• Sun. Jan 19th, 2025

24×7 Live News

Apdin News

திமுக, நாதக உட்பட 55 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு: ஈரோடு கிழக்கில் ஜன.20-ல் சின்னம் ஒதுக்கீடு | nominations of 55 candidates including DMK, NDA accepted: Symbol allotment in Erode East on Jan 20

Byadmin

Jan 18, 2025


ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மனுக்கள் மீது நடைபெற்ற பரிசீலனையில், திமுக, நாம் தமிழர் கட்சி உட்பட 55 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 10-ம் தேதி தொடங்கி நேற்று வரை (ஜன.17) வரை நடைபெற்றது. இதன்படி விடுமுறை நீங்கலாக 10, 13, 17 ஆகிய மூன்று தேதிகளில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இறுதி நாளான நேற்று திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். மொத்தமாக 58 வேட்பாளர்கள் 65 வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இதில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 4 மனுக்கள், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 3 மனுக்கள் என கூடுதலாக வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது. இதற்காக ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷ், கிழக்கு தொகுதி பொது பார்வையாளர் அஜய் குமார் குப்தா ஆகியோர் தலைமையில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.

இதையொட்டி வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்திருந்தனர். வேட்பு மனுக்கள் பரிசீலனையில் திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட 55 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 3 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷ் தெரிவித்தார்.

தொடர்ந்து நாளை மறுநாள் (ஜன.20) வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல், சின்னத்துடன் ஒதுக்கீடு செய்யப்படும். ஒரே சின்னத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் கேட்டால் அவர்களுக்கு குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.



By admin