சென்னை: தாது மணல் முறைகேடு விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகள் தமிழகத்தில் 12 இடங்களில் சோதனை நடத்திய நிலையில், வைகுண்டராஜன் உட்பட 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் பல ஆண்டுகளாக விதிகளுக்குப் புறம்பாக தாது மணல் அள்ளப்பட்டு வருவதாகப் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையிலான தமிழக அரசின் சிறப்பு குழுவினர் தாது மணல் குவாரிகளில் சோதனை நடத்தி, பெருமளவு முறைகேடு நடந்திருப்பதையும், அரசுக்கு ரூ.5,832.29 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதையும் கண்டறிந்தனர்.
இதையடுத்து, தாது மணல் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், ஆலை உரிமையாளர்களுக்கு ரூ.6 ஆயிரம் கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஆலை உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய நிறுவனங்கள், ஆலை உரிமையாளர்களுக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். நெல்லை, தூத்துக்குடி, சென்னை உட்பட 12 இடங்களில் சோதனை நடந்தது.
விவி மினரலஸ் நிறுவன உரிமையாளர் வைகுண்டராஜன் வீடு, அலுவலகங்கள், அந்நிறுவனம் தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், 2000 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் தாது மணல் முறைகேட்டில் ஈடுபட்டதாக 21 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும், 6 நிறுவனங்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, டிரான்ஸ் கார்னட் இந்தியா நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள், வேல்முருகன், வைகுண்டராஜன், கார்த்தியாயினி, சுப்புராஜன், ரேணுகா , சுமனா, மதனா, ஜெகதீசன் செந்தில்ராஜன், ஊழியர்கள், அடையாளம் தெரியாத நபர்கள் என 21 பேர் மற்றும் விவி மினரல்ஸ் தொடர்புடைய 6 நிறுவனங்கள் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்