மறைமலைநகர்: “திமுக எப்போதும் வணிகர்களுக்கு எதிரான கட்சி. திமுகவினருக்கு சாதகமாக உள்ள ஒரு சில வணிகர்களை பயன்படுத்தி வணிகர்களிடையே பிளவு ஏற்படுத்துவது திமுகவுக்கு கைவந்த கலை. வணிகர்களின் நலனை பாதுகாப்பதில் அதிமுக எப்போதும் உறுதுணையாக இருக்கும்,” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் 42-வது வணிகர் தினம் மற்றும் 7-வது மாநில மாநாடு மறைமலைநகர் பகுதியில் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அப்போது அவர் பேசியது: “எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வணிகர்கள் நலனில் அதிக அக்கறை கொண்டவர்கள். சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு என்று வந்தபோது மக்களவையில் அந்த மசோதாவை அதிமுக எதிர்த்தது. அதிமுக வணிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இரவு 10 மணிக்கு மேல் கடைகளைத் திறந்து வியாபாரம் நடத்த சிறப்பு உத்தரவை பிறப்பித்தது.
மக்களவையில் சில்லரை வணிகத்தில் எதிர்ப்பு தெரிவிக்காமல் விட்டிருந்தால் தமிழ்நாட்டில் உள்ள லட்சக்கணக்கான சிறு வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகி இருக்கும். இன்று வணிகர்களுக்கு தங்களை காவலாக காட்டிக் கொள்ளும் திமுக அன்று மத்திய காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில், சிறு வணிகத்தில் அந்நிய முதலீடு மசோதா, இரு அவைகளிலும் வாக்கெடுப்பு வந்தபோது அந்நிய முதலீட்டுக்கு ஆதரவு தெரிவித்தது திமுக. வணிகர்கள் ஒற்றுமையாக செயல்பட்டால் சிறு வணிகத்தில் கார்ப்பரேட் கம்பெனிகள் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.
முக்கியமாக, அந்நிய பன்னாட்டு நிறுவனங்கள் எந்த ரூபத்தில் தமிழகத்தில் வந்தாலும் அதை தடுப்பதற்கு அதிமுக உங்களுக்கு துணை நிற்கும். அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் சரக்குகள் மற்றும் சேவைகள் மீதான வரி குறைப்பு வரி விலக்கு தொடர்பாக, சரக்குகள் மற்றும் சேவைகள் மன்றத்தில் முன்வைக்கப்பட்டது. அதிமுக அரசு மேற்கொண்ட சீரிய முயற்சியின் விளைவாக 39 சரக்கு மற்றும் 11 சேவைகள் மீதான ஜிஎஸ்டி வரி விலக்கு வரி குறைப்பு அளிக்கப்பட்டது. கரோனா நோய் தொற்று காலத்தில் முழு அடைப்பின் போது வணிகர் நலன் காக்க வணிகர் நல வாரிய உறுப்பினர்களுக்கு ரூ.2000 வழங்கப்பட்டது.
மாநகராட்சி சார்பில் பொருட்கள் விற்பனை செய்ய தள்ளுவண்டிகள் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்ய தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான வணிகர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது. அக்காலகட்டத்தில் வணிகர்கள் முன்களப் பணியாளர்களாக அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியதை இப்போது நினைவுகூர்ந்து நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். வணிகருக்கு மட்டுமல்ல யாருக்குமே பாதுகாப்பு இல்லாத ஆட்சி, திமுக ஆட்சி. இந்த ஆட்சியில், வணிகர்கள் அவர்களது வணிக நிறுவனங்களில் அடிக்கடி தாக்கப்படுவதை ஊடகத்திலும் பத்திரிக்கையிலும் பார்க்கிறோம்.
இந்த தாக்குதல் சம்பவம் எதனால் ஏற்படுகிறது என்று பார்க்கும்போது கஞ்சா போதை கும்பலால் இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் நடக்கின்றன. மேலும், வியாபாரிகளிடமிருந்து ஆளும் கட்சியினரால் மாமுல் வசூலிக்கப்படுகிறது. பூட்டி இருக்கும் கடைகளில் இந்த ஆட்சியில் கொள்ளை போவது தொடர் கதையாக உள்ளது. சரியான காரணம் இன்றி உள்நோக்கத்துடன் அரசு அலுவலர்கள் வணிக நேரத்தில் தொடர்ந்து ஆய்வு என்ற பெயரில் வியாபாரிகளை துன்புறுத்துவது வேதனையாக இருக்கின்றது. இதை வன்மையாக கண்டிக்கிறேன்.
திமுக எப்போதும் வணிகர்களுக்கு எதிரான கட்சி . திமுகவினருக்கு சாதகமாக உள்ள ஒரு சில வணிகர்களை பயன்படுத்தி வணிகர்களிடையே பிளவு ஏற்படுத்துவது திமுகவுக்கு கைவந்த கலை. நாட்டின் பொருளாதாரத்திற்கான முதுகெலும்பு வணிகர்கள். உற்பத்தியாளருக்கும் வாங்குவதற்கும் இடையே அச்சாணியாக திகழ்வது நமது வணிகர்களின் நலனை பாதுகாப்பதில் அதிமுக எப்பொழுதும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் என அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. அதை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது. வணிகப் பெருமக்கள் தலையில் பழியை அரசு சுமத்துகிறது. விலை ஒரு பக்கம் ஏறினால் அதை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது. ஆனால், வியாபாரி மீது இந்த அரசு பழியை சுமத்துகின்றது. மிகச் சிறப்பாக எழுச்சியாக இந்த வணிக திருவிழா நடைபெறுவதற்கு உளப்பூர்வமாக வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன்” என்று அவர் பேசினார்.