பட மூலாதாரம், PIB
- எழுதியவர், ரெஹான் ஃபசல்
- பதவி, பிபிசி ஹிந்தி
-
பல சுதந்திர போராட்ட வீரர்களுக்கு வரலாற்றில் உரிய இடம் கிடைக்கவில்லை. அவர்களில் ஒருவர் 1857ல் நடைபெற்ற கிளர்ச்சியின் தலைவரான தாந்தியா தோபே.
“1857 ஆம் ஆண்டின் எல்லா கிளர்ச்சியாளர்களிலும் மிகவும் திறமையான தளபதி தாந்தியா தோபே ஆவார். டோபேயின் உயரம் குறைவு. ஆனால் அவர் வலுவான மற்றும் விரைவாக முடிவெடுக்கும் தளபதியாக இருந்தார்,” என்று ஆண்ட்ரூ வார்ட் தனது ‘கான்பூர் 1857’ என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.
” அடர்ந்த புருவங்களுக்குக் கீழே உள்ள அவரது கண்களைப் பார்த்தாலே அவரது தலைமைத் திறன் தெரியவரும். தனது ஆயிரக்கணக்கான வீரர்களுடன் யமுனை ஆற்றைக் கடந்த அவர் தனது பாதையில் வந்த ஒவ்வொரு பெரிய நகரத்தையும் கைப்பற்றினார்.”
சிவப்பு தாமரை மற்றும் சப்பாத்தி
தாந்தியா தோபே 1814 ஆம் ஆண்டு அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள யேவ்லா கிராமத்தில் பிறந்தார். அவரது இயற்பெயர் ராமச்சந்திர ராவ்.
அவரது தம்பி கங்காதர் அவரை ‘தாந்தியா’ என்று அழைப்பார். பின்னர் இந்தப்பெயரே நிலைத்துவிட்டது. சில வரலாற்று புத்தகங்களில் இவரது பெயர் தாத்யா டோபே எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறுவயதிலேயே வாளுடன் வெளியே சென்று வாள்வீச்சு பயிற்சியை தானே மேற்கொள்வார். ஒரு ஆங்கில எழுத்தாளர் அவரை கேரிபால்டியுடன் ஒப்பிட்டார். அதே நேரத்தில் மராத்தி எழுத்தாளர்கள் அவரை சிவாஜியின் பாரம்பரியத்தின் கடைசி போராளியாகக் கருதினர்.
1857 ஆம் ஆண்டு போரின் போது பிட்டோரில் உள்ள நானா சாஹேப்பின் அரசவையில் அவருக்கும்தாந்தியா தோபே, ஜ்வாலா பிரசாத் மற்றும் அஜிமுல்லா கான் ஆகியோருக்கும் இடையே நீண்ட ஆலோசனைகள் நடைபெற்றன.
பட மூலாதாரம், Harper Collins
புரட்சிக்கு கூட்டு அமைப்பு மிகவும் முக்கியமானது என்று தாந்தியா தோபே கருதினார். வெற்றிபெறுவதற்கு, முழுப் போரும் ஒரு படை மற்றும் ஒரு தலைவரின் தலைமையில் நடைபெறுவது முக்கியம் என்று அவர் கருதினார்.
“நாடு முழுவதும் ‘சிவப்பு தாமரை'(கிளர்ச்சியின் பெயர்), ஒவ்வொரு படை முகாமிலும் பரவத்தொடங்கியது. புரட்சியின் செய்தியைப் பரப்ப ஒரு மௌன ஆயுதமாக சப்பாத்தி இருந்தது” என்று ரஞ்சனா சித்தலே தனது ‘தளபதி தாந்தியா தோபே: 1857 சுதந்திரப் போராட்டத்தின் நாயகன்’ என்ற புத்தகத்தில் எழுதுகிறார்.
“கிராமத்தின் காவலாளி, தலைவருக்கு சப்பாத்தியை கொடுப்பார். முழு கிராமமும் அதை பிரசாதமாக ஏற்றுக் கொள்ளும். இதன் அர்த்தம் என்னவென்றால் முழு கிராமமும் புரட்சியில் சேரும் என்பதாகும். இப்படி சப்பாத்தி மூலம் ஒவ்வொரு கிராமத்துக்கும், ஒவ்வொரு நபருக்கும் மௌன செய்தி சென்றது.”
பட மூலாதாரம், Parag Tope
போராளிகள் கான்பூர் திரும்பினர்
1857 ஜூன் 4 ஆம் தேதி நள்ளிரவில் கான்பூரில் கிளர்ச்சி தொடங்கியது.
நானா சாஹேப் வாழ்க என்று ஆரவாரம் செய்துகொண்டே ஆங்கிலேய கருவூலத்தை போராளிகள் சூறையாடினர். சிறைக் கதவை உடைத்து கைதிகளை விடுவித்தனர்.
நானா சாஹேப், தாந்தியா தோபே மற்றும் ஆசிமுல்லா கான் டெல்லிக்குப் புறப்பட்டனர்.
ஆனால் தாந்தியா தோபே யோசனையில் ஆழ்ந்தார். கான்பூரை விட்டு வெளியேறுவது அவருக்கு சரியென்று தோன்றவில்லை. இதற்கு மூல காரணம் கான்பூரின் முக்கியத்துவம்.
கொல்கத்தாவையும் டெல்லியையும் இணைக்கும் ஜிடி சாலை கான்பூர் வழியாகச் சென்றது. கான்பூரின் கங்கைப் பாலம் வழியாகத்தான் அவத் பகுதிக்கு செல்ல முடியும்.
“காரணங்களை விளக்கிய தாந்தியா தோபே, ஆங்கிலேயர்கள் முன்னேறிச் செல்வதைத் தடுக்க வீரர்களை கான்பூருக்கு திரும்பக் கொண்டு வருமாறு நானா சாஹேப்பிடம் சொன்னார். எல்லா வீரர்களும் கல்யாண்பூரிலிருந்து கான்பூருக்குத் திரும்பினர்,” ரஞ்சனா சித்தலே எழுதுகிறார்.
“நகர மக்கள் நானா சாஹேப் பேஷ்வாவை தங்கள் மன்னராக அறிவித்தனர். பேரரசர் பகதூர் ஷா ஜஃபரின் ஊர்வலம் நகரத்தில் நடத்தப்பட்டது. படையை வழிநடத்தும் பொறுப்பு தாந்தியா தோபேக்கு வழங்கப்பட்டது. அவர் தளபதியாக ஆக்கப்பட்டார்.”
பட மூலாதாரம், Harper Collins
ஆங்கிலேய மகளிர் மற்றும் குழந்தைகளின் படுகொலை
அதற்குள் ஜெனரல் வீலர் தனது வீரர்களையும் ஆங்கிலேய மகளிரையும் குழந்தைகளையும் ஒரு கோட்டையில் பாதுகாப்பாக அடைத்து வைத்தார்.
20 நாட்கள் சண்டைக்குப் பிறகு 1857 ஜூன் 25 ஆம் தேதி வீலர் சமாதானத்துக்கான வெள்ளைக் கொடியை ஏற்றினார்.
பீரங்கிகள், ஆயுதங்கள் மற்றும் கோட்டையின் பொக்கிஷங்கள் தாந்தியா தோபேயின் வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதற்கிடையில் ஜெனரல் ஹேவ்லாக் முதலில் ஃபதேபூரைத் தாக்கினார். பின்னர் கான்பூரைத் தாக்கத் தயாரானார்.
ருத்ரான்ஷு பானர்ஜி தனது ‘டேட்லைன் 1857 ரிவோல்ட் அகென்ஸ்ட் தி ராஜ்’ என்ற புத்தகத்தில், “ஹேவ்லாக், பாண்டு நதியைக் கடந்து ஓங் எனும் இடத்தில் நானா சாஹேப்பின் படைகளை தோற்கடித்து ஜூலை 17 ஆம் தேதி கான்பூரில் நுழைந்தார்” என்று எழுதுகிறார்.
“ஆனால் அவர் கான்பூரில் நுழைவதற்கு முன்பு கிளர்ச்சியாளர்கள் சத்திச்சௌரா காட்டில் உள்ள பைபிள் ஹவுஸில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ஆங்கிலேய பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொல்ல முடிவு செய்தனர். அவர்களைக் கொல்ல நான்கு அல்லது ஐந்து தொழில்முறை கொலையாளிகள் வாள்கள் மற்றும் நீண்ட கத்திகளுடன் அங்கு அனுப்பப்பட்டனர்.”
“அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். உடல்கள் கிணற்றில் வீசப்பட்டன. ஜேம்ஸ் நீல் தனது வீரர்களுடன் கான்பூருக்குள் நுழைந்தபோது கைது செய்யப்பட்ட அனைவரையும் தூக்கிலிட உத்தரவிட்டார். இதுமட்டுமின்றி தூக்கிலிடப்பட்ட பிறகு அனைத்து பிராமணர்களையும் புதைக்க வேண்டும், முஸ்லிம்களை எரிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.”
பட மூலாதாரம், Getty Images
ஆங்கிலேயர்களின் தோல்வி
நவம்பர் 9 ஆம் தேதி தாந்தியா தோபே, கால்பி கோட்டையைக் கைப்பற்றினார். அருகிலுள்ள அலகாபாத், ஃபதேபூர் மற்றும் பனாரஸ் மையங்களில் இருந்து தோற்கடிக்கப்பட்ட வீரர்கள் தாந்தியாவின் படையில் சேரத் தொடங்கினர்.
கிளர்ச்சியாளர்களுடன் போரிட பிரிட்டிஷ் படை லக்னெளவுக்குப் புறப்பட்ட உடனேயே தாந்தியா தோபேயின் உளவாளிகள் இந்த செய்தியை அவரிடம் கொண்டு வந்தனர். உடனடியாக கான்பூரைத் தாக்க அவர் முடிவு செய்தார்.
இதற்கிடையில் நவம்பர் 24 ஆம் தேதி அவத் பகுதியில் இருந்து ஏராளமான வீரர்கள் தாந்தியா தோபேயின் படையில் இணைந்தனர்.
பிரிட்டிஷ் ராணுவம் திடீரென முன்னேறி வந்து தாக்கியது. தாந்தியா தோபேயின் படை பின்வாங்கத் தொடங்கியது.
தனது படையை பின்வாங்கச்செய்து வெற்றி பெற்றுவிட்டதாக எதிரியை நினைக்க வைக்கும் உளவியல் நுட்பத்தில் தாந்தியா நிபுணராக இருந்தார்.
“பிரிட்டிஷ் படை வெற்றியைக் கொண்டாடியது. அந்த நேரத்தில் தாந்தியா தோபேயின் படை பிரிட்டிஷ் படையை மூன்று பக்கங்களிலிருந்தும் தாக்கியது,” என்று சார்ல்ஸ் பால் தனது ‘தி ஹிஸ்டரி ஆஃப் தி இந்தியன் மியூட்டினி’ என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.
“தாத்யா டோபே தனது படையை இரண்டு பகுதிகளாகப் பிரித்தார். ஒரு பகுதி ஆங்கிலேய படையை வலது பக்கமாகவும், மற்றொன்று இடது பக்கமாகவும் தாக்கியது. சிதறி ஓடுவதைத்தவிர பிரிட்டிஷ் படையால் எதையும் செய்ய முடியவில்லை.”
பட மூலாதாரம், Getty Images
கான்பூர் மீண்டும் கைப்பற்றப்பட்டது
பிரிட்டிஷ் படை தோற்கடிக்கப்பட்டது. ஆனால் அவர்களுடன் வந்த சீக்கிய படைப்பிரிவு தங்கள் தைரியத்தை கைவிடவில்லை.
பிரிட்டிஷ் வீரர்களின் பீதியை விவரிக்கும் ஆண்ட்ரூ வார்ட், “அதிகாரிகளின் மிரட்டல் இருந்தபோதிலும் வீரர்கள் தங்கள் நிலைகளை விட்டு வெளியேறி கோட்டையில் தஞ்சம் அடைய முயன்றனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு மூத்த சீக்கிய சிப்பாய், வரிசையில் கோட்டைக்குள் நுழையுமாறு கூறி அவர்களைத் தடுக்க முயன்றார். ஆனால் அவர்கள் அவரைத் தள்ளிவிட்டு கோட்டைக்குள் நுழைந்தனர்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் போரில் பிரிட்டிஷ் ராணுவத்தைச் சேர்ந்த பிரிகேடியர் வில்சன் கொல்லப்பட்டார். கிழக்கிந்திய கம்பெனியின் கொடியை வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டு அதன் இடத்தில் போராளிகளின் பச்சைக் கொடியை ஏற்றினார் தாந்தியா தோபே.
கிளர்ச்சியாளர்கள் கான்பூர் நகரத்தை ஆட்சி செய்ய முயற்சிக்கவில்லை. ஏனென்றால் இரு தரப்புக்கு இடையே நடந்த சண்டையில் முழு நகரமும் சிதைந்து போயிருந்தது.
பட மூலாதாரம், Harper Collins
ராணி லஷ்மி பாய்க்கு உதவிட ஜான்ஸி சென்ற தாந்தியா
கான்பூரில் தாந்தியா தோபே வெற்றி பெற்ற செய்தியைக் கேட்ட ஜெனரல் காம்ப்பெல், லக்னெளவின் பொறுப்பை ஜெனரல் ஆட்ரமிடம் ஒப்படைத்துவிட்டு மூவாயிரம் வீரர்களுடன் கான்பூர் நோக்கிச் சென்றார்.
காம்ப்பெல் கங்கைக் கரையில் இருந்து கிளர்ச்சியாளர்கள் மீது குண்டுமழை பொழியத்தொடங்கினார். கிளர்ச்சியாளர்கள் பதில் தாக்குதல் கொடுத்தனர். ஆனால் பிரிட்டிஷ் ராணுவத்தின் தாக்குதல் வலுவாக இருந்தது. கங்கையைக் கடப்பதற்கான வழி பிறந்தது. காம்ப்பெல்லின் படை கான்பூருக்குள் நுழைந்தது.
பின்வாங்குவதைத் தவிர தாந்தியா தோபேயிடம் வேறு வழி இருக்கவில்லை. அங்கிருந்து அவர் பிதூர் நோக்கிச் சென்றார். ஆனால் அவர் தைரியத்தை இழக்கவில்லை.
இதற்கிடையில் ஜான்ஸி நகரை ஆங்கிலேயர்கள் தாக்கிய செய்தி அவருக்குக் கிடைத்தது. ராணி லக்ஷ்மிபாய்க்கு உதவ அவர் உடனடியாக அங்கு சென்றார்.
கர்னல் புரூஸ் மெல்சன் தனது ‘ ஹிஸ்டரி ஆஃப் இண்டியன் ம்யூட்டனி 1857-58’ என்ற புத்தகத்தில் “கான்பூரில் ஆங்கிலேயர்களை இரண்டு முறை தோற்கடித்த, உத்வேகம் நிறைந்த ஒருவர் தலைமையில் ஆயிரக்கணக்கான வீரர்கள் ராணிக்கு உதவுவதற்காக வந்திருப்பதை ஜெனரல் ஹ்யூ ரோஸ் கண்டார்,” என்று எழுதியுள்ளார்.
“ஜான்ஸி கோட்டையின் முற்றுகையிலிருந்து தனது படையைக் குறைத்த ரோஸ், தாந்தியாவுக்கு எதிரான சண்டையில் தனது முழு பலத்தையும் அர்ப்பணித்தார். இறுதியில் தாந்தியாவின் படை களத்தை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று.”
இந்தச் சம்பவத்தை விவரித்து ரைஸ் ஹோம்ஸ் தனது ‘ஹிஸ்டரி ஆஃப் இண்டியன் ம்யூட்டனி’ என்ற புத்தகத்தில், “நாங்கள் உங்களுக்கு உதவ படையுடன் வந்த அந்த நேரத்தில் கோட்டையிலிருந்து குண்டுகள் வீசப்பட்டிருந்தால் ஆங்கிலேயர்கள் எந்த நடவடிக்கையும் எடுத்திருக்க மாட்டார்கள், நாங்கள் வெற்றி பெற்றிருப்போம் என்று தாந்தியா லஷ்மிபாயிடம் சொன்னார்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
“நாங்கள் கோட்டையை விட்டு வெளியே வருவதற்காக ஆங்கிலேயர்கள் தாக்குவது போல் நடிக்கிறார்கள் என்று கூறி கோட்டையின் காவலர் எங்களைத் தாக்க விடாமல் தடுத்தார் என்று லஷ்மிபாய் பதில் அளித்தார்,” என்றும் அவர் எழுதியுள்ளார்.
பட மூலாதாரம், PIB
குவாலியர் மீது வெற்றி
இதற்குப் பிறகு, ராவ் சாஹேப், தாந்தியா தோபே, ராணி லக்ஷ்மிபாய் மற்றும் பாந்தா நவாப் ஆகியோர் தங்கள் படையுடன் குவாலியர் நோக்கி நகர்ந்தனர்.
1858 மே 31 ஆம் தேதி குவாலியர் கோட்டையில் பேஷ்வா கொடி ஏற்றப்பட்டது.
குவாலியரின் மன்னர் ஜெயஜி ராவ் சிந்தியா ஆக்ராவுக்குத் தப்பிச் சென்றார். கான்பூர், ஜான்ஸி, கால்பி ஆகிய இடங்களில் தொடர் தோல்விகளுக்குப் பிறகு குவாலியரில் கிடைத்த வெற்றியால் தாந்தியா தோபேயின் மனம் சிறிதே ஆறுதல் அடைந்தது.
அப்போது கிளர்ச்சித் தலைவர்கள் குவாலியரில் வெற்றியை கொண்டாடிக்கொண்டிந்தனர். தாந்தியா தோபேயும், மகாராணி லக்ஷ்மிபாயும் இதை சரியன்று கருதவில்லை. ஏனெனில் நெருக்கடி இன்னும் முடிவுக்கு வந்திருக்கவில்லை.
ஹ்யூ ரோஸ் 1858 ஜூன் 16 ஆம் தேதி முரிரை அடைந்தார். ரோஸின் பிரிட்டிஷ் குதிரைப்படை தாந்தியாவின் படையை பின்னால் இருந்து தாக்கியது. இங்கே ஹ்யூ ரோஸ் மீண்டும் ஒரு நகர்வை மேற்கொண்டார்.
“குவாலியர் மக்கள் தங்கள் அரசனைத் தாக்க மாட்டார்கள் என்று கருதிய அவர் ஜெயஜி ராவ் சிந்தியாவையும் அவரது தளபதிகளையும் முன்வரிசையில் நிற்க வைத்தார். அவர் நினைத்தது நடந்தது. தாந்தியா தோபே கடுமையாக முயற்சி செய்தபோதிலும் குவாலியர் படை இறுதிவரை முன்வரிசையைத் தாக்கவில்லை. ஏனென்றால் குவாலியர் மகாராஜா ஜெயஜி ராவ் சிந்தியா முன்வரிசையில் இருந்தார்,” என்று ரஞ்சனா சித்தலே எழுதுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
தாந்தியா தோபேயின் வேகம்
இதற்குப் பிறகு தாந்தியா தோபே மால்வாவை நோக்கிச்செல்ல திட்டமிட்டார்.
ஃபிரட்ரிக் ராபர்ட்ஸ், ஹோம்ஸ், பார்க், மிட்செல், ஜேம்ஸ் ஹோப் மற்றும் வில்லியம் லாக்ஹார்ட் ஆகிய ஆறு பிரிட்டிஷ் அதிகாரிகள் அவரைப் பின்தொடர்ந்தனர்.
“அந்த நாட்களில், தாந்தியா தோபே சராசரியாக ஒரு நாளைக்கு 60 மைல்களை கடக்கும் அளவுக்கு வேகமாக பயணம் செய்தார். தாந்தியா தோபே ஒரு சிறந்த போர்த் தலைவர் மற்றும் புரட்சியாளர். மக்களை ஒன்றிணைக்கும் அவரது திறன் போற்றத்தக்கது. தாந்தியா தோபேயை பின்தொடர பிரிட்டிஷ் படைகள் தங்கள் வேகத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது,” என்று கர்னல் மெல்சன் எழுதுகிறார்.
பிரிட்டிஷ் அதிகாரிகள் தாந்தியா தோபேயை சுற்றி வளைக்க ஒவ்வொரு நாளும் புதிய திட்டங்களை தீட்டுவார்கள். ஆனால் கொரில்லா போரில் ஈடுபட்ட தாந்தியா இந்தத் திட்டங்களை முறியடித்து முன்னேறுவார்.
பட மூலாதாரம், Postal Department
தாந்தியா தோபேயின் கைது
இறுதியில் தாந்தியாவின் கூட்டாளிகளில் ஒருவரான மான் சிங் உளவாளியாக மாறிவிட்டார். இதன் காரணமாக தாத்யா டோபே ஆங்கிலேயர்களிடம் சிக்கினார்.
1859 ஏப்ரல் 7 ஆம் தேதி படவுன் காட்டில் தாந்தியா கண்விழித்தபோது தான் சுற்றிவளைக்கப்பட்டிருப்பதைக் கண்டார்.
அப்போது அவரிடம் இருந்து ஒரு குதிரை, வாள், குறுவாள், மூன்று தங்கக்காப்புகள், 118 தங்க நாணயங்கள் கைப்பற்றப்பட்டன.
அவர் முதலில் ராணுவ முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் ஷிவ்புரியில் கடுமையான காவலில் வைக்கப்பட்டார். தாந்தியா தோபே மீது வழக்கு தொடரப்பட்டது. அவருக்கு எதிராக 8 சாட்சிகள் ஆஜர்படுத்தப்பட்டனர்.
“கால்பியில் வெற்றி பெறும் வரை நான் அனைத்தையும் என் எஜமானர் நானா சாஹேப் பெயரால் தான் செய்தேன். பிரிட்டிஷ் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் யாரையும் தூக்கிலிட உத்தரவிட்டதில்லை,” என்று தாந்தியா குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், Harper Collins
தாந்தியா தோபே தூக்கிலிடப்பட்டார்
இந்த வழக்கின் தீர்ப்பு ஏப்ரல் 15ஆம் தேதி வெளியானது.
1859 ஏப்ரல் 18 ஆம் தேதி தாந்தியா தோபே தூக்கிலிடப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.
ஷிவ்புரி கோட்டையில் இரண்டு நாட்கள் அவர் பலத்த காவலில் வைக்கப்பட்டார்.
“ஏப்ரல் 18 ஆம் தேதி மாலை 7 மணியளவில் தாந்தியா தோபே மரணதண்டனை மைதானத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மைதானத்தில் மக்கள் கூட்டம் நிரம்பியிருந்தது. மேஜர் மீட், டோபேவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை கூட்டத்தின் முன் வாசித்தார். பின்னர் நீதிபதியின் உத்தரவைப் படித்தார். மக்கள் பயப்படவேண்டும் என்பதற்காக இது வேண்டுமென்றே கூட்டத்தின் முன் செய்யப்பட்டது,” என்று ரஞ்சனா சித்தலே எழுதுகிறார்.
“தாந்தியாவின் சங்கிலிகள் அகற்றப்பட்டன. தூக்கு மேடைக்கு செல்லும் படிக்கட்டுகளில் அவர் உற்சாகத்துடன் ஏறினார். அவர் தாமாகவே தூக்குக்கயிற்றில் தனது கழுத்தை நுழைத்தார். பலகை இழுக்கப்பட்டது. சுதந்திரப் போராட்டத்தின் மகத்தான வீரனின் உயிர் சில நொடிகளில் பிரிந்தது.”
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு