புது தில்லியில் தாலிபன் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தக்கி வெள்ளிக்கிழமையன்று (10 அக்டோபர் 2025) நடத்திய செய்தியாளர் சந்திப்பிற்கு பெண் பத்திரிகையாளர்கள் அழைக்கப்படவில்லை. இது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
வியாழக்கிழமை இந்தியா வந்த முத்தக்கி, வெள்ளிக்கிழமையன்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் இருதரப்பு சந்திப்பை நடத்தினார். 2021-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், ஆப்கன் அரசை சேர்ந்தவர்களுடன் இந்தியாவில் நடைபெற்ற முதல் உயர்மட்ட சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
முத்தக்கியின் பத்திரிகையாளர் சந்திப்பு வெள்ளிக்கிழமை மாலை புதுதில்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் நடைபெற்றது. இதில் பெண் பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக பலர் பதிவிட்டுள்ளனர். பெண் பத்திரிகையாளர்கள் யாரும் அங்கு இல்லை என்பதை, ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் பொதுத் தொடர்பு இயக்குநர் ஹபீஸ் ஜியா அகமது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பத்திரிகையாளர் சந்திப்பின் புகைப்படம் தெளிவாகக் காட்டுகிறது.
ஆப்கானிஸ்தானை நிர்வகித்துவரும் தாலிபன் அரசாங்கம் மீது, மனித உரிமை மீறல்கள் மற்றும் பெண்களின் கல்வி மீதான கட்டுப்பாடுகள் மீதான குற்றச்சாட்டுகள் உள்ளது. பெண்களுக்கு கல்வி மற்றும் உரிமைகளை கொடுப்பது இஸ்லாமியத்திற்கு எதிரானது என தாலிபன்கள் கருதுகின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, தாலிபன் வெளியுறவு அமைச்சருடன் கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
முத்தக்கியின் செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் இல்லாதது குறித்து இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர்களும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். காங்கிரஸ் எம்.பி.யும் முன்னாள் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி ப. சிதம்பரம் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டப் பதிவில், “தாலிபன்களுடன் இணைந்து நாம் செயல்படவேண்டிய புவிசார் அரசியல் நிர்பந்தங்களை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அவர்களின் பாரபட்சமான மற்றும் பழமையான பழக்கவழக்கங்களை நாமும் ஏற்றுக்கொள்வது முற்றிலும் அபத்தமானது. தாலிபன் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துக் கொள்ளாவிடாமல் பெண் பத்திரிகையாளர்கள் விலக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது” என்று எழுதியுள்ளார். தனது பதிவில், கார்த்தி சிதம்பரம், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரையும் டேக் செய்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, “பெண் பத்திரிகையாளர்களை செய்தியாளர் சந்திப்பில் இருந்து விலக்கும் தாலிபன் வெளியுறவு அமைச்சர் அமீர் முத்தக்கியின் முடிவை நம் அரசாங்கம் எப்படி அனுமதித்தது? இந்திய மண்ணில்,அவர்கள் விருப்பப்படி நடக்க எப்படி அனுமதிக்கலாம்? இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இதற்கு எப்படி ஒப்புக்கொண்டார்? இந்த செய்தியாளர் சந்திப்பில் முதுகெலும்பில்லாத நமது ஆண் பத்திரிகையாளர்கள் எப்படி கலந்துக் கொண்டார்கள்?” என்று எழுதியுள்ளார்.
இந்நிலையில், “ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு எந்த தொடர்பும் இல்லை” என இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பட மூலாதாரம், @HafizZiaAhmad
படக்குறிப்பு, ஆண் பத்திரிகையாளர்கள் மட்டுமே பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பு
பெண் பத்திரிகையாளர்கள் சொல்வது என்ன?
இதை, “ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று கூறும் பல பெண் பத்திரிகையாளர்கள், செய்தியாளர் சந்திப்பில் பாலின பாகுபாடு என்பது, நமது ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரானது என்று கூறுகின்றனர்.
தாலிபன்கள் இந்தியாவில் பெண்களைப் புறக்கணிக்க முடியும் என்றால், ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் குறித்த அவர்களின் சிந்தனையை தெள்ளத்தெளிவாக புரிந்துக் கொள்ளமுடியும் என்றும் சிலர் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
வெளியுறவு விவகாரம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் பிரபலமான பத்திரிகையாளர் ஸ்மிதா சர்மா சமூக ஊடக வலைத்தளமான X-இல், முத்தக்கியின் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு எந்தப் பெண் பத்திரிகையாளரும் அழைக்கப்படவில்லை என்று பதிவிட்டார்.
“வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கும் முத்தக்கிக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் பெண்களின் மோசமான நிலை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.”
“பெண்களின் சாதனைகள் மற்றும் தலைமைத்துவத்தில் பெருமை கொள்ளும் ஒரு நாட்டில், நாட்டின் பாதுகாப்பு கவலைகள் காரணமாக, முத்தக்கிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுதான் இன்றைய உலகளாவிய அரசியல்…”
ஸ்மிதா சர்மாவின் பதிவை மறுபதிவு செய்து பதிவிட்ட பத்திரிகையாளர் நிருபமா சுப்பிரமணியன், “சக பெண் ஊழியர்களைப் பிரித்துப் பார்ப்பது குறித்து ஆண்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யவில்லையா?” என்று கேள்வி எழுப்பினார் .
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, தாலிபன் வெளியுறவு அமைச்சருடன் கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
‘பத்திரிகையாளர் சந்திப்பில் பெண்களைச் சேர்க்க முயற்சித்தேன்’
“ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபன் அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தக்கி, புதுதில்லி ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிக் கொண்டிருந்தார். துரதிர்ஷ்டவசமாக, இந்த செய்தியாளர் சந்திப்பில் ஒரு பெண் பத்திரிகையாளர் கூட அனுமதிக்கப்படவில்லை. தூதரக வாயிலில் இருந்த பாதுகாப்புப் பணியாளர்களிடம் இந்தப் பிரச்னையை நான் எழுப்பினேன், ஆனால் அவர்கள் என் பேச்சைக் கேட்கவில்லை” என்று NDTV இன் மூத்த நிர்வாக ஆசிரியர் ஆதித்ய ராஜ் கெளல் பதிவிட்டுள்ளார்.
“பத்திரிகையாளர் சந்திப்பில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று முயற்சித்த பத்திரிகையாளர்கள் இருவரில் ஆதித்ய ராஜ் கெளலும் ஒருவர். பெண்களை ஏன் அனுமதிக்க முடியாது என்று அவர் கேள்வி கேட்டார்! ஆடைக் குறியீட்டை மதித்து, அனைத்து பெண் பத்திரிகையாளர்களும் தங்களை முழுமையாக மூடிக்கொண்ட போதிலும் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. தாலிபன்களிடம் எதுவும் எடுபடவில்லை!” என்று கெளலுக்கு ஆதரவாக சுயாதீன பத்திரிகையாளர் அர்பண் எழுதினார்.
ஸ்மிதா சர்மாவின் பதிவை மறுபதிவு செய்த தி இந்து செய்தித்தாளின் ராஜதந்திர விவகார ஆசிரியர் சுஹாசினி ஹைதர், “அதிகாரப்பூர்வ நெறிமுறைகளுடன் இந்திய அரசாங்கம் தாலிபன் தூதுக்குழுவை வரவேற்கிறது. இதிலும் மேலும் அபத்தமானது என்னவென்றால், பெண்களுக்கு எதிரான அவர்களின் வெறுக்கத்தக்க மற்றும் சட்டவிரோத பாகுபாட்டை இந்தியாவிற்கு கொண்டு வர தாலிபன் வெளியுறவு அமைச்சர் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்று எழுதினார்.
“ஆப்கானிஸ்தான் தாலிபன் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தக்கியின் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு பெண் பத்திரிகையாளர்கள் அழைக்கப்படவில்லை, இது ஏற்றுக்கொள்ளவே முடியாதது,” என்று பத்திரிகையாளர் கீதா மோகன் எழுதினார்.
பட மூலாதாரம், Getty Images
“நான் ஒப்புக்கொள்கிறேன். ஒரு செய்தி நிறுவனமாக, பெண் பத்திரிகையாளர்கள் நுழைய தடை விதிக்கப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்புகளுக்கு நாம் செய்தி சேகரிக்க செல்லக் கூடாது. டெல்லியில் தாலிபன் வெளியுறவு அமைச்சரின் கூட்டங்கள் குறித்த செய்திகளை ஊடகங்கள் வெளியிடவோ ஒளிபரப்பவோ கூடாது” என்று இந்து குழுவின் இயக்குனர் மாலினி பார்த்தசாரதி கூறினார் .
“என் கருத்துப்படி, அந்த பத்திரிகையாளர் சந்திப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆண் பத்திரிகையாளர்கள் வெளிநடப்பு செய்திருக்க வேண்டும்,” என்று தி இந்துவின் துணை ஆசிரியர் விஜேதா சிங் எழுதினார் .
“காட்டுமிராண்டித்தனமான தாலிபன்களை நம் நாட்டிற்குள் நுழைய அனுமதிப்பதன் மூலம் முதலில் இந்திய மண்ணை அவமதித்தீர்கள், பின்னர் கற்காலத்திலிருந்தே இந்தியாவில் நடைமுறையில் உள்ள பெண்களுக்கு எதிரான பாலின-பாகுபாடு சட்டங்களை அவர்கள் செயல்படுத்த மகிழ்ச்சியுடன் அனுமதிக்கிறீர்கள். இது நம்பமுடியாதது! செய்தியாளர் சந்திப்புகளில் பெண் பத்திரிகையாளர்கள் கலந்துகொள்வதைத் தடுப்பதற்குப் பதிலாக, பாலின சமத்துவம் குறித்த பாடங்களை நீங்கள் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும். நமது ஜனநாயக விழுமியங்களுக்காக எழுந்து நிற்க உங்களுக்கு தைரியம் இல்லையா?” என கட்டுரையாளர் மற்றும் எழுத்தாளர் ஸ்வாதி சதுர்வேதி எழுதியுள்ளார்.
வரலாற்றாசிரியர் ருச்சிகா சர்மா இவ்வாறு கேள்வி கேட்கிறார்: “இது ஆப்கானிஸ்தான் அல்ல, இந்தியா! இந்திய மண்ணில் தாலிபன் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்ள பெண்களை அனுமதிக்காததற்கு அவர்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கவேண்டும்? இந்திய அரசாங்கத்திற்கு என்ன ஆயிற்று?”
2021 ஆகஸ்ட் மாதத்தில் தாலிபன்கள் ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய தாலிபான்கள் நாட்டை நிர்வகித்து வருகின்றனர். அவர்கள் ஆட்சி தொடங்கியதில் இருந்து பெண்கள் மீது ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன, மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து எழுந்துள்ளன.
முன்னதாக, 12 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகளுக்கு கல்வி தடை விதிக்கப்பட்டதிலிருந்து, வெளி உலகத்துடன் இணைவதற்கான ஒரே வழிமுறையாக இணையம் மாறிவிட்டது என்று ஆப்கானிஸ்தான் பெண்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
பெண்களுக்கான வேலை வாய்ப்புகளும் கணிசமாகக் குறைந்துள்ளன. கடந்த ஆண்டு, பல்கலைக்கழகங்களிலிருந்து பெண் எழுத்தாளர்களின் புத்தகங்கள் அகற்றப்பட்டன.
பள்ளிக்குச் செல்வதற்கான தடை,”கல்வி கற்கும் உரிமையை அப்பட்டமாக மீறுவதாக” ஆப்கானிஸ்தான் மனித உரிமைகள் மையம் விவரித்துள்ளது.