குழந்தை பிறந்தவுடன் அதன் ஸ்பரிசத்தைத் தேடும் தாயின் தவிப்பும், அவளின் பால் வீச்சத்துக்கு, கதகதப்புக்கு ஏங்கும் குழந்தையின் துடிப்பும் அற்புதம்! அம்மாவுக்கும் குழந்தைக்குமான உளவியல் ரீதியான தீண்டல், அரவணைப்பு, பாதுகாப்பு போன்ற அனுசரணைகளை எப்படி செயற்கைப் பாலில் எதிர்பார்க்க முடியும்?
தாய்ப்பால் வரப்பிரசாதம். கருத்தரித்த நாள் முதல் அந்த சிசுவுக்காகவே தாயின் உடலும் மனமும் பழக்கப்படுகிறது. சுகப்பிரசவம் என்றால் அரை மணி நேரத்துக்குள்ளும், அறுவை சிகிச்சை என்றால் ஒன்றரை மணி நேரத்துக்குள்ளும் தாய்ப்பால் புகட்ட வேண்டும்
குழந்தை பிறந்து முதல் இரண்டு நாட்கள் சுரக்கும் ‘கொலாஸ்ட்ரம்’ எனும் சீம்பாலில்தான் குழந்தைக்கு நோயை அண்டவிடாத ஆன்டிபாடீஸ் (ANTIBODIES) தடுப்பு மருந்து இருக்கிறது.
குழந்தைக்கு ஆறு மாதங்கள் கண்டிப்பாகத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதற்குப் பிறகு ஒரு வருடமாவது தாய்ப்பாலுடன் சேர்ந்த இணை உணவு அவசியம்.
குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் நரம்பு மண்டலத்துக்கும் வலு சேர்க்கக்கூடிய, எளிதில் செரிக்கும் புரதம், கொழுப்பு, கால்சியம், இரும்பு, மாவுச்சத்து இவற்றோடு விட்டமின்களும் தாய்ப்பாலில் அதிகம் நிறைந்துள்ளன.
குழந்தைக்கு ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைபாடுகளில் இருந்து தாய்ப்பாலில் உள்ள சத்துகள் காப்பதோடு, டயாபடிஸ் மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்களை அண்டவிடாமல் தடுக்கும் எனவும் மருத்துவம் கூறுகிறது. அத்துடன் தாய்ப்பால் கொடுக்கும் காலகட்டம் கர்ப்பத்தடைக்கான நாட்களாகவும் கருதப்படுகிறது. தாய்ப்பால் புகட்டும் பெண்களுக்கு மார்பகப்புற்று மற்றும் சினைப்பை புற்றுநோய் வரும் தன்மையும் தடுக்கப்படும்.
The post தாய்ப்பாலின் முக்கியத்துவம் appeared first on Vanakkam London.