பல் துலக்குவது எப்படி என்பது நமக்கு நன்றாகத் தெரியும் என்றே நாம் நம்புகிறோம் – தினசரி காலையிலும் இரவிலும் பல் துலக்குவது, தண்ணீரால் வாயை நன்கு கொப்பளிப்பது, தேவைப்பட்டால் புதினா சுவையுடைய மவுத்வாஷ் பயன்படுத்துவது.
இருப்பினும், கவனமாக பல் துலக்கும் பழக்கத்தைக் கொண்டவர்கள் கூட சில தவறுகளைச் செய்கிறார்கள், அது அவர்கள் மேற்கொள்ளும் நல்ல வேலையையும் சிதைத்துவிடக்கூடும்.
பிரிட்டனில் பெரியவர்களில் பாதி பேருக்கு ஏதேனும் ஒரு கட்டத்தில் ஈறு தொடர்பான நோய் இருக்கும் என்றும், ஈறுகளில் ரத்தப்போக்கு ஏற்படுவது அதற்கான ஆரம்ப அறிகுறி என்றும் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த டாக்டர் பிரவீன் சர்மா கூறுகிறார்.
“உங்கள் ஈறுகளில் ரத்தப்போக்கு அல்லது வீக்கம் இருந்தால், அது நீங்கள் நன்றாக பல் துலக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை அறிகுறி” என அவர் கூறுகிறார்.
குறிப்பிட்ட இடைவெளியில் பல் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது பற்களை சோதித்துப் பார்ப்பது மட்டுமல்லாமல், வேறு எதுபோன்ற விஷயங்கள் பற்களின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்? தற்போது நம்மில் பலர் தவறாகப் புரிந்துகொண்டிருக்கும் சில விஷயங்களை நாம் மாற்றினால் நம்முடைய பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.
இவை குறித்து, மருத்துவர் பிரவீன் சர்மா, பிபிசியின் What’s Up Docs பாட்காஸ்ட் தொகுப்பாளர்கள் டாக்டர் சாண்ட் மற்றும் டாக்டர் கிறிஸ் வான் டுல்லெக்கென் மூவரும் உரையாடியதன் முக்கிய அம்சங்களை தெரிந்துக் கொள்வோம்.
பட மூலாதாரம், Getty Images
1. தினசரி இரு முறை பல் துலக்குவது கட்டாயமா?
ஆரோக்கியமான பற்களுக்கான முக்கிய விஷயங்களில் இது முதல் இடத்தைப் பிடிக்கிறது. பொதுவாக நாள்தோறும் காலை, மாலை என இரு முறை பல் துலக்குவதை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஆனால் இது பற்றி கூறும் மருத்துவர் சர்மா, உண்மையில் பல் ஆரோக்கியத்திற்கான முக்கிய அம்சம் எவ்வளவு முறை பல் துலக்குகிறோம் என்பது அல்ல, பல்லை எப்படி துலக்குகிறோம் என்ற தரம் தான் முக்கியம் என்கிறார்.
“உங்களுக்கு நேரம் கிடைத்தால், நாளொன்றுக்கு இரண்டு முறை பல் துலக்கலாம்,” என்று அவர் கூறுகிறார். “ஆனால், இரண்டு முறை விரைவாகச் செய்வதை விட, அதை நன்றாக ஒரே முறை செய்வது நல்லது.”
நாளொன்றுக்கு ஒரேயொரு முறை பல் துலக்குபவராக இருந்தால், மாலையில் பல் துலக்குவதையும், ஃப்ளோசிங் (பற்களுக்கு இடையில் உள்ள இடைவெளிகளை சுத்தம் செய்யப் பயன்படும் இழைத்தன்மையுள்ள தண்டு) செய்வதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அவர் பரிந்துரைக்கிறார்.
நிச்சயமாக, யாரும் ஃப்ளோசிங் செய்ய விரும்புவதில்லை. பல் இடை தூரிகைகளைப் (interdental brushes) பயன்படுத்துவது, குறிப்பாக ரப்பர் தூரிகைகளைப் பயன்படுத்துவது எளிதாகவும் வலியைக் குறைக்கவும் உதவும் என்று சர்மா கூறுகிறார்.
நமது பற்களில் உட்புறம், வெளிப்புறம் மற்றும் கடிக்கும் இடம் என மூன்று மேற்பரப்புகள் உள்ளன, நாம் இந்த மூன்றையும் துலக்க வேண்டும்.
பற்களை துலக்கும்போது, அதிக அழுத்தம் கொடுக்காமல், மூன்று மேற்பரப்புகளிலும், பற்தூரிகையை வட்ட வடிவில் பயன்படுத்தி பல் துலக்க வேண்டும் என்று மருத்துவர் சர்மா அறிவுறுத்துகிறார். அதிலும் குறிப்பாக பல்லுக்கும் ஈறுக்கும் இடையிலான சந்திப்பில் கவனம் செலுத்த வேண்டும் ஏனெனில் அங்குதான் ஈறு நோய் ஏற்படலாம் என்றும் அவர் கூறுகிறார்.
“பற்களில் கிளிப் (bristles) போட்டிருந்தால், கவனமாக இருப்பது முக்கியம்” என்றும், பல் துலக்கும் போது அதிலேயே கவனம் குவிந்திருக்க வேண்டும் என்று மருத்துவர் சாண்ட் கூறுகிறார்.
2. காலை உணவுக்கு முன் பல் துலக்குங்கள், பிறகு அல்ல
பலர் உணவு உண்ட உடனேயே பல் துலக்குகிறார்கள், ஆனால் அது உங்கள் எனாமலுக்கு நல்லதல்ல.
“காலை உணவுக்கு முன் பல் துலக்குவது நல்லது,” என்று சொல்லும் மருத்துவர் சர்மா, “அமிலத்தன்மை உள்ள பொருட்களை சாப்பிட்ட பிறகு பல்துலக்க விரும்ப மாட்டீர்கள்” என்று சொல்கிறார்.
“சாப்பிடுவதற்கும் பல் துலக்குவதற்கும் இடையில் சிறிது இடைவெளி விட வேண்டும்,” ஏனென்றால், உணவுகள் மற்றும் பானங்களிலிருந்து வரும் அமிலங்கள், குறிப்பாக பழச்சாறு அல்லது காபி, பல்லின் எனாமலை (enamel) மென்மையாக்கிவிடும். எனவே உணவு உண்ட பிறகு உடனே பல் துலக்குவது பற்சிற்பியை தேய்த்துவிடும்.
சாப்பிட்ட பிறகு, வாயில் இருக்கும் அமிலத்தை அகற்ற வாயை தண்ணீரால் கொப்பளிப்பது ஓரளவு பயன் தரும். உணவு உண்ட பிறகு பல் துலக்கினால், உணவிற்கும் பல் துலக்குவதற்கும் இடையில் குறைந்தது 30 நிமிடங்கள் இடைவெளி இருக்கவேண்டும் என மருத்துவர் கிறிஸ் பரிந்துரைக்கிறார்.
பட மூலாதாரம், Getty Images
3. பல் துலக்கிய பிறகு வாய் கொப்பளிக்க வேண்டாம்
ஒவ்வொரு முறை பல் துலக்கிய பிறகும், வாயிலிருக்கும் எச்சிலை துப்புவது, கழுவுவது மற்றும் வாயைக் கொப்பளிப்பது போன்ற செயல்களைச் செய்து கொண்டிருந்தால், அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
“பல் துலக்கியதும் வாயில் உள்ள எச்சிலை துப்பலாம், ஆனால் வாயைக் கழுவக்கூடாது” என்று மருத்துவர் சர்மா அறிவுறுத்துகிறார். பல் துலக்கிய பின் வாயைக் கழுவினால், வாயில் மீதமுள்ள பற்பசையில் உள்ள செறிவூட்டப்பட்ட ஃப்ளோரைடைக் கழுவிவிடும்.
அதாவது, அதிகப்படியான பற்பசையைத் துப்பிவிட்டு, உங்கள் பற்களைப் பாதுகாக்க மெல்லிய ஃப்ளோரைடு அடுக்கை விட்டுவிடுங்கள்.
4. விலை உயர்ந்த பற்பசைகள் அனைத்துமே சிறப்பானவை அல்ல
பற்களை வெண்மையாக்கும், கரி மற்றும் எனாமலை மேம்படுத்தும் பற்பசைகள் சந்தையில் அதிகம் கிடைக்கும் நிலையில், விலையுயர்ந்த பொருட்கள் ஆரோக்கியமானவை என்று நமக்குத் தோன்றலாம்.
ஆனால் மருத்துவர் சர்மாவின் கூற்றுப்படி, நீங்கள் எந்த பிராண்டைத் தேர்வு செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, அதில் முக்கியமாக இருக்க வேண்டிய மூலப்பொருள் இருந்தால் மட்டுமே அது பற்களுக்கு நல்லது.
“உங்கள் பற்பசையில் ஃப்ளூரைடு இருக்க வேண்டும். அது இல்லாத எதுவும் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது,” என அவர் கூறுகிறார். மலிவான அல்லது சலுகை விலையில் கிடைத்தாலும், அதில் ஃப்ளூரைடு இருந்தால் அவற்றை தாராளமாக வாங்கலாம் என்று மருத்துவர் கிறிஸ் பரிந்துரைக்கிறார்.
ஃப்ளூரைடு எனாமலை பாதுகாக்க உதவுகிறது மற்றும் பற்சிதைவைத் தடுக்கிறது, எனவே அதுதான் நமது பற்பசையில் முக்கியமான பொருளாக இருக்க வேண்டும்.