ஈரோடு: “நூற்றாண்டு விழா கண்ட கட்சி காங்கிரஸ் கட்சி. அந்தக் கட்சியில் விசுவாசமாக உள்ளவர்களுக்கு இடமில்லை. ஆனால், திமுகவுக்கு யார் ஜால்ரா போடுகிறாறோர் அவர்தான் காங்கிரஸ் கட்சிக்கு தலைமை தாங்குவார்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட அவல்பூந்துறையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ எனும் பெயரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியது: ”ஸ்டாலின் ஆட்சி பொறுப்பு ஏற்று 4 ஆண்டுகள் முடிந்து 5 ஆண்டு நடைபெற்று வரும் நிலையில் மொடக்குறிச்சி தொகுதிக்கு எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை. தேர்தல் சமயத்தில் திமுக 525 வாக்குறுதிகளை அளித்தது. அதில் சுமார் 10 சதவீத வாக்குறுதிகள் கூட நிறைவேற்றப்படவில்லை. ஆனால், 98 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக ஸ்டாலின் பொய் பேசி வருகிறார்.
100 நாள் வேலை திட்டம் 150 நாளாக உயர்த்துவதாக தெரிவித்தனர். ஆனால், உயர்த்தவில்லை. சம்பளம் உயர்த்துவதாக தெரிவித்தனர். ஆனால் உயர்த்தவில்லை. ஏற்கெனவே பணி செய்த அந்த நாட்களுக்கு முழுமையாக சம்பளம் வழங்க முடியாத அவல நிலை உள்ளது. அதிமுக மேற்கொண்ட முயற்சியால் மத்திய அரசு 2,999 கோடி ரூபாய் ஒதுக்கியது. அதனை பெற்றுத் தந்த கட்சி அதிமுக. ஆட்சி அதிகாரத்தில் திமுக உள்ளது. ஆனால், ஆட்சி அதிகாரத்தில் அதிமுக இல்லாவிட்டாலும் மக்கள் பணி செய்யும்.
திமுக பொறுப்பேற்றவுடன் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு சென்றுவிட்டது. குறிப்பாக உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த இந்த ஆட்சி எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. அதிமுக ஆட்சியில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கி விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தினோம்.
தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதுகுறித்து அன்றாடம் அதிகம் செய்தி வெளியாகி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த அதிமுக எச்சரிக்கை விடுத்தும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும் ஊழல் நீக்கமற நிறைந்து உள்ளது. ஊழலின் ஊற்றுக்கண் திமுக. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் திமுக அரசாங்கம். டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்தது அமலாக்கத் துறை சோதனையில் தெரியவந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க முதல்வர் ஸ்டாலின் வேண்டும் என்றே திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்.
பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததால் முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது. எங்கள் கட்சி யாருடன் வேண்டுமானலும் கூட்டணி வைப்போம். நீங்கள் ஏன் பதறுகிறீர்கள். அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் அதிமுக பெரும்பான்மையாக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்.
திமுக கூட்டணியில் நிறைய கட்சிகள் உள்ளதாக பேசுகின்றனர். ஆனால் ஓட்டுப்போடுவது யார். கூட்டணி கட்சிகள் ஓட்டுப்போடாது. மக்கள் தான் ஓட்டு போடுவார்கள். அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். அதனால் அதிமுக ஆட்சிக்கு வரும்.
காங்கிரஸ் கட்சிக்கு, மாநில தலைவர் பதவி வழங்க வேறு யாரும் கிடைக்கவில்லை. நூற்றாண்டு விழா கண்ட காங்கிரஸ் கட்சி, அந்த கட்சியில் பல கட்சிக்கு சென்று வந்தவர் தலைவராக்கியுள்ளனர். அந்தக் கட்சியில் விசுவாசமாக உள்ளவர்களுக்கு இடமில்லை. ஆனால், திமுகவுக்கு யார் ஜால்ரா போடுகிறாறோர் அவர் தான் காங்கிரஸ் கட்சிக்கு தலைமை பதவி வகிக்கின்றனர். ஆகவே காங்கிரஸ் கட்சி தலைவரே மக்கள் தான் எஜமானர்கள். அவர்கள் நம்புகிறார்கள். அதனால் அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி.
தமிழகம் முழுவதும் சுமார் 6 ஆயிரம் ஏரிகள் அதிமுக ஆட்சியில் ரூ.1,200 கோடி மதிப்பில் தூர் அள்ளப்பட்டது. இத்திட்டம் விவசாயிகளின் வயிற்றில் பால் வார்த்த திட்டமாகும். குடி மராமத்து திட்டம் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்தால் குடிமராமத்து திட்டம் நிறைவேற்றப்படும். விவசாயிகள் ஆன்லைன் முறையில் கூட்டுறவு கடன் பெறும் ஒரு திட்டத்தை முதல்வர் தர்மபுரியில் தொடங்கி வைத்தார். அதன்பின் தமிழகத்தில் 4,500 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் ஆன்லைன் வசதி செயல்படுத்தப்படவில்லை.
அதிமுகவில் தான் ஜனநாயகம் உள்ளது. திமுக குடும்ப கட்சி. வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் 2026 தேர்தல். கருணாநிதி குடும்பம் என்ன அரச குடும்பமா. தமிழகம் அவர்களுக்கு தான் பட்டா போட்டு வைத்துள்ளது. அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட பொதுச்செயலாளராகவோ, முதல்வராகவோ கூட வர முடியும். திமுகவில் வர முடியுமா. அப்படி யாராவது பேசினால் கட்டம் கட்டி விடுவார்கள்” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட வில்லரசம்பட்டியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏக்கள் கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணி உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.