 8 முறை சிறந்த நடிகருக்கான கேரள மாநில விருதினை மோகன்லால் வென்றுள்ளார். இதே வருடம் மீண்டும் சத்யன் அந்திகாட் இயக்கத்தில் மோகன்லால் நடித்த சன்மனஸ்ஸுள்ளவர்க்கு சமாதானம் என்கிற திரைப்படம், மோகன்லாலுக்கு முதல் ஃபிலிம்ஃபேர் விருதையும் பெற்றுத் தந்தது.
இது மட்டுமல்ல, இதே ஆண்டு, தம்பி கண்ணந்தானம் இயக்கத்தில் மோகன்லால் நடித்த ராஜவிண்டே மகன் என்கிற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று, மோகன்லாலுக்கு சூப்பர்ஸ்டார் அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது. கேரள இளைஞர்களின் ஆதர்ச நட்சத்திரமாக உருவெடுத்தார் மோகன்லால்.
ஒரு பக்கம் ராஜாவிண்டே மகன் போன்ற வணிகரீதியான திரைப்படங்களில் நடித்து வந்தாலும் ஜி.அரவிந்தன், ஹரிஹரன், எம்.டி.வாசுதேவன் நாயர், பத்மராஜன், பரதன், லோகிததாஸ் உள்ளிட்ட மலையாள சினிமாவின் மிகச்சிறந்த படைப்பாளிகளுடன் மோகன்லால் அடுத்தடுத்து திரைப்படங்களில் பணிபுரிந்தார்.
கதாசிரியர் ஸ்ரீனிவாசனுடன் மோகன்லால் இணைந்து நடித்த பல சமூக அவல நகைச்சுவைத் திரைப்படங்கள், ரசிகர்களிடையே இன்றளவும் பிரபலமாக உள்ளன. அந்தக் காலகட்டத்தில் படித்த கேரள இளைஞர்களிடையே இருந்த வேலையின்மை, கோபம், கவலை ஆகியவற்றை, இந்த இணை மிகத் தத்ரூபமாக திரைப்படங்களில் காட்டினர்.
400 திரைப்படங்களுக்கும் அதிகமாக நடித்துள்ளார் மோகன்லால். நாடோடிக்காட்டு, ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா, சித்ரம், கிரீடம், பரதம், கிலுக்கம், தேவாசுரம், தேன்மாவின் கொம்பத், ஸ்படிகம், காலாபாணி, வானபிரஸ்தம், கம்பனி, தன்மாத்ரா, ப்ரமரம், த்ரிஷ்யம் என மோகன்லாலின் சிறந்த திரைப்படங்களைப் பற்றியே தனியாகக் கட்டுரை எழுதலாம். பத்மஸ்ரீ, பத்மபூஷன், 5 தேசிய விருதுகள் என அவர் வென்ற விருதுகளின் பட்டியல் தனி.
இந்திய சினிமாவில் பல உச்ச நட்சத்திரங்கள் இருக்கின்றனர். ஆனால் அனைவருமே சிறந்த நடிகர்களாக அறியப்பட்டதில்லை. மோகன்லால் ஒரு சிறந்த நடிகராகத் தன்னை நிரூபித்துக்கொண்ட பிறகே உச்ச நட்சத்திரமாக உருவெடுத்தார். அவர் தனித்து நிற்பதற்கான முக்கியக் காரணம் இதுவே.
நாடோடிக்காட்டின் நகைச்சுவைக்கும், கிரீடம் படத்தின் உணர்ச்சிமிக்க நடிப்புக்கும் தொடர்பே இருக்காது. முக்கியமாக அவரது எந்த கதாபாத்திரத்தின் நடிப்பும், நடிப்பு போலவே இருக்காது. கண்ணில் லேசான கண்ணீர், புன்சிரிப்பு, சிறிய நடுக்கம் என, சின்னச்சின்ன அசைவுகளில் வசனமே இன்றி அவரால் உணர்வுகளைக் கடத்த முடியும்.
பட மூலாதாரம், Facebook/Mohanlal
“அவரால் ஒரு கதாபாத்திரமாக சில நொடிகளில் மாறிவிட முடியும். அந்த ஷாட் முடிந்தவுடன் சட்டென அதிலிருந்து வெளியே வந்து இயல்பாகிவிடவும் முடியும். அவர் இந்த மாயாஜாலத்தை தொடர்ந்து பல வருடங்களாக இழக்காமல் இருக்கிறார்” என்று மோகன்லாலின் நடிப்பைப் பற்றி இயக்குநர் சத்யன் அந்திக்காட் வியந்து பாராட்டியுள்ளார்.
பரதம் படத்துக்காக உடல் எடை கூடியதாக இருக்கட்டும், வானபிரஸ்தம் திரைப்படத்துகாகக் கதகளி பயிற்சி எடுத்துக் கொண்டதாக இருக்கட்டும், ஒரு கதாபாத்திரத்துக்கான முன் தயாரிப்பு வேலைகளையும் அர்ப்பணிப்புடன் செய்பவர் மோகன்லால்.
வணிகரீதியான வெற்றியை நோக்கி மட்டும் ஓடாமல், பரீட்சார்த்த முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டும் வருகிறார் மோகன்லால். 2005ஆம் ஆண்டு தன்மாத்ரா திரைப்படத்தில் அல்ஸைமர் பாதிப்புக்குள்ளான கதாபாத்திரத்தில் கலங்கடித்த மோகன்லால், அடுத்த வருடமே வடக்கும்நாதன் திரைப்படத்தில் பை-போலார் குறைபாடால் பாதிக்கப்பட்டவராகவும் நடித்தார்.
இவ்விரண்டு கதாபாத்திரங்களுக்கும் தொடர்பே இருக்காது. இப்படிப் பல திரைப்படங்களில், மனநலப் பிரச்னைகள் கொண்ட கதாபாத்திரங்களை பிரதிபலித்திருக்கிறார் மோகன்லால். அப்படியான பிரச்னைகளை தீர்க்கும் மனோதத்துவ நிபுணராகவும், மருத்துவராகவும் கூட நடித்திருக்கிறார்.
இன்னொரு பக்கம் அதிரடி சண்டைகள் போட்டு, பன்ச் வசனங்கள் பேசி, நாயகிகளோடு டூயட் பாடும் ஜனரஞ்சக நாயகனாக மோகன்லால் பெற்ற வெற்றிகளும் அதிகம். அவர் நடித்த புலிமுருகன் திரைப்படமே, 100 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் மலையாளத் திரைப்படம்.
சில வருடங்கள் கழித்து அவர் நடிப்பில் வெளியான லூசிஃபர், 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் மலையாளத் திரைப்படம் என்கிற சாதனையைப் படைத்தது. இந்த வருடம் வெளியான எம்புரான் திரைப்படமும், அதிக வசூல் செய்த மலையாளத் திரைப்படங்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
பட மூலாதாரம், Facebook/Mohanlal
மோகன்லாலின் பல திரைப்படங்கள், பரீட்சார்த்த முயற்சிகள் தோல்வியும் அடைந்திருக்கின்றன. ஆனால் தோல்விகளைப் பற்றிப் பெரிதாகக் கவலைப்படாதவர் மோகன்லால்.
மலையாள திரையுலகைத் தாண்டி தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும், நேரடி திரைப்படங்களில் மோகன்லால் நடித்துள்ளார். மலையாள திரையுலகில் உச்சத்தில் இருக்கும் போதே, தமிழில் ஜில்லா திரைப்படத்தில் விஜய்க்கு தந்தையாக நடித்தார். விஜயே நேரடியாக கேட்டுக் கொண்டதால் இந்த படத்தில் தான் நடித்ததாக மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் சமீபத்தில் மோகன்லால் கூறினார்.
40 வருடங்கள் கழித்து இன்றும் அவரால் ஒரு வணிகப் படத்தில் நாயகனாகவும், மற்ற படங்களில் வழக்கமான நாயகனுக்கான அம்சங்கள் இல்லாத சாதாரண கதாபாத்திரமாகவும் தோன்ற முடிகிறது. இது எல்லா நடிகர்களுக்கும் சாத்தியப்படாத ஒன்று.
மலையாள திரையுலகின் நடிகர் சங்கமான AMMA விலும் பல ஆண்டுகள் நிர்வாகப் பொறுப்பில் மோகன்லால் இருந்திருக்கிறார். ஆனால் இவரது பதவிக்காலத்தின் போது பெண் நடிகைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை என விமர்சனத்திற்கு ஆளானார். நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை மூலம் பெண் நடிகைகள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள், புகார்கள் போன்றவை வெளிச்சத்துக்கு வந்தன.
இந்த அறிக்கை எதிரொலியாக, 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி மலையாள நடிகர் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து நடிகர் மோகன்லால் விலகினார்.
பால்கே விருது
இந்திய சினிமாவில் வாழ்நாள் சதானை புரிந்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்திய சினிமாவின் தந்தை என கருதப்படும் தாதா சாஹேப் பால்கேவின் பெயரில், இந்த விருது 1969ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் இந்த விருதை தமிழ் சினிமாவில் இதுவரை சிவாஜி கணேசன், இயக்குநர் கே. பாலச்சந்தர் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் பெற்றுள்ளனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு