பட மூலாதாரம், Sri Lanka Airforce
-
- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
-
(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது.)
இலங்கையில் திட்வா புயல் மற்றும் கனமழை காரணமாக, நாட்டில் பெரும்பாலான பகுதிகளுக்கும் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது என இடர் முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பாதிப்புளுக்கு நடுவில் 20க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள திட்வா புயல் காரணமாக இலங்கையின் 17 மாவட்டங்களுக்கு நேரடி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தங்களால் 1,158 குடும்பங்களைச் சேர்ந்த 4,008 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பட மூலாதாரம், KRISHANTHAN
மூன்று வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 381 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
ஐந்து பாதுகாப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு இருப்பதுடன், அவற்றில் 41 குடும்பங்களைச் சேர்ந்த 131 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
உறவினர்களின் வீடுகளில் 136 குடும்பங்களைச் சேர்ந்த 472 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது.
ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணி
இலங்கையில் பெய்து வரும் கடும் மழையுடனான வானிலையை அடுத்து, நாடு முழுவதும் சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதை அடுத்து, தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லுமாறு அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும், நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமையைக் கருத்தில் கொண்டு, அத்தியாவசிய சேவைகளை தவிர்த்து ஏனைய அனைத்து அரச நிறுவன ஊழியர்களுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Sri Lanka Airforce
இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக மாஹோ எல்ல பிரதேசத்தில் வெள்ளப் பெருக்கில் சிக்கிய பொதுமக்களை இலங்கை விமானப் படை உதவியுடன் மீட்டுள்ளனர். பெல் -212 ஹெலிகாப்டர் மூலம் இவர்கள் மீட்டுள்ளனர்.
தெதுரு ஓயா பெருக்கெடுப்பில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாஹோ எல்ல பிரதேசத்தில் உள்ள இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தில் சிக்கிய மூன்று பேரை இன்று மதியம் இலங்கை விமானப்படையினர் பெல் -212 ஹெலிகாப்டர் மூலம் மீட்டு, பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்த மீட்பு நடவடிக்கை ரத்மலானை இலங்கை விமானப்படை தளத்தில் உள்ள மீட்புக் குழுவினால் மேற்கொள்ளப்பட்டது.
எந்தெந்த பகுதிகளில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன?
ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் வெலிமடை, லுணுகல, பஸ்ஸர, கந்தேகெட்டிய, ஊவா பரணகம, சோரணாதொட்டை, எல்ல ஆகிய பகுதிகளில் 18 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
தென் மாகாணத்தின் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள கடுவன பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பட மூலாதாரம், DINESH VADIVEL
பட மூலாதாரம், DINESH VADIVEL
சப்ரகமுவ மாகாணத்தின் கேகாலை மாவட்டத்தில் மாவனெல்ல பகுதியில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
வடமேல் மாகாணத்தின் குருநாகல் மாவட்டத்திலுள்ள இப்பாகமுவ பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மத்திய மாகாணத்தில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள வலபனை பகுதியில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது,
இதேவேளையில், மத்திய மாகாணத்தின் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் 14 பேர் காணாமல் போயுள்ளனர்.
பட மூலாதாரம், KRISHANTHAN
மாவட்ட ரீதியாக ஏற்பட்ட பாதிப்புகள்
கொழும்பு – அவிசாவளை ரயில் மார்க்கத்தில் கற்கள் சரிந்து மண்சரிவொன்று ஏற்பட்டுள்ளதுடன், தற்போது ரயில் போக்குவரத்து வழமைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
மாத்தளை மாவட்டத்தின் தம்புள்ளை – கல்கெட்டியாவ வீதியிலுள்ள பாலமொன்று வெள்ளத்தால் உடைந்துள்ளது.
அத்துடன், மாத்தளை மாவட்டத்தின் கலேவெல பகுதியிலுள்ள 40 வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகிறது.
வவுனியா மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழையுடனான வானிலையால் நெடுங்கேணி மருத்துவமனை நீரில் மூழ்கியுள்ளது.
வவுனியாவின் தென் பகுதியிலுள்ள ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 6 பேர் சிக்குண்டுள்ளதுடன், அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பட மூலாதாரம், DINESH VADIVEL
பதுளை மாவட்டத்தின் வெலிமடை பகுதியில் மண்சரிவு காரணமாக மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், அந்தந்த வீடுகளில் இருந்த அனைவரும் போலீஸாரினால் காப்பற்றப்பட்டுள்ளனர்.
பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், அந்த வீதியூடான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பஸ்ஸரை பகுதியில் வீடொன்றின் மீது மண் மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் இருவர் காணாமல் போயுள்ளனர்.
பொலன்னறுவை மாவட்டத்தின் மனம்பிட்டிய பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக அந்த வீதியூடான போக்குவரத்து முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மண்சரிவுகள் பதிவாகியுள்ளதுடன், பல தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

அத்துடன், மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை, அநுராதபுரம் உள்ளிட்ட பல பகுதிகளின் பெரும்பாலான தாழ்நிலப் பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
மலையகத்தின் பல பகுதிகளிலுள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது. இதன்படி, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரிக்கும் பட்சத்தில், ஏனைய வான்கதவுகளும் திறக்கப்படும் என இடர் முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது,
இதன்படி, நுகாவெல ஆற்றங்கரை, மாவத்துரை, மகாவலி கங்கை, உலப்பனே, கம்பளை, பெரலிய, வெலியியல், கட்டுகஸ்தோட்டை, பொல்கொல்ல உள்ளிட்ட தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போர் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பட மூலாதாரம், DINESH VADIVEL
அதிகளவான மழை வீழ்ச்சி எங்கு பதிவானது?
பட மூலாதாரம், DINESH VADIVEL
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள றூகம பகுதியிலேயே அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதன்படி, றூகம பகுதியில் 300.1 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
நேற்றைய தினம் காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரையான 24 மணித்தியாலங்களிலேயே இந்த மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
பட மூலாதாரம், DMC SRI LANKA
தேர்வுகள் ஒத்திவைப்பு
இலங்கையின் பல்கலைக்கழக நுழைவு பரீட்சையான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக எதிர்வரும் மூன்று தினங்களுக்கு நடைபெறவுள்ள பரீட்சைகளை ஒத்திவைக்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, நவம்பர் 27 முதல் 29 வரையிலான தினங்களில் நடைபெறவிருந்த பரீட்சைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு ஒத்தி வைக்கப்படும் பரீட்சைகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 7, 8, 9 ஆகிய தேதிகளில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், நவம்பர் 29ஆம் தேதிக்குப் பின்னர் நடைபெறும் பரீட்சைகள் வழமை போன்று நடத்தப்படும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், PMD
ஜனாதிபதி அவசர சந்திப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகளைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவசர கூட்டமொன்றை நடத்தினார்.
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சீரற்ற வானிலையால் ஏற்பட்டுள்ள அவசரக்கால நிலைமை மற்றும் நிவாரண சேவைகள் குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.
அதோடு, மாவட்டங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளில் உடனடியாகத் தலையிடுமாறும், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு