சென்னை: “தமிழகம் எப்போதுமே டெல்லிக்கு அவுட் ஆப் கன்ட்ரோல் என முதல்வர் பேசியிருக்கிறார். திமுகவின் அவுட் ஆஃப் கன்ட்ரோல் செயல்பாடால்தான் அமலாக்கத்துறை சோதனை இங்கு நடைபெறுகிறது,” என்று திருச்சியில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் டெல்டா மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஏப்.19) நடைபெற்றது. இதில் தமாகா தலைவர் ஜி.கே வாசன் கலந்து கொண்டு தேர்தல் பணிகளில் ஈடுபடுவது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணி, வெற்றிக்கூட்டணி என்பதால் இருட்டிலே நடப்பவர்கள் பயத்தில் சத்தமாக பாடிக் கொண்டே நடப்பது போல் முதல்வரும், மற்ற அமைச்சர்களும் மத்திய அரசை பற்றி குறை கூறி வருகிறார்கள்.
வெளிப்படைத் தன்மை இல்லாத அரசு திமுக அரசு. அவர்களுடைய மடியிலேயே கனம் இருப்பதால், தோல்வி பயத்தை மனதில் வைத்துக்கொண்டு இரு மொழிக் கொள்கை, தொகுதி சீரமைப்பு, மாநில சுயாட்சி என மக்களை திசை திருப்பி வருகின்றனர். இன்னும் ஒரு சட்டமன்ற தேர்தலில் திமுகவின் நாடகத்தை மக்கள் நம்ப தயாராக இல்லை. திமுகவின் ஆட்சியும் அதிகார துஷ்பிரயோகமும் தோல்வியை நோக்கி தமிழகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது .
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினரை செயல்பட விடாமல் ஆளுங்கட்சி செயல்படுவது ஜனநாயகத்திற்கு எதிரானது. தமாகா தற்போது கூட்டணியில் மிக முக்கிய கட்சியாக செயல்பட்டு கொண்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து இயக்கப் பணி, மக்கள் பணி என கட்சியை பலப்படுத்திக் கொண்டிருக்கிறோம். எங்களது பலத்தினை பொறுத்து கூட்டணியுடன் பேசி, சீட்டுகளின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.
அதிமுக- பாஜக கூட்டணியில் வரும் காலங்களில் அதிகப்படியான கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது. இந்தக் கூட்டணி முதல் கூட்டணியாகவும், தமிழகத்தில் வெற்றிக் கூட்டணியாகவும் மக்களை சந்திக்கும் . திமுகவிற்கு தேர்தல் ஜுரம் கடந்த வாரத்திலிருந்து துவங்கிவிட்டது. ஒரு மனிதனுக்கு ஜுரம் அதிகமாகிவிட்டால் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசுவது போல திமுகவினர் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
திமுக இந்த தேர்தலில் வெற்றிப் பெற எத்தகைய தேர்தல் உத்திகளை உபயோகித்தாலும் வாக்காளர்கள் அவர்களை வெளியேற்ற தீர்மானித்து விட்டனர் என்பதில் மாற்று கருத்து இல்லை. திராவிட மாடல் ஆட்சி என்பது ஒரு அமைச்சரின் அநாகரிகமான பேச்சுக்கு மக்கள் தலைக்குனிய கூடிய மாடலாக உள்ளது. அந்த அமைச்சரை இன்னும் ராஜினாமா செய்வதற்கான சூழ்நிலையை முதல்வர் ஏற்படுத்தவில்லை. இது தமிழக மகளிருக்கான அவமானம், அவமரியாதை.
கூட்டணி குறித்து பாஜக- அதிமுக இறுதி முடிவு எடுக்கும். தேர்தலுக்கு இன்னும் பத்து மாதக் காலம் உள்ளது. இன்னும் சில மாதங்களில் கூட்டணி வலுப்பெறும்; முழுவடிவம் பெறும் .
தமிழகம் எப்போதுமே டெல்லிக்கு அவுட் ஆப் கன்ட்ரோல் என முதல்வர் பேசியிருக்கிறார். திமுகவின் அவுட் ஆஃப் கன்ட்ரோல் செயல்பாடால்தான் அமலாக்கத்துறை சோதனை இங்கு நடைபெறுகிறது. மடியில் கனம் இருப்பவர்களுக்கு வழியிலே பயம்தான் வரும்.
ஆளுகின்ற கட்சியின் கூட்டணி கட்சிகளும், ஆளும் கட்சியும் தமிழக மக்களை மதித்தால், வெளி மாநிலங்களில் தமிழகத்துக்கு தலைக்குனிவு ஏற்படக்கூடாது என நினைத்தால் ஆபாசமாக பேசிய அமைச்சரை தட்டிக் கேட்க வேண்டும். ராஜினாமா செய்ய வைக்கக்கூடிய துணிவு கூட்டணி கட்சிகளுக்கு இருக்க வேண்டும் . வரும் 2026-ம் ஆண்டு தமாகா தற்போது அங்கம் வகிக்கும் வெற்றி கூட்டணி ஆட்சியை அமைக்கும்” என்றார்.
மேலும், திமுக தான் எனது முதல் எதிரி என்று தவெக தலைவர் விஜய் கூறியது குறித்த கேள்விக்கு?, “அவர் முதலில் களத்துக்கு வரவேண்டும். மக்களை சந்திக்க வேண்டும் மக்கள்தான் எஜமானர்கள். மக்கள் முடிவுதான் இறுதி முடிவு” என்றார்.