கரூர்: புரட்டாசி 4-வது சனிக்கிழமையை முன்னிட்டு கரூர் தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி அன்னதானம் வழங்கினார். மேலும், மாவட்ட அதிமுக சார்பில் நடந்த அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
புரட்டாசி 4-வது சனிக்கிழமையை முன்னிட்டு கரூர் தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் இன்று (அக். 11) அதிகாலை நடை திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பலர் முடி இறக்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.
கல்யாண வெங்கடரமண சுவாமி அறக்கட்டளை சார்பில் தாந்தோணிமலை தனியார் மண்டபத்தில் அன்னதானம் நடைபெற்றது. இதில் தாதர்கள் (சங்கு ஊதுபவர்கள்) மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி எம்எல்ஏ தாதர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உணவு பரிமாறி அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
தாதர்களுக்கு வெற்றிலைப் பாக்குடன் தட்சணை வழங்கப்பட்டது. கரூர் மாநகராட்சி துணை மேயர் ப.சரவணன், திருப்பணிக்குழு தலைவர் தியாகராஜன், முன்னாள் எம்எல்ஏ வழக்கறிஞர் காமராஜ், வழக்கறிஞர் குடியரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக அங்கு வைக்கப்பட்டிருந்த கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு பூஜை, வழிபாடு நடைபெற்றது.
அதிமுக: அதேபோல், கரூர் மாவட்ட அதிமுக சார்பில் தாந்தோணிமலை தனியார் மண்டபத்தில் கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு பூஜை, வழிபாடு நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உணவு பரிமாறி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இணை செயலாளர் மல்லிகா, மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் எம்.எஸ்.கண்ணதாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதே பகுதியில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை சார்பில் நடந்த அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இளைஞர், இளம்பெண்கள் பாசறை கரூர் தெற்கு பகுதி துணைத் தலைவர் எஸ்.கே.சஞ்ஜித் செய்திருந்தார். முன்னதாக கோயிலில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழிபாடு செய்தார். கோயிலை சுற்றியுள்ள மண்டபங்கள் மற்றும் வாகனங்களில் ஏராளமானோர் அன்னதானம் வழங்கினர்.