படக்குறிப்பு, வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நிலையைக் காட்டும் இந்திய வானிலை ஆய்வு மைய இணையதள வரைபடம்.
திட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர் 02) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பேரழிவை ஏற்படுத்திவிட்டு தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரைக்கு இணையாக வடக்கு நோக்கி நகர்ந்த திட்வா புயல் மேலும் வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் கணிப்பின்படி, நேற்று (நவம்பர் 30) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த திட்வா புயல், இன்று (டிசம்பர் 1-ஆம் தேதி) நண்பகல் வேளையில் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கைப்படி “ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று அதிகாலை 5.30 மணி நிலவரப்படி, புதுச்சேரிக்கு வடகிழக்கே 150 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே 50 கி.மீ தொலைவிலும், கடலூருக்கு வடகிழக்கே 150 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது”.
“இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மையத்தின் மையப் பகுதியானது, வடதமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையிலிருந்து 40 கி.மீ தொலைவில் இருக்கிறது. இது வடதமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரைக்கும் தெற்கு ஆந்திர கடற்கரைக்கும் இணையாக வடக்கு நோக்கி நகர்ந்து, டிசம்பர் ஒன்றாம் தேதி நண்பகலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும். இது தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்தபட்சம் 30 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருக்கும்” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
இன்று (டிசம்பர் 1) திருவள்ளூர் மாவட்டத்தில் ஆங்காங்கே கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஆங்காங்கே இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
நேற்றிரவு 11.30 மணியிலான தகவலின்படி, வட தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பலத்த தரைக் காற்று மணிக்கு 55 முதல் 65 கி.மீ (இடையிடையே மணிக்கு 75 கி.மீ வேகத்திலும் வீசியிருக்கிறது) வேகத்தில் வீசிவந்துள்ளது. இதன் வேகம் குறைந்து டிசம்பர் ஒன்றாம் தேதி காலையில் மணிக்கு 45-55 கி.மீ வேகத்திலும், இடையிடையே மணிக்கு 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
தமிழ்நாட்டின் தெற்கு கடலோர மாவட்டங்களிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்திலும், இடையிடையே 70 கி.மீ வேகத்திலும் வீசியிருக்கிறது. இதன் வேகம் குறைந்து டிசம்பர் ஒன்றாம் தேதி காலையில் மணிக்கு 40-50 கி.மீ வேகத்திலும், இடையிடையே மணிக்கு 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்திலும், இடையிடையே 70 கி.மீ வேகத்திலும் வீசியிருக்கிறது. இதன் வேகம் குறைந்து டிசம்பர் ஒன்றாம் தேதி காலையில் மணிக்கு 45-55 கி.மீ வேகத்திலும், இடையிடையே மணிக்கு 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
டிசம்பர் ஒன்றாம் தேதி காலை வரை கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்றும் அதன்பின் நிலைமையில் முன்னேற்றம் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதனால் டிசம்பர் ஒன்றாம் தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
புயல் எச்சரிக்கைக் கூண்டு
சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கைக்கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.