கோவை: திமுக செயற்குழுவில் தங்கள் மீதான தவறுகளை மறைப்பதற்காக மத்திய அரசுக்கு எதிராக பொய் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
மக்கள் சேவை மையம் சார்பில் நடத்தப்படும் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கான பயிற்சி முகாம் கோவை ராம்நகரில் அமைந்துள்ள விஜய் பார்க் இன் ஓட்டல் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. மக்கள் சேவை மையத்தின் நிறுவனர் மற்றும் பாஜக தேசிய மகளிரணி தலைவர், கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ, வானதி சீனிவாசன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மக்கள் சேவை மையம் நடத்தி வரும் சுயஉதவிக்குழு மூலம் பல பெண்கள் லட்சாதிபதிகளாக மாறி வருகின்றனர்.
ட்ரோன் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை பெண்கள் குறிப்பாக கிராம பெண்களும் இயக்க வேண்டும். அரசு இதற்கு ஊக்குவிக்க வேண்டும். மத்திய அரசு ஏற்கெனவே இதுபோன்ற திட்டத்தை ஊக்குவித்து வருகிறது. பயிற்சி முகாம் மூலம் ஆயிரக்கணக்கான பெண்களின் கனவு நிறைவேற உதவி வருகிறோம்.
புயல் பாதிப்புக்கு நிவாரணம் வழங்கவில்லை, டங்ஸ்டன் சுரங்கத்திற்கு பாஜக ஆதரவு வழங்கியது என வழக்கம் போல் பொய் குற்றச்சாட்டுகளை கூறி திமுக-வினர் மக்களை ஏமாற்றி வருகின்றனர். கல்வித்துறையில் புதிய திட்டத்தை அமல்படுத்தும் முன் மத்திய அரசு மாநில அரசுகளிடம் கருத்து கேட்பது வழக்கம். தமிழக அரசு முதலில் ஒப்புதல் அளித்துவிட்டு அமல்படுத்தும் நிலை வரும் போது சுயலாபத்துக்காக ஏதேனும் காரணங்களை கூறி எதிர்க்கும் செயல் ஏற்புடையதல்ல.
மத்திய அரசின் காப்பீடு திட்டத்தை ஊக்குவிக்க வேண்டாம், விஸ்வகர்மா திட்டத்தை எதிர்ப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழில் கற்பிக்கலாம் என நீதிமன்றம் அறிவுறுத்திய பின்பும் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க அனுமதி மறுக்கிறது அரசு. தமிழகத்தின் வருங்கால தலைமுறையினருக்கு திமுக அரசு துரோகம் செய்கிறது.
சட்டம், ஒழுங்கு மிக மோசமாக சீர்குலைந்துள்ளது. காவல்துறையினரை பார்த்து குற்றவாளிக்கு பயம் இல்லை என்றால் குற்றச் சம்பவங்களை எவ்வாறு தடுக்க முடியும். திமுக செயற்குழுவில் தவறுகளை மறைப்பதற்காக மத்திய அரசுக்கு எதிராக பொய் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர். மக்கள் நம்ப மாட்டார்கள். சட்டப்பேரவை தேர்தலில் 200-க்கு பதில் 20 இடங்களில் வெற்றி மட்டுமே கொடுப்பார்கள்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.