சென்னை: தினசரி பால் கொள்முதலை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மேலாளர்களுக்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவுறுத்தினார்
அனைத்து மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் உள்ள பொது மேலாளர்கள் மற்றும் இணையத்தில் உள்ள அனைத்து துறைத் தலைவர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை நந்தனம் ஆவின் இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதில், பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமை வகித்தார். கூட்டத்தில், ஆவின் பொது மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் வாரியாக, அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
கூட்டத்தில், பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது:
உற்பத்தியாளர்கள் ஊக்குவிப்பு: ஆவின் நிறுவனம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. மேலாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க வேண்டும்.தினசரி பால் கொள்முதலை அதிகரிக்கவும், ஒன்றியங்களில் தற்போதுள்ள தினசரி பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனையை ரூ.1.50 கோடியாக உயர்த்தவும் வேண்டும்.
கோடைகாலத்தில் ஐஸ்கிரீம், தயிர், மோர், லஸ்ஸி ஆகிய பால் உபபொருட்களின் விற்பனையை உயர்த்த வேண்டும். இதுதவிர, நெய் விற்பனையையும் அதிகரிக்க வேண்டும். ஒன்றியங்கள் லாபத்தில் இயங்க பொது மேலாளர்கள் அர்பணிப்புடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கருணை அடிப்படையிலான பணம்: தமிழக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் – ஆவின் நிறுவனத்தில் பணிபுரிந்த காலத்தில் காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, முதுநிலை தொழிற்சாலை உதவியாளர் பதவிக்கான பணி நியமன ஆணை 4 நபர்களுக்கு பால்வளத்துறை அமைச்சர் வழங்கினார்.
கூட்டத்தில், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசுச் செயலர் ந.சுப்பையன், பால்வளத்துறை ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஆ.அண்ணாதுரை, நிர்வாக இயக்குநர் க.பொற்கொடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.