பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதலில் இந்தியாவை சீனாவிடம் இழப்பதாகக் கூறிவிட்டு, சில மணி நேரங்களிலேயே பிரதமர் நரேந்திர மோதியை ‘நல்ல நண்பர்’ என்று அழைத்தார்.
பிரதமர் மோதி, டிரம்பின் உணர்வுகளை மனதார பாராட்டி, முழு ஆதரவு தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோதி அமெரிக்காவுடனான கூட்டாண்மையை மிகவும் முக்கியமாகக் கருதுவதாக இருவரின் கருத்துகள் குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.
ஒரு புறம் டிரம்ப், பிரதமர் மோதியை நண்பர் எனக் கூறி தனிப்பட்ட உறவுகளைப் பற்றி பேசுகிறார். ஆனால் அவரது அமைச்சரவை சகாக்கள் தொடர்ந்து இந்தியாவை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அமெரிக்கா தளர்ந்துவிட்டதா?
அமெரிக்க அதிபரின் நட்பான அறிக்கை, இந்தியா 50 சதவீத அமெரிக்க வரிகளை எதிர்கொண்டு வரும் நேரத்தில் வந்துள்ளது.
டிரம்ப் பிரதமர் மோதியை ‘சிறந்த பிரதமர்’ என்று அழைத்தாலும், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை பற்றி ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.
“நான் எப்போதும் மோதியின் நண்பராக இருப்பேன். அவர் ஒரு சிறந்த பிரதமர். இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்குவதை பற்றி எனக்கு ஏமாற்றம் உள்ளது, அந்த ஏமாற்றத்தை 50 சதவீத வரிகள் விதித்து நான் அவர்களுக்கு தெரிவித்தேன்,” என்று அவர் கூறினார்.
ஒரே நேரத்தில் இரண்டு முரண்பாடான அறிக்கைகளை வெளியிடுவது டிரம்பின் வெளிநாட்டு கொள்கை என தந்திரோபாய விஷயங்களில் பிரபலமான வல்லுநர் பிரம்மா செல்லானி கூறுகிறார்.
“டிரம்பின் திடீர் மாற்றம் – முதலில் இந்தியா ‘ஆழமான, இருண்ட சீனா’ பக்கம் சென்றுவிட்டதாக கூறிவிட்டு, பின்னர் அமெரிக்கா – இந்தியா இடையே ‘மிகவும் சிறப்பான உறவு’ உள்ளது என்று கூறுவது, அவரது வெளிநாட்டு கொள்கையில் ஒரு பரிமாற்ற உத்தியை காட்டுகிறது.
இதுபோன்ற அறிக்கைகள் மூலம் அவர் ஒரே நேரத்தில் பலருக்கு செய்தியை அனுப்ப முடிகிறது. தனது நாட்டில் தனது ஆதரவாளர்களுக்கு வலிமையானவராக காட்சியளிக்கும் அதே நேரத்தில் தனது கூட்டாளி நாடுகளுடன் உறவுகளையும் பேணுகிறார்,” என பிரம்மா செல்லானி எக்ஸில் எழுதினார்,
“இந்த முரண்பாடான கருத்துகள் எதோ தவறு அல்ல, மாறாக டிரம்பின் அரசியல் முறையே இதுதான். அவரது அறிக்கைகள் பெரும்பாலும் ஊடகங்களில் விவாதம் மற்றும் அழுத்தம் ஏற்படுத்துவதாகவே உள்ளன. அவர் ஒரு நாள் கடுமையாக பேசி, மறுநாள் எந்த விளக்கமும் இல்லாமல் தனது பேச்சை மாற்ற முடியும்.” என்று பிரம்மா செல்லானி கூறுகிறார்.
“இந்த விவகாரத்தை பொறுத்தவரையில், முதலில் பயமுறுத்தும் அறிக்கை ஒருவகையில் அழுத்தம் தருவதற்காகவும், பின்னர் கொடுக்கப்பட்ட நம்பிக்கை அளிக்கும் அறிக்கை உறவை நிலைநாட்டுவதற்காகவும், தன்னை பலவீனமாக காட்டாமல் இருப்பதற்காகவும் உள்ளது.”
பட மூலாதாரம், Getty Images
பிரதமர் மோதி டிரம்புக்கு அளித்த பதில் எவ்வளவு சரியானது?
“நான் அதிபர் டிரம்பின் உணர்வுகள் மற்றும் எங்கள் உறவு பற்றிய அவரது நேர்மறையான பார்வையை பாராட்டுகிறேன். இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே மிகவும் நேர்மறையான மற்றும் தொலைநோக்குள்ள பரந்த மற்றும் உலகளாவிய தந்திரோபாய கூட்டாண்மை உள்ளது,” என பிரதமர் நரேந்திர மோதி எக்ஸ் தளத்தில் எழுதியுள்ளார்,
பிரதமரின் இடுகையின் பிறகு வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் பதிலளித்துள்ளார்.
“பிரதமர் மோதி அமெரிக்காவுடனான கூட்டாண்மையை மிகவும் முக்கியமாக கருதுகிறார். அதிபர் டிரம்பை பொறுத்தவரை, அவருக்கு (பிரதமர் மோதிக்கு) அதிபர் டிரம்புடன் எப்போதும் மிகவும் நல்ல தனிப்பட்ட உறவு இருந்து வருகிறது. ஆனால் விஷயம் என்னவெனில், நாங்கள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். இதைத் தவிர இப்போது நான் வேறு எதுவும் சொல்ல முடியாது,” என எஸ். ஜெய்சங்கர் செய்தி முகமை ஒன்றிடம் கூறினார்.
டிரம்புக்கு நேர்மறையான பதிலளிக்கும் பிரதமர் மோதியின் முடிவை முன்னாள் தூதர் கே.பி. பேபியன் சரியான நடவடிக்கையாக கருதுகிறார்.
செய்தி நிறுவனமான ஏஎன்ஐயிடம் பேசிய கே.பி. பேபியன், “பிரதமர் மோதி தூதரக ரீதியாக சரியான நடவடிக்கையை எடுத்து சிறந்த தூதரக முறையில் ட்விட் மூலம் பதில் கொடுத்துள்ளார். ஆனால் இப்போது இந்த இரண்டு ட்வீட்கள் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை,” என கூறினார்.
இரு தலைவர்களுக்கு இடையேயான உரையாடலுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு இதைவிட வலுவான முயற்சியாக இருந்திருக்கும் என்று பிரம்மா செல்லானி நம்புகிறார்.
அவர் எழுதுகிறார், “இருதரப்பு உறவில் டிரம்பின் காரணமாக உருவாகிய பதற்றத்தை குறைக்க ஒரு தொலைபேசி அழைப்பு வலுவான முயற்சியாக இருந்திருக்கும். அமெரிக்க-இந்திய உறவு எவ்வளவு முக்கியமானது என்பதையும், அதை அமெரிக்க அதிபருடன் இணைந்து வலுப்படுத்த மோதி தயாராக உள்ளார் என்பதையும் ஒரு நேரடி உரையாடல் தெளிவாக காட்டியிருக்கும். டிரம்ப் அகம்பாவத்தில் நடக்கிறார் என்றாலும், மோதி தனிப்பட்ட சமன்பாடுகளுக்கு மேலாக உயர்ந்து இந்த முக்கிய கூட்டாண்மையை மேம்படுத்தவும் முன்னேற்றவும் தயாராக உள்ளதை காட்டியிருக்கும்.”
இப்போது வரிகள் என்ன ஆகும்?
டிரம்ப் மோதியை பாராட்டினாலும், அவருக்கு நெருக்கமானவர்கள் தொடர்ந்து இந்தியாவை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை இரவு பீட்டர் நவாரோ தனது எக்ஸ் கணக்கில் இந்தியா குறித்து ஒரு இடுகையை பதிவிட்டார்.
“இந்தியாவின் உயர்ந்த வரி விகிதங்கள் அமெரிக்க வேலைகளை பாதிக்கின்றன. இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெயை லாபம் ஈட்டுவதற்காகவே வாங்குகிறது மற்றும் அந்த பணம் ரஷ்ய போருக்கு செல்கிறது. அமெரிக்க வரி செலுத்துபவர்கள் கூடுதல் பணம் செலவிட வேண்டியிருக்கிறது. இந்தியா உண்மையை ஏற்காமல் கதைகளை கட்ட விழ்த்து விடுகிறது,” என அவர் எழுதினார்.
இந்தியாவின் ஆங்கில பத்திரிகை தி ஹிந்துவின் தூதரக விவகார ஆசிரியர் சுஹாசினி ஹைதர் எக்ஸ் தளத்தில், “கேள்வி இதுதான்… உறவுகள் பற்றி இந்த நேர்மறையான அறிக்கையின் பொருள், 50 சதவீத கட்டணம் நீக்கப்படும் என்பதா, கட்டாய புலம்பெயர்வு நிறுத்தப்படுமா, விசா தடை நீக்கப்படுமா,அவுட்ஸோர்ஸிங் மற்றும் முதலீட்டில் உள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்படுமா, ஆபரேஷன் சிந்தூர் போன்ற விஷயங்களுக்கு பதில் கிடைக்குமா?”, என எழுதினார்.
அமெரிக்கா இந்தியாவை புறக்கணிக்க முடியாது. அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோதியிடையே நல்லுறவுள்ளது. அமெரிக்காவில் பெரிய இந்திய புலம்பெயர் சமூகம் உள்ளது. அமெரிக்க அதிபர் அவர்களுடன் பேசும்போது, இந்தியா அமெரிக்காவுக்கு முக்கியமானது என்பதை காட்ட விரும்புகிறார்,” என மேற்கு ஆசிய விவகார நிபுணர் வயில் அவ்வாத் கூறுகிறார்.
“ஆனால் அதிபராக சில விஷயங்களை அவர் எழுப்பியுள்ளார் இப்போது அதை திரும்பப் பெற வேண்டும். அப்போதுதான் இந்திய நிறுவனங்கள் எந்த சிக்கலும் இல்லாமல் எந்த வரிகள் இல்லாமல் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்.”
அமெரிக்கா அல்லது ரஷ்யா இரண்டில் ஒன்றில் இந்தியா தேர்ந்தெடுக்க வேண்டும் என அமெரிக்க நிதியமைச்சர் ஹாவர்ட் லூட்டனிக் கூறினார்.
புளூம்பர்க்கிடம் பேசிய லூட்டனிக்,”ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துங்கள். பிரிக்ஸ் கூட்டமைப்பில் இருப்பதை நிறுத்துங்கள். அமெரிக்காவையும் டாலரையும் ஆதரியுங்கள், இல்லையெனில் 50 சதவீத வரிகளை எதிர்கொள்ளுங்கள்,” என கூறினார்.
“அமெரிக்க அதிபருக்கு மிகவும் அழகாகவும் சுருக்கமாகவும், நட்பு நிறைந்த பதிலை பிரதமர் கொடுத்துள்ளார். இது உலகின் இரண்டு மிக முக்கிய நாடுகளின் உறவுகளை மீட்டெடுப்பதற்கு பெரிதும் உதவும் என்று நம்புகிறேன்,” என பிரபல பொருளாதாரவியலாளரும் இந்திய அரசின் நிதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவருமான அரவிந்த் பன்கரியா கூறுகிறார்.
பாகிஸ்தானில் பணியாற்றிய இந்திய முன்னாள் தூதர் அஜய் பிசாரியா ஆகஸ்ட் மாதத்தை விட சிறப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது என இரு தலைவர்களுக்கிடையிலான உரையாடல் குறித்து எழுதியுள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு