3
இந்தியா – உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி பகுதியில் இன்று (05) திடீர் மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் ஒரு கிராமமே மண்ணில் புதையுண்டுள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியடையவைத்துள்ளது.
உத்தரகாசி பகுதியில் திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டமையால் கன மழை பொழிந்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் கிராமத்தில் இருந்த பல வீடுகளும், ஹோட்டல்களும் அடித்துச் செல்லப்பட்டன.
உத்தரகாசி மாவட்டத்தில் மிகவும் பிரபலமான கீர்கங்கா நதி அமைந்துள்ளது. இதனை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழமை. இந்தப் பகுதியின் அருகே தரலி எனும் கிராமம் அமைந்துள்ளது.
மலை அடிவாரத்தில் அமைந்துள்ள தரலி கிராமத்தில் உள்ளூர்வாசிகள் வசித்துவருகின்றனர். அத்துடன், சுற்றுலாப் பயணிகளுக்காக பல ஹோட்டல்களும் அமைந்துள்ளன.
இந்நிலையில், கன மழையால் கீர் கங்கா பெருக்கெடுத்தது. இதனால், தரலி கிராமத்தில் இருந்த பல வீடுகளும், சுமார் 50 ஹோட்டல்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
எதிர்பாராத இந்தச் சம்பவத்தில் 60க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளனர்.
பெரும் மழை வெள்ளத்தில் சேறும் கலந்து வந்ததால், மலை அடிவாரத்தில் இருக்கும் தரலி கிராமம் முழுவதுமாகவே மண்ணில் புதையுண்டதாகவும் சொல்லப்படுகிறது.
தற்போது அந்தப் பகுதியில், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர், இராணுவம் மற்றும் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறன.
எனினும், தொடர்ந்து மழை பெய்துவருவதாலும், கீர்கங்கா நதி நீரின் அளவும் தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் அங்கு மேலும் அச்சம் நிலவிவருகிறது.
இதேவேளை, உத்தராகண்ட் மாநிலத்திற்கு எதிர்வரும் 10ஆம் திகதி வரை கன மழைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.