பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
-
பிளாஸ்டிக் உறைகளில் அடைத்து விற்கப்படும் உப்பு, சர்க்கரை மற்றும் குடிநீர் பாட்டில்களில் நுண் நெகிழி என அழைக்கப்படும் மைக்ரோ பிளாஸ்டிக் கண்டறியப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எதிர்கால சந்ததியினருக்கு இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கவலை தெரிவித்த நீதிபதிகள், அவற்றில் எச்சரிக்கை வாசகங்களைப் பொறிப்பதற்கு அறிவுறுத்துமாறு மத்திய அரசுக்கு வெள்ளிக்கிழமையன்று உத்தரவிட்டனர்.
முன்னதாக, தாயின் நஞ்சுக் கொடியில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் பரவியிருப்பது தொடர்பான தனியார் கல்லூரியின் ஆய்வு அறிக்கையை தானாக முன்வந்த விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள், வழக்கில் மத்திய, மாநில அரசுகளை எதிர் மனுதாரர்களாக சேர்த்திருந்தனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை நீதிபதிகள் சதீஷ்குமார், பரதசக்ரவர்த்தி அமர்வு விசாரித்து வருகிறது. இந்த அமர்வு, கோவை பி.எஸ்.ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வறிக்கை ஒன்றை தானாக முன்வந்து விசாரித்தது.
‘அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகம்’
அந்த ஆய்வில், பிளாஸ்டிக் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பிஸ்பினால் ஏ (BPA) வகை ரசாயனம், பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியில் கண்டறியப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது.
நாளமில்லா சுரப்பிகளை சீர்குலைக்கும் தன்மைவாய்ந்த பிஸ்பினால் ஏ வகை ரசாயனம், பல்வேறு சுகாதார பாதிப்புகளை ஏற்படுத்துவதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆய்வில் பங்கேற்ற கர்ப்பிணிப் பெண்களின் ஒப்புதலுடன் அவர்களின் தொப்புள் கொடியில் இருந்து ரத்த மாதிரிகளை மருத்துவக் குழு சேகரித்துள்ளது.
‘இவற்றில் பிபிஏ (Bisphenol A) அளவானது ஒரு கிலோ எடைக்கு 0.43 மைக்ரோகிராம் முதல் 1.1578 மைக்ரோகிராம் வரை இருந்தது கண்டறியப்பட்டது. இவை பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருந்தன’ என அந்த ஆய்வு கூறுகிறது.
தமிழ்நாடு அரசு சொன்னது என்ன?
பிஎஸ்ஜி மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையை அடுத்து நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி அமர்வு, ‘தாயின் நஞ்சுக் கொடியைக் கூட பிளாஸ்டிக் துகள்களால் மாசுபடுத்த முடியும் என்றால் இதற்கு தகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்’ எனக் கூறினர்.
‘இதுதொடர்பாக விரிவாக ஆராய வேண்டும்’ எனக் கூறி மத்திய, மாநில அரசின் சுகாதாரத் துறைகளை வழக்கில் எதிர் மனுதாரர்களாக நீதிபதிகள் சேர்த்தனர்.
மீண்டும் இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜராகி, இதுதொடர்பாக விரிவான ஆய்வு நடத்துமாறு சென்னை ஐ.ஐ.டியை உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த தகவலை அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார் கடிதம் மூலம் தமக்குத் தெரிவித்ததாகவும் நீதிமன்றத்தில் அவர் கூறினார். ‘இந்த விவகாரத்தை தீவிரமாக ஆராய வேண்டும்’ எனக் கூறி நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.
பட மூலாதாரம், Getty Images
ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம் (European Food Safety Authority – EFSA) ‘மனித உடலின் ஒரு கிலோ உடல் எடைக்கு 0.2 நானோ கிராம் (ng) அளவுக்கு பிஸ்பினால் ஏ இருக்கலாம்’ என வரையறுத்துள்ளதாகக் கூறுகிறார் தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானியான பார்த்திபன்.
வெள்ளிக்கிழமையன்று (பிப்ரவரி 6) சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் வி.சந்திரசேகரன், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.
பிளாஸ்டிக் குடுவைகள் மற்றும் பிளாஸ்டிக் உறைகளில் மைக்ரோ பிளாஸ்டிக்கின் இருப்பு மற்றும் அதன் தாக்கம் குறித்து ஆய்வு செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் குறித்து அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
மத்திய சுகாதார அமைச்சகம் கூறியது என்ன?
மைக்ரோ மற்றும் நானோ பிளாஸ்டிக் வகைகளை வளர்ந்து வரும் மாசுகளாகவும் உணவுப் பொருள்களில் அவற்றின் பரவலை அறிந்து கொள்வது தொடர்பான திட்டத்தை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தொடங்கியுள்ளதாகவும் வழக்கறிஞர் வி.சந்திரசேகரன் தெரிவித்தார்.
லக்னௌவில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR), கொச்சியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் கீழ் இயங்கும் மீன் தொழில்நுட்பத்திற்கான மத்திய கல்விநிறுவனம் (ICAR- CIFT), மற்றும் பிலானியில் உள்ள பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனம் (BITS Pilani) ஆகியவற்றுடன் இணைந்து இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.
‘உணவுப் பொருள்களில் மைக்ரோ மற்றும் நானோ பிளாஸ்டிக்குகளை அடையாளம் காணவும் அவற்றின் அளவைத் தீர்மானிக்கவும் பகுப்பாய்வு முறைகளை உருவாக்கி சரிபார்ப்பது இதன் முக்கிய நோக்கமாக உள்ளது’ என, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
உப்பில் அதிக மைக்ரோ பிளாஸ்டிக்
பட மூலாதாரம், Getty Images
பிளாஸ்டிக் குடுவைகளில் அடைக்கப்பட்ட தண்ணீர், பொட்டலங்களில் அடைக்கப்பட்டுள்ள பானங்கள், உலர்ந்த மீன்கள், மீன் உணவு ஆகியவற்றில் மாதிரிகளை சேகரித்து ஆய்வு நடைபெற்று வருவதாக, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
‘இதன் முதற்கட்ட ஆய்வுகளில் அயோடின் கலந்த உப்பில் அதிக எண்ணிக்கையிலும் கருப்பு உப்பு மற்றும் பாறை உப்பு ஆகியவற்றில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது’ எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து அந்த அறிக்கையில், ‘இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், சண்டிகர், அரியானா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் குடிநீர் பாட்டில்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இவற்றில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது’ என்கிறது.
இதுதொடர்பாக விவாதிப்பதற்கு கூட்டுக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டதாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைப் படித்துப் பார்த்த நீதிபதிகள், குடிநீர் பாட்டில்களில் எச்சரிக்கை வாசகங்களை இடம்பெறச் செய்யுமாறு உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டும்’ என உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையைத் தள்ளிவைத்தனர்.
‘நஞ்சுக் கொடியில் பரவிய பிளாஸ்டிக் துகள்கள்’
பட மூலாதாரம், Facebook/Sudha Ramalingam
தாயின் நஞ்சுக் கொடியில் மைக்ரோ பிளாஸ்டிக் பாதிப்பு இருப்பது குறித்த ஆய்வை கோவை கோவை பி.எஸ்.ஜி மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டிருந்தது.
“நாங்கள் நடத்திய தொடக்கநிலை ஆய்வு முடிவுகளை ஊடகங்கள் வெளியிட்டன. இதனை அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்,” என்கிறார் மருத்துவர் சுதா ராமலிங்கம்.
இவர் கோவை பி.எஸ்.ஜி மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சமூக மருத்துவத் துறையின் தலைவராகப் பணிபுரிந்து வருகிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கடந்து ஆறு மாதங்களுக்கும் மேலாக இதுதொடர்பாக ஆய்வு நடத்தி வருகிறோம். சிறு வயதிலேயே உடல் பருமனுடன் வளரும் குழந்தைகள், சர்க்கரை குறைபாடு, புற்றுநோய் என பல்வேறு நோய்கள் வரத் தொடங்கிவிட்டன.” என்கிறார்.
‘கருவிலேயே தீர்மானிக்கப்படும் நோய்கள்’
நோய்கள் பெருகிக் கொண்டிருப்பதற்கு அடிப்படையாக கருவில் குழந்தை உள்ளபோதே சில வகை வியாதிகளுக்கான தன்மை வெளிப்படுவதாக, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவர் சுதா ராமலிங்கம் தெரிவித்தார்.
அவரது கூற்றுப்படி, மருத்துவரீதியாக இதனை ‘டோஹாட்’ (Developmental Origin Of Health And Disease – dohad) என்கின்றனர். கருவில் உள்ளபோதே, ‘என்ன வியாதி வரும்’ என்பதை செல்களின் நடத்தைகள் தீர்மானிப்பதாகவும் அவர் கூறுகிறார்.
“உணவு முறை காரணமாக தாயின் உடலில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அது கருவில் உள்ள குழந்தைக்குச் சென்றால் அதனால் உடல் பருமன், சர்க்கரை குறைபாடு வருமா எனக் கண்டறியும் ஆர்வம் எங்களுக்கு ஏற்பட்டது,” என்கிறார் மருத்துவர் சுதா ராமலிங்கம்.
மனித உடலில் உள்ள நாளமில்லாத சுரப்பிகளை (endocrine system) சீர்க்குலைக்கும் வேலையை பிஸ்பினால் ஏ வகை ரசாயனம் செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
400 கர்ப்பிணிகளிடம் ஆய்வு
பட மூலாதாரம், Facebook/Parthiban
கடந்த ஆறு மாதங்களாக சுமார் நானூறுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளின் நஞ்சுக் கொடிகளை (placenta) மருத்துவர் சுதா ராமலிங்கம் தலைமையிலான குழு சேகரித்துள்ளது. இந்த நஞ்சுக் கொடிகள், பிரசவத்துக்குப் பிறகு வெளியில் தூக்கி எறியப்படுகின்றன.
“அதில் உள்ள ரத்த மாதிரிகள் பெற்றோரின் ஒப்புதலுடன் சேகரிக்கப்பட்டன. இதுதொடர்பாக, நெறிமுறைக் குழு (Ethics commitee) ஒப்புதல், பணிபுரியும் நிறுவனத்தின் ஒப்புதல் ஆகியவை பெறப்பட்டன,” என்கிறார், மருத்துவர் சுதா ராமலிங்கம்.
முதல்கட்ட ஆய்வு முடிவில் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட சற்று அதிகமாக நுண் நெகிழி துகள்கள் இருப்பதைக் கண்டறிந்ததாக அவர் குறிப்பிட்டார்.
“மைக்ரோ பிளாஸ்டிக் என்பது பலவகையான தன்மைகளைக் கொண்ட ரசாயனமாக உள்ளது. அதில் பிஸ்பினால் ஏ வகை ரசாயனத்தை மட்டும் கவனித்தோம். மற்ற துகள்களின் வடிவங்களைக் கண்டறிய மேம்பட்ட ஆய்வக வசதி தேவைப்படுகிறது. அதற்கான பணிகளும் நடந்து வருகின்றன,” என்கிறார் மருத்துவர் சுதா ராமலிங்கம்.
பாதிப்பைக் கொடுக்கும் தேநீர், சாம்பார் பைகள்
பட மூலாதாரம், Getty Images
பால், தேநீர், சாம்பார் ஆகியவற்றை கட்டிக் கொடுப்பதற்கு ஓட்டல்களில் பயன்படுத்தப்படும் பிளாடிக் உறைகள் மூலம் மனித உடலில் மைக்ரோ பிளாஸ்டிக் நுழைய வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார், மருத்துவர் சுதா ராமலிங்கம்.
“இவை நாளமில்லா சுரப்பிகளுடன் போட்டி போட்டுக் கொண்டு பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகின்றன. ” என்கிறார் அவர்.
தொடர்ந்து அவர் பேசும்போது, “தாயின் கருவில் உள்ள குழந்தைக்கு மனநலரீதியான பாதிப்புகள், இதயநோய், சர்க்கரை குறைபாடுகள் போன்றவற்றை உருவாக்கும் ஆபத்துடைய ரசாயனங்களாக இவை உள்ளன.” என அவர் தெரிவித்தார்.
பேப்பர் குடுவைகள், ஒருமுறை பயன்படுத்தும் டீ தூள் பைகள் (Tea bags) ஆகியவற்றிலும் மைக்ரோ பிளாஸ்டிக் உள்ளதாகக் கூறும் அவர், “சூடாக தேநீர் குடிக்கும்போது மைக்ரோ பிளாஸ்டிக் உருகி வயிற்றுக்குள் செல்கின்றன. இதுபோன்ற பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.” என்கிறார்.
வெளியில் உள்ள புகையை சுவாசிப்பது போன்ற பல்வேறு காரணங்களால் மனித உடலில் இயல்பாகவே ரசாயனங்கள் உள்ளதாகக் கூறும் அவர், “ஆனால், அது தாயின் நஞ்சுக் கொடி வரையிலும் சென்று சேர்ந்திருப்பது தான் அதிர்ச்சியூட்டுகிறது” எனக் கூறுகிறார்.
“பிஸ்பினால் ஏ வகை ரசாயனம் போல தாலேட்ஸ் (Pthalates) வகை ரசாயனம் உள்ளது. மனிதர்களைச் சுற்றியே இவை உள்ளன. ஓட்டலில் ஊற்றிக் கொடுக்கும் சாம்பார், பிளாஸ்டிக் குடுவைகள் எனப் பலவற்றில் இவை உள்ளன.” என்கிறார் அவர்.
‘முன்கூட்டிய பிரசவ பாதிப்பு’
பட மூலாதாரம், Facebook/Perumal pillai
பிளாஸ்டிக் துகள்கள், நஞ்சுக் கொடியைக் கடந்து கருவை அடைவதாகக் கூறுகிறார், திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நலத்துறையின் இணைப் பேராசிரியரும் மருத்துவருமான பெருமாள் பிள்ளை.
கர்ப்பகால நீரிழிவு போன்ற நீண்டகால வளர்சிதை மாற்றங்களுக்கு இவை வழிவகுப்பதாகக் கூறும் மருத்துவர் பெருமாள் பிள்ளை, “தாயின் நஞ்சுக் கொடியில் பி.வி.சி, பாலிமர் போன்ற மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் சில ஆய்வுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளன” எனக் கூறுகிறார்.
இதுதொடர்பாக ஏராளமான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாகவும் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களால் ஏற்படும் ஆபத்துகளை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
தென்கொரியாவில் குடிநீர் குடுவைகள், பால் பாட்டில் ஆகியவற்றில் பிஸ்பினால் ஏ வகை ரசாயனத்தைக் கண்டறியப்பட்டதாகக் கூறுகிறார், தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி பார்த்திபன்.
“அங்கு மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக பரிசோதனையில் இதன் பாதிப்பு அதிகரித்திருப்பதைக் கண்டறிந்தனர்” எனக் கூறுகிறார்.

தவிர்ப்பதற்கான வழிகள் என்ன?
தொடர்ந்து பிளாஸ்டிக் குடுவையைப் பயன்படுத்தும்போது மைக்ரோ பிளாஸ்டிக் தாக்கம் அதிகரிக்கும் என கூறும், மருத்துவர் சுதா ராமலிங்கம் மனித உடலுக்குள் மைக்ரோ பிளாஸ்டிக் செல்வதைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளை பட்டியலிட்டார்.
- பிளாஸ்டிக் குடுவைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
- இரும்பு குடுவைகள் பாதுகாப்பானவை
- ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை மீண்டும் பயன்படுத்தக் கூடாது.
- ஒருமுறை பயன்படுத்தப்படும் தேநீர் கோப்பைகளைத் தவிர்க்க வேண்டும்
- சூடான சாம்பார், தேநீர் போன்றவற்றை பாலித்தீன் பைகளில் வாங்கக் கூடாது.
“தற்போது இடைக்கால ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளோம். விரைவில் விரிவான அறிக்கை வெளியிடப்பட உள்ளது. மைக்ரோ பிளாஸ்டிக் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளுமாறு சென்னை ஐஐடியிடம் தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அவை வெளிவரும்போது மக்கள் மத்தியில் கூடுதல் விழிப்புணர்வு ஏற்படும்,” என்கிறார், மருத்துவர் சுதா ராமலிங்கம்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு