நாமக்கல்: “திமுக ஆட்சிக்கு வர ராஜாஜியும் அவரின் சுதந்திரா கட்சியும் தான் காரணமே தவிர பெரியார் காரணமில்லை” என பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் பேசியுள்ளார்.
நாமக்கலில் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் பதவியேற்பு விழா நடைபெற்றது. கட்சியின் மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் அவ்விழாவில் பங்கேற்றுப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய நிதிநிலை அறிக்கை எதிர்கால வளர்ச்சியை நோக்கி தயாரிக்கப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை. இதனை நாட்டின் மீது அக்கறை கொண்டவர்கள் அனைவரும் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பட்ஜெட்டில் தமிழ்நாடு என்று பெயரை கூடச் சொல்லவில்லை என தமிழக முதல்வர் அறிக்கை வெளியிடுகிறார்.
இதை அறிக்கையாக நான் பார்க்கவில்லை. வரவிருக்கும் தேர்தலுக்கு கட்சியின் தேர்தல் அறிக்கையாக பார்க்கிறேன். கடந்த தேர்தல் அறிக்கையில் சொன்னதை செய்ய முடியவில்லை என்றால் மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை. மத்திய அரசு புறக்கணித்துவிட்டது என சொல்வதற்காக முன்கூட்டியே தயார் செய்துள்ள அறிக்கையாக பார்க்கிறேன்.
பெரியார் எங்கள் தலைவர்களுக்கு எல்லாம் தலைவர் என முதல்வர் சொல்கிறார். அப்படியிருக்க கடந்த 1967-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வரக் கூடாது என பெரியார் ஏன் சொன்னார். ஆட்சிப் பொறுப்புக்கு திமுக வந்தால் தமிழகம் நாசமாக போய்விடும் என்றார்.அப்போது திமுக ஆட்சிக்கு வருவதற்கு காரணம் ராஜாஜி. ராஜாஜி ஆரம்பித்த சுதந்திரா கட்சி தான் காரணம். பெரியார் காரணம் இல்லை.
இந்த பூமி தேசியத்தையும், தெய்வீதகத்தையும் அடிப்படையாகக் கொண்ட பூமி. தேசியத்தையும், தெய்வீகத்தையும் திராவிடம் என்ற போர்வை போட்டு மறைக்கப் பார்க்கிறார்கள். எனவே தமிழக முதல்வர் எடுக்கும் ஆயுதம் 2026-ம் ஆண்டு தேர்தலில் பலிக்காது.திமுகவுக்கு எதிராக உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எந்தவித கருத்து வேறுபாடு இல்லாமல் ஒன்றிணைய வேண்டும்.
இந்த அரசாங்கம் தவறான அரசாங்கம். இதை வழிநடத்தும் தலைவர்கள் தவறான தலைவர்கள். எனவே இந்த அரசை தூக்கி எறிய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு திமுகவுக்கு எதிராக உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவராக சரவணன் பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும், பாமக நாமக்கல் முன்னாள் நகர செயலாளர் சூரிய பிரகாஷ் தலைமையிலானோர் பாஜகவில் இணைந்தனர். கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டார்