மதுரை: திமுக எதிர்க்கட்சியாக இருப்பதுதான் தமிழகத்தின் நலனுக்கே நல்லது என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் மாநிலத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
மதுரையில் இன்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் தென் மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு தென் மண்டலத் தலைவர் ஒ.மாணிக்கவாசகம் தலைமை வகித்தார்.
மூத்த தலைவர் மதுரைவீரன், முல்லைப்பெரியாறு பாசன விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் எல்.ஆதிமூலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இளைஞரணி தலைவர் அருண் வரவேற்றார். இக்கூட்டத்தில் மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: திமுக அரசு பொறுப்பேற்று 5 ஆண்டுகள் நிறைவு செய்யவுள்ளது. தமிழகம் முழுவதும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி கிடையாது என கொள்கை முடிவு எடுத்து திமுக அரசு அறிவித்தது. ஆனால் தமிழக அரசின் சுற்றுச்சூழல்துறை ராமநாதபுரத்தில் ஒஎன்சிஜிக்கு ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி அளித்துள்ளது.
இதற்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக அரசுக்கே தெரியாமல் சுற்றுச்சூழல்துறை அனுமதி அளித்துள்ளதால் திரும்பப் பெறுவதற்கு திட்டமிட்டுள்ளோம், அந்த அனுமதியை ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இப்படி விவசாயிகளை வஞ்சிக்கும் அரசாக திமுக அரசு உள்ளது.
அதிமுக ஆட்சிக்காலம் வரை முல்லைப்பெரியாறு அணையில் 142 அடியில் தண்ணீர் தேக்கி அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. ரூல்கர்வ் முறையை அனுமதிக்க முடியாது என்றனர். திமுக ஆட்சிக்கு பின்பு ஓராண்டுகூட 142 அடி கொள்ளளவை நீரை தேக்கிக்கொள்ள கேரளா அரசு அனுமதிக்கவில்லை. திமுக அரசு ரூல்கர்வ் முறையை அனுமதித்து தண்ணீரை திறந்துவிடுவதால் 5 மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் உச்ச நீதிமன்றம் மூலம் பெற்ற உரிமையை திமுக அரசு பறிகொடுத்துவிட்டது. திமுக அரசு 4 ஆண்டுகாலம் நீர்ப்பாசனத்துறைக்கு நிதி ஒதுக்காமல் திட்டமிட்டு புறக்கணிக்கிறது. இந்தியாவில் எந்த மாநிலமும் கொண்டுவராத நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திமுக அரசு கொண்டுவந்து விவசாயிகளின் வாழ்வுரிமையை பறிக்கிறது.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமான சட்டமாகியுள்ளது. அச்சட்டப்படி பள்ளிக்கரணையில் வனத்துறைக்கு சொந்தமான நிலம் வகைப்பாடு மாற்றி தனியாருக்கு தாரை வார்த்துள்ளனர். தரிசு நிலங்களை கையகப்படுத்தி சிப்காட் அமைப்பதற்கு பதிலாக விளைநிலங்களை அழித்து சிப்காட் திட்டத்தை திமுக அரசு கொண்டு வருகிறது.
இதுபோன்ற விவசாயிகளுக்கு எதிரான சட்ட திட்டங்கள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் டிசம்பர் மாதம் ஒரு பிரச்சார பயணம் மேற்கொள்ளவுள்ளோம். திமுக அரசு விவசாயிகள் விரோத சட்ட, திட்டங்களை மக்களிடம் அம்பலப்படுத்தவுள்ளோம். தமிழக அரசு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப்பெறவில்லை என்றால் திமுக ஆட்சிக்கு எதிராக மாறுவோம். விவசாயிகள் நடத்தும் பயணம் அரசுக்கு எதிரான போராட்டமே தவிர, எந்தக் கட்சிக்கும் எதிரான போராட்டமல்ல.
தமிழக முதல்வருக்கு தவறான தகவல் சொல்கின்றனர். எனக்கு முதல்வரைப்பற்றி முழுமையாகத் தெரியும் அவர் யாரையும் தவறு செய்ய அனுமதிக்கமாட்டார். என்னை பொறுத்தவரை அவர் எதிர்க்கட்சி் தலைவராக இருந்தபோது விசாயிகளுக்கு பாதுகாப்பு இருந்தது. அவர் முதல்வரானதற்குப் பின்புதான் விவசாயிகள் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே திமுக எதிர்க்கட்சியாக இருப்பதுதான் தமிழகத்தின் நலனுக்கே நல்லது.
தவெக தலைவர் விஜய் நெருக்கடியான சூழலிலிருந்து மீண்டு, காலம் கடந்து விவசாயிகள் பிரச்சினைகள் பற்றிப் பேசியதை வரவேற்கிறோம். விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களை ஆதரிப்போம். கடந்த 10 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக போராடினோம். அதனை தனதாக்கிக் கொண்டதால்தான் திமுக கடந்த 2021-ல் ஆட்சிக்கு வந்தனர். திமுக எதிர்க்கட்சியாக இருப்பதுதான் விவசாயிகளுக்கும் தமிழக மக்களுக்கும் நன்மை தரும்.
ஆளும்கட்சியாக இருந்தால் கார்ப்பரேட்டுகளுக்குத்தான் நன்மை தரும் ஆட்சியாக இருக்கிறது. விவசாயிகளுக்கு எதிரான சட்ட திட்டங்கள் போடும் திமுக அரசுக்கு எதிராக விவசாயிகள் உள்ளனர். திமுக கூட்டணி கட்சிகளே தலைமை மீது நம்பிக்கையின்றி போராட்டக் களத்திற்கு வந்துள்ளனர்.
திமுகவுக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளதால், தமிழகத்தில் பிரதமருக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. விவசாயிகள் மண்ணை நம்பி வாழ்கின்றனர். திமுக ஆட்சிக்கலாத்தில் மண்ணுக்கே ஆபத்து வந்துள்ளது. அதனை தட்டிக்கேட்காமல் எப்படி இருக்க முடியும். திமுக மக்களை நம்பாமல் கூட்டணி கட்சிகளை நம்பியே உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.