• Sat. Apr 19th, 2025

24×7 Live News

Apdin News

திமுக செய்த வரலாற்றுப் பிழைகள் அதிமுக – பாஜக கூட்டணி மூலம் திருத்தி எழுதப்படும்: இபிஎஸ் | historical mistakes made by DMK will be rewritten by the AIADMK-BJP alliance – EPS

Byadmin

Apr 12, 2025


சென்னை: “தமிழக நலனுக்கான “குறைந்தபட்ச செயல் திட்டம்” இருக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அறிவித்திருந்தார். “என்னவா இருக்கும்?” என்று இரவு முழுக்க தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், காலையில் தனது மொத்த வரலாற்றுப் பிழைகளையும் வெற்று நாடகங்களையும் தொகுத்து அதனை அறிக்கையாக வெளியிட்டுவிட்டார்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், திமுக தலைவரும், திமுக அரசின் முதல்வருமான ஸ்டாலின், தினமும் என்ன பிரச்சினை வரப்போகிறது என்று தன் தூக்கம் தொலைந்துவிட்டதாக ஒருமுறை திமுக பொதுக்குழுவில் சொன்னார். நேற்று முன்தினம் அவருடைய அமைச்சர் பொன்முடியின் அருவருக்கத்தக்க ஆபாசப் பேச்சு அவர் தூக்கத்தை கெடுத்தது. இன்றோ, அஇஅதிமுக-வின் கூட்டணி அறிவிப்பு இடிபோல் வந்து அவருக்கு இறங்கியுள்ளது போலும். பீதியின் உச்சத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

திமுக செய்த வரலாற்றுப் பிழைகள் இந்த கூட்டணி மூலம் திருத்தி எழுதப்படும் என்று நேற்று நான் எனது எக்ஸ் தளப்பதிவு வாயிலாக தெரிவித்தேன். தமிழ்நாட்டு நலனுக்கான “குறைந்தபட்ச செயல் திட்டம்” இருக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அறிவித்திருந்தார்.“என்னவா இருக்கும்?” என்று இரவு முழுக்க தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், காலையில் தனது மொத்த வரலாற்றுப் பிழைகளையும் வெற்று நாடகங்களையும் தொகுத்து அதனை அறிக்கையாக வெளியிட்டுவிட்டார்.

மணிப்பூர் மாநிலப் பிரச்சினைகள் பற்றி உங்களுக்கு இருக்கும் அக்கறை, துளியாவது உங்களுக்கு வாக்களித்த தமிழக மக்கள், குறிப்பாக பெண்கள் மீது இருந்ததா? அவர்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்த உங்களுக்கு சட்டம் ஒழுங்கு பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது? NEET என்றால் என்ன? அதனை இந்திய நாட்டிற்கே அறிமுகப்படுத்தியது யார்? அதனை உச்சநீதிமன்றம் வரை வாதாடி நிலைபெறச் செய்தது எந்த கூட்டணி? இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு, பிறகு நீட் பற்றி பேசுங்கள்.

ஸ்டாலின், நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது. அதிமுக ஒருபோதும் தமிழ்நாட்டை, நம் மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காது. மாறாக, நமக்கான மாநில உரிமைகளை பெற்றுத் தரவே செய்யும். காவிரி உரிமையை பெங்களூரிலும், முல்லைப் பெரியாறு அணை உரிமையை திருவனந்தபுரத்திலும் அடகு வைத்த திமுகவின் தலைவர் அதைப் பற்றி கவலைப் பட வேண்டாம். தமிழ்நாடு விரோத திமுகவின் ஊழல் ஆட்சியை தோலுரித்து, மக்களின் பேராதரவோடு அதிமுக தலைமையிலான கூட்டணி 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாகை சூடும்.

ரெய்டுகளுக்கு பயந்து, “தொட்டுப் பார்- சீண்டிப் பார்” வீடியோ கூட வெளியிட முடியாத அளவிற்கு தொடை நடுங்கிக் கொண்டிருப்பது யார் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்,” என்று அவர் கூறியுள்ளார்



By admin