0
தாய்லாந்துவில் பயணிகள் ரயில் மீது பாரந்தூக்கி விழுந்த கோர விபத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் தலைநகர் பேங்காக்க்கு வடகிழக்கே அமைந்துள்ள நக்கோன் ரட்சசிமா பகுதியில் நிகழ்ந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்து நேரத்தில் ரயில் தடம்புரண்டு தீப்பற்றியதாகவும், இதில் 64க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிவேக ரயில் பாதை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த தளத்தில் இருந்த பாரந்தூக்கி, ஓடிக்கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது திடீரென விழுந்ததே, இந்த விபத்துக்குக் காரணம் என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
சம்பவம் நடந்த உடனே மீட்புப் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். அந்தக் காட்சிகள் உள்ளூர் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. விபத்துக்குள்ளான ரயில், பேங்காக் நகரிலிருந்து உபோன் ரட்சதானி மாகாணத்துக்கு பயணித்துக் கொண்டிருந்ததாகவும், அதில் மொத்தம் 195 பயணிகள் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தில் பயன்படுத்தப்பட்ட பாரந்தூக்கி, பேங்காக் நகரையும் சீனாவின் குன்மிங் நகரையும் இணைக்கும் அதிவேக ரயில் திட்டத்தின் கட்டுமானப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஆதரவுடன் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பு சுமார் 5.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். இந்த அதிவேக ரயில் திட்டத்தின் கட்டுமானம் 2028ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.