பத்துக்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் திரைகளால் சூழப்பட்ட, அதிக நபர்கள் கொண்ட சிறிய கட்டுப்பாட்டு மையம் அது. அங்கு தாலிபனின் காவல்துறை, 90,000 சிசிடிவி கேமராக்கள் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு புதிய அமைப்பைப் பெருமையுடன் பிபிசியிடம் காட்டியது. லட்சக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையைக் கண்காணிக்க இந்த அமைப்பு பயன்படுத்தப்படும்.
“நாங்கள் இங்கிருந்து முழு காபூல் நகரத்தையும் கண்காணிக்கிறோம்,” என்று தாலிபன் காவல்துறைத் தலைவரின் செய்தித் தொடர்பாளர் காலித் சத்ரான், திரைகளில் ஒன்றைச் சுட்டிக்காட்டி கூறுகிறார்.
இத்தகைய கண்காணிப்பு, குற்றங்களை எதிர்த்துப் போராட உதவும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் ஷரியா சட்டம் குறித்த இஸ்லாமிய தாலிபன் அரசாங்கத்தின் புரிதலின் கீழ் அமல்படுத்தப்படும் கடுமையான ஒழுக்கக் குறியீட்டைக் கண்காணிக்கவும், கருத்து வேறுபாடுகளைக் கட்டுப்படுத்தவும் இது பயன்படுத்தப்படும் என்று விமர்சகர்கள் அஞ்சுகின்றனர்.
இந்த அமைப்பின் செயல்பாட்டைப் பார்க்க அனுமதிக்கப்பட்ட முதல் சர்வதேச ஊடகம் பிபிசிதான்.
கட்டுப்பாட்டு அறைக்குள், காவல்துறை அதிகாரிகள் வரிசையாக அமர்ந்து ஆயிரக்கணக்கான கேமராக்களின் மூலம் நேரலைக் காட்சிகளைப் பார்த்து, காபூலில் வசிக்கும் 60 லட்சம் மக்களின் வாழ்க்கையைக் கண்காணித்து வருகின்றனர்.
கார்களின் நம்பர் பிளேட்டுகள் முதல் மக்களின் முகபாவனைகள் வரை அனைத்தும் கண்காணிக்கப்படுகின்றன.
“சில குறிப்பிட்ட சுற்றுப்புறங்களில் வாழும் மக்களைக் கவனித்து, அவர்கள் போதைப்பொருள் பயன்பாடு, குற்றச் செயல்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான ஏதாவது ஒன்றில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கும்போது, நாங்கள் உடனடியாக உள்ளூர் காவல்துறையை அணுகுவோம்,” என்கிறார் சத்ரான்.
“அவர்கள் அதை ஆராய விரைந்து வருவார்கள்” என்கிறார்.
புதிய கண்காணிப்பு கேமராக்கள்
முந்தைய அரசாங்கத்தின் கீழ், தாலிபன்கள் மற்றும் இஸ்லாமிய அரசு போராளிகள் என அழைக்கப்படுவோரின் தாக்குதல்கள், கடத்தல் சம்பவங்கள் மற்றும் கார் திருட்டுகளால் காபூல் தினமும் அச்சுறுத்தலுக்கு ஆளானது.
கடந்த 2021இல் தாலிபன்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியபோது, குற்றங்களை ஒடுக்குவதாக அவர்கள் உறுதியளித்தனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகரில் கண்காணிப்பு கேமராக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியிருப்பது, சட்டம் மற்றும் ஒழுங்கை அமல்படுத்தும் விதத்தில், தாலிபான்கள் முன்னேறி வருவதன் அறிகுறியாகும்.
அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, தலைநகரில் 850 கேமராக்கள் மட்டுமே இருந்தன என்று அதிகாரத்தில் இருந்து விரட்டப்பட்ட பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
இருப்பினும் கடந்த மூன்று ஆண்டுகளில், மக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை, குறிப்பாக பெண்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்தும் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை தாலிபன் அதிகாரிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர். தாலிபன் அரசாங்கத்தை வேறு எந்த நாடும் முறையாக அங்கீகரிக்கவில்லை.
காபூலில் பிபிசிக்கு காட்டப்பட்ட கண்காணிப்பு அமைப்பில் முக அடையாளங்களைக் கண்டறியும் தொழில்நுட்பத்தின் மூலம் மக்களைக் கண்காணிக்கும் வசதி உள்ளது. ஒரு திரையின் மூலையில் வயது வரம்பு, பாலினம் மற்றும் ஒருவர் தாடி வைத்திருக்கிறாரா அல்லது முகமூடி அணிந்திருக்கிறாரா என்பதைப் பொறுத்து ஒவ்வொரு முகமும் வகைப்படுத்தப்பட்ட படங்களாகத் தோன்றும்.
“தெளிவான வானிலை இருக்கும் நாட்களில், ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள நபர்களைக்கூட ஸூம் (Zoom) செய்து பார்க்க முடியும்,” என்று கூறும் சத்ரான், ஒரு பரபரப்பான போக்குவரத்து சந்திப்பில் வைக்கப்பட்டுள்ள ஒரு கேமராவை உதாரணமாகக் காட்டுகிறார்.
தாலிபன்கள் தங்கள் சொந்த ஊழியர்களைக்கூட கண்காணிக்கிறார்கள். ஒரு சோதனைச் சாவடியில், வீரர்கள் ஒரு காரின் டிக்கியை திறந்து சோதனை செய்யும்போது, கட்டுப்பாட்டு மைய ஆபரேட்டர்கள் ஸூம் செய்து அதைப் பார்க்கிறார்கள்.
“பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், குற்ற விகிதங்களைக் கட்டுப்படுத்துவதற்கும், குற்றவாளிகளை விரைவாகப் பிடிப்பதற்கும்” இந்த கேமராக்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளதாக என்று உள்துறை அமைச்சகம் கூறுகிறது.
சிசிடிவி மற்றும் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் 2023 மற்றும் 2024க்கு இடையில் குற்ற விகிதங்கள் 30% குறைந்துள்ளன என்றும் உள்துறை அமைச்சகம் சுட்டிக்காட்டியது. ஆனால் இந்தப் புள்ளிவிவரங்களை பிபிசியால் சுயாதீனமாகச் சரிபார்க்க முடியவில்லை.
மனித உரிமை குழுக்களின் கவலை
பட மூலாதாரம், Getty Images
இருப்பினும், யாரெல்லாம், எவ்வளவு காலத்திற்கு கண்காணிக்கப்படுகிறார்கள் என்பது குறித்து மனித உரிமை குழுக்கள் கவலை கொண்டுள்ளன.
“தேசிய பாதுகாப்பு’ என்ற போர்வையில் கேமராக்களை நிறுவுவது, ஆப்கானிஸ்தான் மக்களின் அடிப்படை உரிமைகளை, குறிப்பாக பொது இடங்களில் பெண்களின் அடிப்படை உரிமைகளை மீறும் கொடூரமான கொள்கைகளைத் தொடர தாலிபன்களுக்கு உதவுகிறது” என்று அம்னஸ்டி இன்டர்நேஷனல் குற்றம் சாட்டுகிறது.
சட்டப்படி பெண்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே பேச அனுமதிக்கப்படுவதில்லை, இருப்பினும் நடைமுறையில் இது கண்டிப்பாக அமல்படுத்தப்படவில்லை. வளரிளம் பெண்கள் இடைநிலை மற்றும் உயர்நிலைக் கல்வியை அணுகுவது தடை செய்யப்பட்டுள்ளது. பெண்கள் பல வகையான வேலைவாய்ப்புகளில் இருந்து தடுக்கப்படுகிறார்கள்.
கடந்த டிசம்பரில், மருத்துவச்சிகள் மற்றும் செவிலியர்களாக பயிற்சி பெறும் பெண்கள், “வகுப்புகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று தங்களுக்கு உத்தரவிடப்பட்டதாக” பிபிசியிடம் தெரிவித்தனர்.
காபூல் போன்ற நகரங்களின் தெருக்களில் பெண்கள் தொடர்ந்து காணப்பட்டாலும், அவர்கள் முகத்தை மூடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
காபூலில் தனது பெற்றோருடன் வசிக்கும் இளம் பட்டதாரியான ஃபரிபாவுக்கு*, தாலிபன்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து வேலை கிடைக்கவில்லை. ‘குறிப்பாக பெண்களின் ஹிஜாப்களை (முக்காடுகளை) கண்காணிக்க, இந்தக் கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுத்தப்படலாம் என்ற கவலை இருப்பதாக’ அவர் பிபிசியிடம் கூறுகிறார்.
நகர காவல்துறையினர் மட்டுமே சிசிடிவி அமைப்பை அணுக முடியும் என்றும், தாலிபானின் அறநெறி காவல்துறையான, நல்லொழுக்கத்தைப் பரப்புதல் மற்றும் தீமையைத் தடுப்பதற்கான அமைச்சகத்தின் பிரிவு அதைப் பயன்படுத்துவதில்லை என்றும் தலிபான்கள் கூறுகின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
ஆனால், தாலிபன் ஆட்சியை எதிர்ப்பவர்களுக்கு இந்த கேமராக்கள் மேலும் ஆபத்தை விளைவிக்கும் என்று ஃபரிபா கவலைப்படுகிறார்.
“பல தனிநபர்கள், குறிப்பாக முன்னாள் ராணுவ வீரர்கள், மனித உரிமை ஆதரவாளர்கள் மற்றும் போராட்டம் நடத்தும் பெண்கள், சுதந்திரமாக நடமாடப் போராடுகிறார்கள், பெரும்பாலும் ரகசியமாக வாழ்கிறார்கள்,” என்று அவர் கூறுகிறார்.
இதற்கிடையில், சேகரிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் எவ்வாறு சேமிக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன என்பதை ஒழுங்குபடுத்துவதற்கான தரவு பாதுகாப்பு சட்டங்கள் ஆப்கானிஸ்தானிடம் இல்லை என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகிறது.
இந்தத் தரவுகள் மூன்று மாதங்களுக்கு மட்டுமே சேமிக்கப்படும் என்று காவல்துறை கூறுகிறது. அதே நேரத்தில் உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, “கேமராக்கள் ஒரு குறிப்பிட்ட மற்றும் தொழில்முறை பொறுப்பாளரால், முற்றிலும் ரகசியமான ஓர் அறையில் இருந்து இயக்கப்படுவதால் தனியுரிமைக்கு அச்சுறுத்தல் இல்லை.”
இந்த கேமராக்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டதாகத் தெரிகிறது. கட்டுப்பாட்டு அறை உள்ள கணினித் திரைகள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் பிராண்டிங்கில், சீன அரசுடன் தொடர்புடைய ‘டஹுவா’ (Dahua) என்ற நிறுவனத்தின் பெயர் இடம்பெற்றிருந்தது.
கேமராக்களை வாங்குவதற்காக சீனாவின் ஹவாய் டெக்னாலஜிஸுடன் தாலிபன்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக முன்பு செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த நிறுவனத்தால் அவை மறுக்கப்பட்டன. ‘இந்த உபகரணங்கள் எங்கிருந்து பெறப்பட்டன?’ என்பது குறித்து பிபிசி எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்க தாலிபன் அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
மக்களின் மீதான பொருளாதாரச் சுமை
பட மூலாதாரம், Getty Images
இந்தப் புதிய கண்காணிப்பு அமைப்பை நிறுவுவதற்கான செலவின் ஒரு பகுதி, இதே அமைப்பால் கண்காணிக்கப்படும் சாதாரண ஆப்கன் மக்கள் மீது விழுகிறது.
மத்திய காபூலில் உள்ள ஒரு வீட்டில், ஷெல்லாவிடம்* பிபிசி பேசியது. அவரது வீட்டிற்கு அருகிலுள்ள தெருக்களில் நிறுவப்பட்ட சில கேமராக்களுக்கு பணம் செலுத்துமாறு அவரிடம் கூறப்பட்டது.
“ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஆயிரக்கணக்கான ஆப்கானிகளை (ஆப்கன் ரூபாய்) இவ்வாறு கேட்கிறார்கள்,” என்று அவர் கூறுகிறார். வேலை செய்யும் பெண்கள், மாதத்திற்கு சுமார் 5,000 ஆப்கானிகள் (இந்திய மதிப்பில் சுமார் 5,900 ரூபாய்) மட்டுமே சம்பாதிக்கக்கூடிய ஒரு நாட்டில் இது பெரிய தொகை.
பல வருட போருக்குப் பிறகு காபூலிலும், பொதுவாக ஆப்கானிஸ்தானிலும் மனிதாபிமான சூழல், நிலையற்றதாகவே உள்ளது. நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியில் உள்ளது. ஆனால், தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பெரும்பாலான சர்வதேச நிதி உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, மூன்று கோடி மக்களுக்கு உதவி தேவைப்படுகிறது. “குடும்பங்கள் (கேமராக்களுக்கு) பணம் செலுத்த மறுத்தால், மூன்று நாட்களுக்குள் தண்ணீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று அச்சுறுத்தப்பட்டனர்,” என்று ஷெல்லா கூறுகிறார்.
“செலவுகளை ஈடுகட்ட நாங்கள் கடன் வாங்க வேண்டியிருந்தது. மக்கள் பட்டினி கிடக்கிறார்கள். இந்த கேமராக்களால் அவர்களுக்கு என்ன பயன்?” என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
மக்கள் பங்களிக்க விரும்பவில்லை என்றால், அவர்கள் அதிகாரப்பூர்வமாக புகார் அளிக்கலாம் என்று தாலிபன்கள் கூறுகிறார்கள்.
பட மூலாதாரம், Getty Images
“தன்னார்வத்துடனே மக்கள் பங்கேற்றனர். நன்கொடைகள் ஆயிரக்கணக்கில் அல்ல, நூற்றுக்கணக்கில்தான் பெறப்பட்டன” என்று தாலிபன் காவல்துறை செய்தித் தொடர்பாளர் காலித் சத்ரான் வலியுறுத்துகிறார்.
உத்தரவாதங்கள் உள்ள போதிலும், ஆப்கானிஸ்தானுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள், இவ்வளவு சக்திவாய்ந்த கண்காணிப்பு அமைப்பு எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பது குறித்துத் தொடர்ந்து கவலை தெரிவிக்கின்றனர்.
காபூலில் காய்கறி விற்பனையாளராக இருக்கும் ஜாபர், “இந்த கேமராக்கள், ஆப்கானியர்களை சக்தியற்றவர்களாக உணர வைக்கும் மற்றொரு வழியைக் குறிக்கின்றன” என்கிறார்.
“நாங்கள் குப்பைகளைப் போல நடத்தப்படுகிறோம், சம்பாதிப்பதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதிகாரிகள் எங்களைப் பயனற்றவர்களாகக் கருதுகிறார்கள்,” என்று பிபிசியிடம் அவர் கூறினார்.
“எங்களால் எதுவும் செய்ய முடியாது.” என்கிறார் ஜாபர்.
*இந்தக் கட்டுரைக்காக நேர்காணல் செய்யப்பட்ட பெண்களின் பெயர்கள், அவர்களின் பாதுகாப்பு கருதி மாற்றப்பட்டுள்ளன.
கூடுதல் தகவல்கள்: பீட்டர் பால்
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு