படக்குறிப்பு, “ஸ்னோபோர்டிங் செதில் புழு” என்பது திமிங்கல வீழ்ச்சியில் நிபுணத்துவம் பெற்ற ஒரு புழுவாகும். இது திமிங்கலத்தின் சடலத்தை மூடியிருக்கும் வெள்ளை நிற பாக்டீரியா படலத்தில் தடங்களை விட்டுச் செல்கிறது.கட்டுரை தகவல்
திமிங்கிலங்கள் கடலின் கனரக சரக்கு வாகனங்களைப் போன்றவை. இறைச்சி, கொழுப்பு, எலும்புகள் போன்ற 150 டன் வரையிலான உணவுப் பொருட்களை, கடலின் மேற்பரப்பில் இருந்து ஆழமான பகுதிகள் வரை நீண்ட தூரங்களுக்கு அவற்றால் சுமந்து செல்ல முடியும். அவற்றின் பிரமாண்டமான உடல்களே ஒரு முழுமையான உணவாதாரமாகத் திகழ்கின்றன.
திமிங்கிலங்கள் வழக்கமாக கடலின் வெகு தொலைவில், பெரும்பாலும் இடம்பெயரும்போது அவை கடந்து செல்லும் நீண்ட பாதைகளிலேயே உயிரிழப்பதாக கலிஃபோர்னியாவின் சான் டியாகோவில் அமைந்துள்ள ‘ஸ்கிரிப்ஸ் கடல்சார் ஆய்வு நிறுவனத்தின்’ கடல் அடித்தள முதுகெலும்பற்ற உயிரினங்களுக்கான காப்பாளர் கிரெக் ரவுஸ் விளக்குகிறார்.
ஒரு திமிங்கிலம் உயிரிழக்கும்போது, அதன் உடல் முதலில் கடலின் மேற்பரப்பில் மிதக்கக்கூடும். அதன் உடலுக்குள் வாயுக்கள் தேங்கி, பலூன் போல உப்பிப் பெருகுவதாலேயே இவ்வாறு நிகழ்கிறது.
சிறிது நேரத்திற்குப் பிறகு, அந்த உடல் மெதுவாகக் கடலுக்குள் மூழ்கத் தொடங்குகிறது. அது கடலின் பல்வேறு அடுக்குகளைக் கடந்து செல்கிறது. மேற்புறத்தில் உள்ள பிரகாசமான சூரிய ஒளி மண்டலம், மங்கலான அந்தி ஒளி மண்டலம், பின்னர் முற்றிலும் இருண்ட மண்டலம் எனப் பயணித்து, இறுதியில் முழுமையான இருள் சூழ்ந்த ஆழ்கடல் தரையைச் சென்றடைகிறது. அதுவே அதன் இறுதி ஓய்விடமாக அமைகிறது.
தனது இறப்புக்குப் பின்னரும்கூட, திமிங்கிலம் தொடர்ந்து உயிரினங்களுக்கு வாழ்வளிக்கிறது. அதன் பிரமாண்டமான உடல், பல கடல்வாழ் உயிரினங்களுக்கு ஒரு மிகப்பெரிய உணவுத் தீவு போல மாறுகிறது. பொதுவாக, ஆழ்கடலில் கிடைக்கும் உணவு, கடலின் மேல் அடுக்குகளில் இருந்து மெதுவாகக் கீழே விழும் “கடல் பனி” எனப்படும் மிகச்சிறிய துகள்களின் வடிவிலேயே அமைகின்றன.
ஆனால், ஒரு திமிங்கிலத்தின் உடல் கடல் அடித்தளத்தைச் சென்றடையும்போது, அது அந்தச் சிறிய துகள்களைவிட மிக அதிகமான மதிப்பைக் கொண்டதாகிறது. ஆழ்கடல் தரையை ஒரே நேரத்தில் வந்தடையும் “மிகப்பெரிய கரிமப்பொருள் உள்ளீடு” இதுவே என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
ஒரேயொரு திமிங்கிலத்தால், பல ஆயிரம் ஆண்டுகளின் “கடல் பனி” மூலம் கிடைக்கும் உணவுக்கு இணையான உணவை வழங்க முடியும். இதன் காரணமாக, அதன் உடல் ஆழ்கடல் உயிரினங்களைக் கொண்ட ஒரு முழுமையான சூழல் அமைப்பிற்கே பல தசாப்தங்களுக்குத் துணையாக நின்று உணவளிக்க வல்லதாகத் திகழ்கிறது.
பட மூலாதாரம், Alex Dawson
படக்குறிப்பு, பொதுவாகத் திமிங்கிலங்கள் ஆழ்கடலிலேயே இறக்கின்றன; ஆனால், கிரீன்லாந்து கடற்கரைக்கு அப்பால், சுமார் 20 ‘மிங்கே’ திமிங்கிலங்களின் ஆழமற்ற ஒரு கல்லறை அமைந்துள்ளது
சடலத்தை சாப்பிட வரும் ஆழ்கடல் மீன்கள்
ஆழ்கடலில் இறந்த திமிங்கிலத்தை முதலில் அடையும் உயிரினங்கள் “ஆழ்கடல் பிணந்தின்னி சமூகம்” என்று அழைக்கப்படுகின்றன. பிரிட்டனின் லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் ஆழ்கடல் சூழலியலாளராகப் பணியாற்றும் ஏட்ரியன் குளோவர் இதை விளக்குகிறார்.
இந்தக் குழுவில், ஹேக்மீன்கள், ஸ்லீப்பர் சுறாக்கள் போன்ற முதுகெலும்புள்ள விலங்குகளும் இறால்களைப் போன்ற சிறிய ஓட்டுடலிகளான ஆம்பிபாட்கள் போன்ற பல சிறிய பிணந்தின்னிகளும் அடங்கும் என்று அவர் கூறுகிறார். இந்த உயிரினங்கள் இறந்த திமிங்கிலத்தின் மென்மையான சதையை விரைவாக உண்ணத் தொடங்கி, அதன் எலும்புகளை மெதுவாக வெளிப்படுத்துகின்றன. இந்தக் கட்டம் “நகரும் பிணந்தின்னி நிலை” என்று அழைக்கப்படுகிறது. இது பல ஆண்டுகள் வரை தொடரலாம்.
ஹேக்மீன்கள் மிகவும் அசாதாரணமான விலங்குகள். மண்டை ஓடு இருந்தும் முதுகெலும்பு இல்லாததாக அறியப்பட்ட ஒரே உயிரினம் இதுதான். அவை ஒரு தனித்துவமான முறையில் சாப்பிடுகின்றன. அவை, இறந்த விலங்குகளுக்குள் தங்கள் தலையைச் செலுத்தி, உடலை உள்ளிருந்து வெளியே என்ற ரீதியில் உண்ணுகின்றன.
பட மூலாதாரம், Alamy
படக்குறிப்பு, ஹேக்மீன்கள் என்பவை மண்டையோட்டைப் பெற்றிருக்கும் முதுகெலும்பில்லாத ஒரே உயிரினமாகும்
ஹேக்மீன்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு தனித்துவமான வழியைக் கொண்டுள்ளன. தாக்கப்படும்போது அவை பிசுபிசுப்பான, வழுவழுப்பான திரவத்தை வெளியிடுகின்றன. இந்த திரவம் வேட்டையாடும் விலங்குகளுக்கு மூச்சுத் திணறலையோ அல்லது எரிச்சலையோ ஏற்படுத்தி, அவற்றைப் பின்வாங்குபடி செய்யும் அல்லது மூச்சுத்திணறச் செய்து கொல்லக்கூடும்.
மற்றொரு ஆழ்கடல் விலங்கு எலிவால் போன்ற தோற்றமுடைய ராட்டெயில் மீன். இது ஒரு மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது மற்றும் 4,000 மீட்டர் வரையிலான ஆழத்தில் வாழக்கூடியது. இத்தகைய ஆழத்தில் சூரிய ஒளி சென்றடையாது. எனவே உயிரி ஒளிர்வு எனப்படும் தங்கள் சொந்த ஒளியை உருவாக்கும் உயிரினங்களிடம் இருந்து மட்டுமே ஒளி கிடைக்கிறது. எலிவால் மீனுக்குப் பெரிய நீல நிறக் கண்கள் உள்ளன. அவை இந்த ஒளியின் மிகச்சிறிய கீற்றுகளைக்கூட கண்டறியும் திறன் கொண்டவை. இந்தத் திறன் அதன் இரையைக் கண்டறிய உதவுகிறது.
எலிவால் மீனுக்கு அதன் தாடைக்குக் கீழே மீசை போன்ற அமைப்புகளும் உள்ளன. அவை மீசைமுட்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை கடலடிச் சேற்றில் ஏற்படும் அசைவுகளை உணர உதவுகின்றன. அங்கு ஓட்டுடலிகள் அல்லது புழுக்கள் போன்ற சிறிய உயிரினங்கள் மறைந்திருக்கக்கூடும். கூடுதலாக, இதற்கு வலுவான மோப்ப சக்தி உள்ளது. இது கடலின் இருண்ட ஆழத்தில்கூட திமிங்கிலத்தின் சடலம் போன்ற இறந்த விலங்குகளை கண்டறிய உதவுகிறது.
பட மூலாதாரம், Alamy
படக்குறிப்பு, இந்த குளோப்ஹெட் விப்டெய்ல் (Globehead whiptail) என்பது ஆழ்கடலில் பிணந்தின்னும் ஒரு வகை எலிவால் மீன் இனமாகும்
சந்தர்ப்பவாத உயிரினங்கள்
பெரிய பிணந்தின்னி உயிரினங்கள் பெரும்பாலும் சதையை உண்டு முடித்து, எலும்புகள் மட்டுமே எஞ்சியிருக்கும்போது, சிறிய உயிரினங்கள் வரத் தொடங்குகின்றன. இந்தக் கட்டத்தில், “எலும்புண்ணிப் புழுக்கள்” என்று அழைக்கப்படும் ஓசிடாக்ஸ் புழுக்கள் அதிக எண்ணிக்கையில் வருவதாக கிரெக் ரவுஸ் கூறுகிறார்.
ஓசிடாக்ஸ் என்பது ஒரு வகை பாலிசீட் புழுவாகும். இந்தப் புழுக்கள் முட்களைக் கொண்ட பிரிஸில் புழுக்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. கடலடியில் உள்ள இறந்த திமிங்கிலத்தின் சடலத்தைச் சுற்றி, அவை பெரும் எண்ணிக்கையில், சில நேரங்களில் ஆயிரக்கணக்கில், கூடுகின்றன. “வளமூட்டும் வாய்ப்பு நிலை” என்று அழைக்கப்படும் இந்தக் கட்டத்தில், சில இனங்கள் மிகவும் தனித்துவமானவையாக இருப்பதால், அவை இதுவரை திமிங்கிலங்களின் சடலங்களில் மட்டுமே வாழ்வதாகக் கண்டறியப்பட்டுள்ளன.
ஓசிடாக்ஸ் மியூகோஃப்ளோரிஸ் என்பது ஒரு சிறப்பு வகையாகும். இது பெரும்பாலும் “எலும்புண்ணும் சளி மலர் போன்ற புழு (bone-eating snot-flower)” என்று அழைக்கப்படுகிறது. இது முதன்முதலில் 2005இல் ஒரு திமிங்கில சடலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் புழுக்கள் மிகவும் அசாதாரணமான முறையில் சாப்பிடுகின்றன. அவை எலும்புகளை உடைப்பதற்காக எலும்புகளின் மீது அமிலத்தைச் செலுத்துகின்றன. இதை, “அவை தங்கள் குடலை எலும்புக்குள் செலுத்தி அதை நேரடியாக உறிஞ்சுவது போல் இருக்கிறது, மிகவும் விசித்திரமானது,” என்று ஏட்ரியன் குளோவர் விளக்குகிறார்.
பட மூலாதாரம், Adrian Glover
படக்குறிப்பு, ‘எலும்புண்ணும் சளி மலர் போன்ற புழுக்கள்’, பாக்டீரியாக்கள் நிறைந்த தங்கள் வேர்களைத் திமிங்கலத்தின் எலும்பினுள் செலுத்துகின்றன; அதே நேரம், அவற்றின் இறகு போன்ற கொத்துகள் திறந்த நீரிலிருந்து ஆக்சிஜனை உள்ளிழுக்கின்றன
சுமார் பத்து ஆண்டுகளில், இந்தப் புழுக்களின் ஒரு முழு இனமும் ஒரேயொரு திமிங்கில எலும்புக்கூட்டில் வளர்ந்து, வாழ்ந்து, இறக்கக்கூடும். கிட்டத்தட்ட எல்லா எலும்புகளும் உண்ணப்பட்ட பிறகு, அவை இறப்பதற்கு சற்று முன்பு, புழுக்கள் சிறிய லார்வாக்களை வெளியிடுகின்றன. இந்த லார்வாக்கள் கடல் நீரோட்டங்களில் மிதந்து, மற்றொரு திமிங்கிலத்தின் சடலத்தைக் கண்டுபிடித்து அதன் மீது குடியேறி, இந்த வாழ்வியல் சுழற்சியை மீண்டும் தொடங்கும் நம்பிக்கையில் பயணிக்கின்றன.
“அவை எலும்பிலுள்ள கால்சியத்தை கரைத்து, அதன் உள்ளிருக்கும் கொலாஜெனை அடைகின்றன” என்று கிரெக் ரவுஸ் விளக்குகிறார்.
அதாவது, அவை எலும்பின் கடினமான பகுதியை அகற்றி, அதை மென்மையாகவும் பஞ்சு போன்றதாகவும் ஆக்குகின்றன. இதன் காரணமாக, நண்டுகள், பிணந்தின்னி விலங்குகள் போன்ற பிற உயிரினங்கள் எலும்புகளை எளிதாகக் கிழித்துவிடுகின்றன.
திமிங்கிலம் தொடர்ந்து சிதைவடையும்போது ஊட்டச்சத்துகள் சுற்றியுள்ள கடற்பரப்பில் பரவுகின்றன. இது இன்னும் பல உயிரினங்களை ஈர்க்கிறது. பல்லாயிரக்கணக்கான புழுக்கள், மெல்லுடலிகள், ஓட்டுடலிகள், இன்னும் எஞ்சியிருக்கும் கொழுப்பு அல்லது சதையின் சிறிய துண்டுகளை உண்ண வருகின்றன. அவை உணவைத் தேடுவதற்காக கடலடி சேற்றையும் தோண்டுகின்றன.
அங்கு தோன்றக்கூடிய உயிரினங்களில் ஒன்று ஜப்பானிய சிலந்தி நண்டு. இது 100 ஆண்டுகள் வரை வாழக்கூடியது என நம்பப்படுகிறது. மேலும் இது உலகின் மிகப்பெரிய நண்டு இனமாகும். இதன் உடல் 30செ.மீ வரை, அதாவது 12 அங்குலம் வரை வளரக்கூடியது. ஆனால் இதன் நீண்ட கால்கள், ஒரு நகத்தில் இருந்து மற்றொரு நகம் வரை 3.8மீட்டர், அதாவது 12 அடி நீளம் வரை விரியக்கூடியவை. இது ஏறக்குறைய ஒரு சிறிய காரின் நீளத்திற்குச் சமமானது.
பட மூலாதாரம், Alamy
படக்குறிப்பு, சிலந்தி நண்டுகள் இனப்பெருக்கம் செய்வதற்கும் ஓடு உரிப்பதற்கும், ஆழ்கடலில் இருந்து ஆழம் குறைந்த நீர்ப்பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கில் இடம்பெயர்கின்றன
திமிங்கில வீழ்ச்சிப் பாதையில் நடக்கும் பயணம்
இந்த ஆழ்கடல் உயிரினங்கள் எலும்புகளை உண்டு செரிக்கும் அதே நேரத்தில், மற்றொரு சிறப்பு வகை உயிரினங்களும் அங்கு வந்து சேர்கின்றன.
இந்த உயிரினங்கள் மிக நீண்ட காலத்திற்கு, சில நேரங்களில் 50 ஆண்டுகள் வரை, தொடர்ந்து உணவளிக்க முடியும். இந்த நிலை “சல்போஃபிலிக் நிலை” என்று அழைக்கப்படுகிறது, அதாவது கந்தகத்தை விரும்பும் நிலை.
இந்த நிலையில், பாக்டீரியாக்கள் திமிங்கிலத்தின் எலும்புகளைத் தொடர்ந்து சிதைக்கின்றன. அவை அவ்வாறு செய்யும்போது, ஹைட்ரஜன் சல்பைட் எனப்படும் ஒரு வாயு வெளியிடப்படுகிறது. இந்த வாயு, வேதிச்சேர்க்கை உயிரினங்கள் எனப்படும் சில தனித்துவமான உயிரினங்களுக்கு உணவாகிறது.
இந்த உயிர்கள் வேதித் தற்சார்பு ஊட்ட உயிரிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. தாவரங்களைப் போலன்றி, ஆற்றலை உருவாக்க அவற்றுக்கு சூரிய ஒளி தேவையில்லை. தாவரங்கள் ஒளிச்சேர்க்கை எனப்படும் ஒரு செயல்முறையில் சூரிய ஒளியையும் கரிம வாயுவையும் பயன்படுத்துகின்றன. ஆனால் வேதித் தற்சார்பு ஊட்ட உயிரிகள் வேதி வினைகளைப் பயன்படுத்தித் தங்கள் ஆற்றலை உருவாக்குகின்றன. இந்தச் செயல்முறை வேதிச்சேர்க்கை என்று அழைக்கப்படுகிறது.
இந்த நுண்ணிய உயிரினங்கள் அல்லது நுண்ணுயிரிகள், பெரும்பாலும் முதுகெலும்பு இல்லாத மற்ற சிறிய கடல் விலங்குகளுடன் நெருக்கமாக வாழ்கின்றன. இது ஒருங்குவாழ்வு உறவு என்று அழைக்கப்படுகிறது. இந்த உறவில், நுண்ணுயிரிகள் தங்கள் ஓம்புயிரி விலங்குகளுக்குத் தேவையான ஏறக்குறைய அனைத்து உணவையும் ஊட்டச்சத்துகளையும் வழங்குகின்றன.
“இந்த அசாதாரணமான சூழல்களுக்கு ஏற்ப, உயிரினங்கள் இந்தக் குறிப்பிடத்தக்க, விசித்திரமான, வியக்கத்தக்க தகவமைப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் திறன், எங்களைத் தொடர்ந்து ஆச்சரியப்படுத்துகிறது,” என்று ஏட்ரியன் குளோவர் கூறுகிறார்.
பட மூலாதாரம், Phillipe Crassous/ Science Photo Library
படக்குறிப்பு, இந்த வேதி ஒத்திசைவு ஆழ்கடல் புழு பொதுவாக வெப்ப நீரூற்றுகளில் வாழ்கிறது
அதாவது, உயிரினங்கள் இத்தகைய தீவிரமான மற்றும் அசாதாரணமான இடங்களுக்கு எவ்வாறு தங்களைத் தகவமைத்துக் கொள்கின்றன என்பது குறித்து விஞ்ஞானிகள் இன்னும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
வேதித் தற்சார்பு ஊட்ட உயிரிகள், சில சிறப்பு வாய்ந்த ஆழ்கடல் சூழல்களில் மட்டுமே காணப்படுகின்றன. இவற்றில் வெப்ப நீரூற்றுகள், குளிர்க் கசிவுகள் மரக்கட்டைகள் விழுதல் மற்றும் திமிங்கில வீழ்ச்சி ஆகியவை அடங்கும். திமிங்கில வீழ்ச்சி “படிக்கட்டுகள்” போலச் செயல்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதாவது, பொதுவாக உயிரினங்கள் மிகவும் அரிதாகக் காணப்படும் ஆழ்கடலின் தரைப்பகுதியில், இந்தத் தனித்துவமான உயிரினங்கள் நகர்ந்து பரவுவதற்கு அவை உதவுகின்றன.
ஒரு திமிங்கிலம் உயிருடன் இருக்கையில், அது பல வழிகளில் கடலுக்கு உதவுகிறது. அது ஊட்டச்சத்துகளைப் பரப்பி, கரிமத்தைக் கடலின் ஆழத்திற்குக் கொண்டு செல்கிறது. இது கடல்வாழ் உயிரினங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், பூமியின் காலநிலையைக் கட்டுப்படுத்தவும்கூட உதவுகிறது.
அதேபோல, திமிங்கிலம் இறந்த பிறகும்கூட, தொடர்ந்து உயிர்களை ஆதரிக்கிறது. இறந்த ஒரு திமிங்கிலம், பல்லாயிரக்கணக்கான கடல் உயிர்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் உயிர் வாழ்வதற்கான வாய்ப்புகளை வழங்க முடியும். இவ்வாறு, பூமிக்கு அதன் இறுதிப் பங்களிப்பு என்பது ஆழ்கடலில் முற்றிலும் புதிய ஒரு சூழலியல் அமைப்பை உருவாக்குகிறது.