• Thu. Jan 15th, 2026

24×7 Live News

Apdin News

தாய்லாந்தில் ரயில் மீது கிரேன் சரிந்த விபத்து: பலி எண்ணிக்கை 32ஆக உயர்வு

Byadmin

Jan 15, 2026


தாய்லாந்தின் வடகிழக்கு பகுதியில், கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட கிரேன் ஒன்று பயணித்துக் கொண்டிருந்த ரயில்மீது சரிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளது.

இந்த விபத்தில் மேலும் 66 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஒரு வயது குழந்தையும், 85 வயது முதியவரும் உள்ளனர். ஏழு பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து உள்ளூர் நேரப்படி காலை 9 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது. விபத்து நேரத்தில் அந்த ரயிலில் மொத்தம் 171 பயணிகள் இருந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. கிரேன் ரயில்மீது விழுந்ததால், பல பெட்டிகள் தடம் புரண்டதுடன், ஒரு பெட்டியில் தீப்பற்றியதாகவும் கூறப்படுகிறது.

இந்த ரயில், Bangkok-இலிருந்து வடகிழக்கு Ubon Ratchathani மாகாணத்தை நோக்கி பயணித்து வந்தது. அதில் பெரும்பாலானோர் மாணவர்கள் மற்றும் வேலைக்காக வேறு மாவட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி – தாய்லாந்தில் பயணிகள் ரயில் மீது பாரந்தூக்கி விழுந்த விபத்து: 28 பேர் உயிரிழப்பு

இந்த கிரேன் சம்பவத்துக்கு காரணமான கட்டுமான நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று State Railway of Thailand அறிவித்துள்ளது. இதையடுத்து, அந்த கிரேனை இயக்கி வந்த Italian-Thai Development Company வருத்தம் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

உள்ளூர் ஊடகங்களின் தகவலின்படி, விபத்து நடந்த நேரத்தில் அந்த கிரேன் ஒரு பெரிய கான்கிரீட் பகுதியை தூக்கி நகர்த்திக் கொண்டிருந்ததாகவும், அது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரயில்மீது விழுந்ததால் இந்த கோர விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

விபத்தில் உயிர் தப்பிய ரயில் பணியாளர் திரசாக் வோங்சூங்நேர்ன், கிரேன் விழுந்தபோது பயணிகள் அனைவரும் காற்றில் தூக்கி எறியப்பட்டதைப் போன்ற அனுபவம் ஏற்பட்டதாக தெரிவித்தார். இதேபோல், சம்பவத்தை நேரில் கண்ட மலிவான் நக்தோன் என்ற பெண், முதலில் சிறிய கான்கிரீட் துண்டுகள் விழுந்ததாகவும், அதன் பின்னர் கிரேன் மெதுவாக சரிந்து ஒரே நொடியில் பெரும் சத்தத்துடன் ரயில்மீது விழுந்ததாகவும் கூறினார்.

இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தாய்லாந்து பிரதமர் Anutin Charnvirakul புதன்கிழமை சம்பவ இடத்தை நேரில் பார்வையிட உள்ளார். இந்த விபத்துக்கு யாராவது பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்றும், அலட்சியமே இதுபோன்ற விபத்துகளுக்கு காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

By admin